| எமக்கும் என்றது பன்மையும் தலைமையும் கருதாது மயங்கக் கூறிநின்றது. கோவே, மூதூர்க் கலம் செய் கோவே, கோவே, எமக்கும் அருளி அகலிதாக வனைக எனக் கூட்டுக. அடுக்குவிரைவின்கண் வந்தது. விளக்கம்: கலஞ் செய்யும் எனச் சிறப்பிக்கவே, கோ, வேட்கோவென்பதாயிற்று. ஆரம், ஆர்க்கால், அருள், தொடர்பு கருதாதுயாவர் மாட்டும் செய்யப்படும் அன்பு. வியன் பெருமையும் மலர்பரப்பையும் குறித்து நிற்றலின், பெரிய பரப்பு என்றார். பொழில், பூமி; வண் புகழ் மூவர் தன் பொழில் (தொல். செய். 78) என ஆசிரியர் கூறுவது காண்க. ஈமத்தாழி முதுமக்கள் தாழி. யாமும் எம் தலைவனோடே இறக்கவிருக்கின்றோமாதலால் எமக்கும் அவனோடே இடம் அமையத்தக்க அகலமுடைத்தாகப் பெரியதொரு தாழி செய்ய வேண்டுமேன வேண்டுதலின், எமக்கும் அருளி அகலிதாக வனைமோ என்றாள். எமக்கும் என்றது கூற்று நிகழ்த்துவோரிடத்துத் தலைமையும் பன்மையும் இல்லாமையால்,பன்மையும் தலைமையுங் கருதாது நின்றது என்றும், வழுவாயினும் மயங்கக் கூறுதலின் அமைக்க வென்பார், மயங்கக் கூறி நின்றது என்றும் உரைத்தார்.சாகாட்டாரம் பொருந்திய பல்லிபோலக் கணவனைப் பற்றித் தொடர்ந்துவந்தவள் எனக்கும் என அவனிற் பிரித்திசைக்கும் சொல்லை நெஞ்சாலும் நினையாளாதலின், எமக்கும் என்றாளெனினுமமையும்.அங்ஙனம் வனைதற்கு ஈமம் இடம்பெறாதெனத் தடை நிகழ்த்தாவண்ணம், வியன் மலரகன் பொழில் ஈமம் எனச் சிறப்பித்தாள்.அகலிதாக வனைதற்குரிய வாய்ப்பும் கலஞ்செய் வேட்கோவற் குண்டென்பது, நனந்தலை மூதூர் என்று சிறப்பித்ததனால் விளங்குகிறது. பற்றுக்கோள்விடாமைக்குப் பல்லி உவமமாயிற்று. --
257. உண்டாட்டு இரு தலைவர்கட்கிடையே எக்காரணத்தாலோ பகைமையுண்டாயிற்று. அதுவாயிலாக ஒரு திறத்தார் மற்றவருடைய ஆனிரைகளைக் கவர்ந்தனர். அதனை யறிந்தநிரையுடைய கரந்தையார் எதிர்நின்று போருடற்றினர். கவர்ந்துகொண்ட வெட்சியார் அக் கரந்தையாரை வென்று வெருட்டிவிட்டு ஆனிரைகளைத் தாம்கொண்டு சென்று தம் மூரிற்பிறர்க்கு வழங்கி இன்புற்றனர். கரந்தையாரை வென்ற வெற்றிகுறித்துத் தானைத் தலைவருடனே கள்ளுண்டு மகிழ்ந்தாடினர். அந்த உண்டாட்டிடையே தலைவனது பேராண்மையை எடுத்தோதும் ஒருவன், பகைவர் நிரை கொணர்ந்த வெட்சித்தலைவன், பகைவர்க்குத் துன்பம் செய்வதில் செருப்பிடையுற்ற பரற்கல் போல்வன்: திரண்ட காலும் அகன்ற மார்பும் நல்ல மீசையும் செவிமறைய வளர்ந்த தலை மயிரும், உயர்ந்த வில்லுமுடையன்; அவன் மிகவும் அளியன்; ஆராயுமிடத்து அவன் தன் ஊரைவிட்டு மிகுதியும் நீங்கியதில்லை; பகைவர்க் கஞ்சிக் காட்டை யரணாக அடைந்ததும் இல்லை; இன்று காலையில் பகைவருடைய நிரைகள் இருக்கும் இருப்பை யறிந்தான்; அவர் நிரையைக் கவர்தற்குரிய சூழ்ச்சியை மெல்ல எண்ணினான்; கரந்தையார் நிரையைக்காத்தற்குச் செய்த போரை மிக விரைவில் மாற்றி வென்றான் என வியந்தோதி இன்புறுகின்றான். அந்த இன்பப்பாட்டு இது: |