251. மாரிப்பித்தியார் மாரிப்பித்தியார் என்னும் இப் பெயர் மாற்பித்தியார் என்றும், மரற்பித்தியாரென்றும் காணப்படுகிறது. மாரிக்காலத்து மலரும் பித்திகத்தைப்பொற்புறத் தொடுத்துப் பாடிய சிறப்புக்குறித்து இவர்க்கு இப் பெயரெய்திற்றுப் போலும். அப் பாட்டுக்கிடைத்திலது. இனி மாற்பித்தியாரென்றே கொண்டு வேறு வேறு பொருள் கூறுவாருமுளர். புகழ்புரியும் புதல்வரையும் அறம்புரியும் சுற்றத்தாரையும் முடையனாய்ச் சிறப்புற வாழ்ந்த தலைமகனொருவன் காமஞ் சான்ற கடைக்கோட் காலையில் வீடுபேறு குறித்துத் தவமேற்கொண்டு காட்டில் உறைவானாயினான். அவன் பெயர் ஏடுகளில் சிதைந்துபோய்விட்டது. அவன் இல்வாழ்வில் இருந்த காலத்து அவனைப்பாடிச், சிறப்பித்தவாதலான், பித்தியார் துறவு நிலையில் சடைமுடித்துத் தவம் புரியும் அவனது தாபத நிலையை வியந்துநோக்கினார். அவன் அருவியில் நீராடிக் காட்டகத்து யானைகள் கொணரும் விறகு கொண்டு தீ வேட்பதும், அவன் முடியிலுள்ள சடைமுதுகிடத்தே கிடந்து புலர்வதும் கண்டார். கண்டார்க்கு அவனது இளமைக் காலத்து அழகிய இனிய தோற்றம் நினைவிற்கு வந்தது. அக்காலத்தே அவனைக் கண்ட மகளிர் அவன்பால் கொண்டகாதற் காமத்தால் தொடி நெகிழ்ந்து உடம்பு நனி சுருங்கி உயங்கியதும் அவன் உயங்காது. வியங்கியதும் நினைவிற்கு வந்தன. அவற்றை இந்த அழகிய பாட்டால் வெளிப்படுத்தியுள்ளார். | ஓவத் தன்ன விடனுடை வரைப்பிற் பாவை யன்ன குறுந்தொடி மகளிர் இழைநிலை நெகிழ்த்த மள்ளற் கண்டிகும் கழைக்க ணெடுவரை யருவி யாடிக் | 5 | கான யானை தந்த விறகிற் | | கடுந்தெற்ற செந்தீ வேட்டுப் புறந்தாழ் புரிசடை புலர்த்து வோனே. |
திணை: வாகை.: துறை: தாபத வாகை...மாரிப்பித்தியார்பாடியது.
உரை: ஓவத்தன்ன இடனுடை வரைப்பின் - ஓவியம் போலும் அழகினையுடைத்தாகிய இடமுடைய இல்லின்கண்; பாவை யன்ன குறுந்தொடி மகளிர் - கொல்லிப்பாவை போன்ற வடிவினையுடைய சிறிய வளையணிந்த மகளிருடைய; இழை நிலை நெகிழ்த்த மள்ளன் கண்டிகும் - அணிகலன்களை அவை நிற்கும்நிலையினின்றும் கழலும் வகை ஆதரஞ் செய்தவனைக் கண்டோம்; கழைக்கண் நெடுவரை அருவி யாடி - மூங்கிலிடத்தை யுடைய நெடிய மலையிடத்து அருவி நீரை யாடி; கான யானை தந்தவிறகின் - காட்டு யானை கொண்டுவரப்பட்ட விறகால்; கடுந்தெறல் செந்தீ வேட்டு - மிக்க வெம்மையையுடையசெந்தீயை வேட்டு; புறந்தாழ் புரிசடை புலர்த்துவோன் - முதுகின்கண்ணே தாழ்ந்த புரிந்த சடையைப் புலர்த்துவோன்; எ - று. |