மிக்க வலியுடையார்க்கு வெகுளி மிகவிரைவில் உண்டாகாதென வறிக. பெருநற்கிள்ளியின் பெயருடையார் புதுக்கோட்டைப் பகுதியிலுள்ள வூர்களிற்காணப்படுதலால், (A. R. No.297 of 1914) இப் பாட்டு அவ்வூர்நிகழ்ச்சியாகக் கோடற்கு இடனாகிறது. இது மேலும் ஆராய்தற்குரியது. ---
259. கோடை பாடிய பெரும்பூதனார் கோடை யென்பது மலை; இப்போது அது கோடைக்கானல் எனவழங்குகிறது. இதனைச் சான்றோர் பலரும் வியந்துபாராட்டுமாறு பாடிய சிறப்பால் பெரும்பூதனார் கோடைபாடிய பெரும்பூதனார் என்று குறிக்கப்படுகின்றார். நாட்டில்மறவர் பகைவரது நிரை கவர்தலும், கவர்ந்த நிரையைமீட்டலுமாகிய செயல்களில் ஈடுபட்டுத் தங்கள் மறமாண்பை நிறுவிப்புகழ்பெறுந்துறையில் கருத்தூன்றி யிருந்தனர். அதனைப் பெரும்பூதனார் கண்டு மகிழ்ந்து வந்தார். ஒருகால் பகைவரூர்நிரைகளை மறவர் கவர்ந்தேகினர். அஃதறிந்து மானம்பொறாத நிரைக்குரிய மறவர் மீட்டற்குச் செல்ல விரைந்தனர். அவர்களுடைய தலைவன் நிரை மீட்கும் வேட்கைகொண்டு முன்னேசெல்லலுற்றான். அந்நிரை கவர்ந்தேகும் பகைவர்காட்டிடத்தே மறைந்திருந்து காவல் புரிந்தனர். ஆனிரைகள், தெய்வமருள் கொண்ட புலைமகளிர் தாவித் துள்ளிக் குதிப்பதுபோலத் தாவித் துள்ளிச் சென்று கொண்டிருந்தன. அந்நிரைகளைமீட்கச் செல்லும் மறவர் அவற்றின் நிரையும் காவல் புரியும்மறவரது மறமாண்பும் அறியாது செல்லுதல் கூடாது; நிலைமையை ஒருவாறறிந்து கொண்ட ஒரு சான்றோர், அம் மறவனைநோக்கிக் காட்டில் மறைந்திருந்து காவல்புரியும் பகைவர் களைக்கண்டு அவர் காவலைக் கட்டழித்தபின் னல்லது நிரைமீட்க அவரிடையே செல்வது நன்றன்று என அறிவுறுத்தினார். அவ்வறிவுரை இப்பாட்டு வடிவில் தரப்பட்டுள்ளது. | ஏறுடைப் பெருநிரை பெயர்தரப் பெயரா திலைபுதை பெருங்காட்டுத் தலைகரந் திருந்த வல்வின் மறவ ரொடுக்கங் காணாய் செல்லல் செல்லல் சிறக்கநின் னுள்ளம் | 5 | முருகுமெய்ப் பட்ட புலைத்தி போலத் | | தாவுபு தெறிக்கு மான்மேற் புடையிலங் கொள்வாட் புனைகழ லோயே. |
திணை: கரந்தை. துறை: செருமலைதல்; பிள்ளைப்பெயர்ச்சியுமாம்.
செருமலைதலாவது, வெட்சியாரைக் கண்ணுற்று வளைஇ, உட்குவரத் தாக்கி யுளர் செருப்புரிந்தன்று.
உரை: ஏறுடைப் பெருநிரை பெயர்தர - தாம் கொள்ளப் பட்ட ஏற்றையுடைய பெரிய ஆனிரை முன்னே போக; பெயராது மீட்கவருவாரைக் குறித்து அந்நிரையோடு தாம் போகாது; இலை புதை பெருங்காட்டு - தழையால் மூடிய பெரிய காட்டின்கண்; தலைகரந்திருந்த வல்வில் மறவர் |