பக்கம் எண் :

115

     

256. தனிமகள் புலம்பிய முதுபாலை

     இப்பாட்டைப் பாடிய ஆசிரியர் பாட்டுடைத்தலைவி பெயரும்
தெரிந்தில;அதனால்,  இப்  பாட்டின்கண் அமைந்த துறைநோக்கி,
“தனிமகள் புலம்பியமுதுபாலை” யெனப் பெயர் கொள்ளப் பட்டது.
தனிமகள் ஒருத்தி தன் காதற்கொழுநனுடன்  சுரத்திடை  வந்து
கொண்டிருக்கையில், கொழுநன் ஆண்டு உண்டாகிய போரின் கண்
விழுப்புண்பட்டு  உயிர்  கொடுத்துப்  புகழ் கொண்டான். அதனால்
தனிமையுற்றுக்  கொழு  கொம்பிழந்த கொடிபோல் வருந்தும் அவள், 
கலம்  செய்யும்  ஊர்க்குயவனை நோக்கி, “வேட்கோவே,சிறப்புண்டாகப் 
போரிடை  மாண்டாரை  ஈமத்தே தாழி கவித்து வைப்பது குறித்து
வேண்டும்  தாழியாகிய  கலத்தைச்  செய்பவனாதலின்,  நின்பால்
வேண்டுவதொன்றுண்டு.   இப்போது   என்   கொழுநனைக்  
கவித்தற்குத்தாழியொன்று  வேண்டியுளது;  நின்பால் இருப்பது
ஒருவரைக் கவித்தற்குரிய அகலமுடையது.  சகடத்தைக்  கொண்டேகும்
உருளை  (சக்கரம்)  யிலுள்ள ஆர்க்காலைப் பொருந்தியிருக்கும்
பல்லியொன்று, அவ்வார்க்காலை நீங்காமல் பற்றிக்கொண்டு
வருவதுபோலயானும்  என்  கொழுநனைத் தொடர்ந்து வந்துள்ளேன். 
என்னையும்   சேர்த்து   ஒருங்கே   கவிக்கக்கூடிய
அகலமுடையதாக என்பால் அருள்கூர்ந்து செய்வாயாக” என
வேண்டினாள்,அவ்வேண்டுகை இப்பாட்டின் பொருளாக
அமைந்துள்ளது.

 கலஞ்செய் கோவே கலஞ்செய் கோவே
அச்சுடைச் சாகாட் டாரம் பொருந்திய
சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
சுரம்பல வந்த வெமக்கு மருளி
5வியன்பல ரகன்பொழி லீமத் தாழி
 அகலி தாக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவோ.

   திணையும் துறையு மவை...........

     உரை:கலம் செய் கோவே கலம் செய் கோவே - கலம் வனையும்
வேட்கோவே கலம் வனையும் வேட்கோவே; அச்சுடைச் சாகாட்டு ஆரம்
பொருந்திய - சகடம் செலுத்தும் உருளின்கண் ஆரத்தைப் பொருந்தி வந்த;
சிறு வெண் பல்லிபோல - சிறியவெளிய பல்லி போல; தன்னொடு சுரம்பல
வந்த  எமக்கும் நெருநலை நாளால் பல சுரமும் தன்னோடு கழிந்து வந்த
எமக்கும்; அருளி அருள்பண்ணி; வியன் மலர் அகன் பொழில் ஈமத்தாழி
- யானும் அவனோடு கூடியிருக்கும்படி பெரியபரப்பினையுடைய அகலிய
பூமியிடத்துக் காட்டின்கண் முதுமக்காட்டாழியை; அகலிதாக வனைமோ
- இடமுடைத்தாக வனைவாயாக; நனைந்தலை மூதூர்க் கலம் செய்
கோவே - பெரியஇடத்தினையுயை பழைய வூரின்கண் கலம்
வனையும்வேட்கோவே; எ - று.