| செல்வரைப் பழிப்பதிலர் என அவரது இயல்பு கூறுமாற்றால் உயர்த்துக்கூறினார். இனி, ஆசிரியர்ந்சிசினார்க்கினியர், ஈயென இரத்தலென்னும் புறப்பாட்டினுள், தெண்ணீர்... வேட்டோரே யென்றவழி, நின்செல்வம் கடல்போற் பெரிதேனும் பிறர்க்கு இனிதாய் நுகரப்படாதென வசையைச் செம்பொருளாகாமற் கூறியவாறு காண்க (தொல். செய். 126. உரை.) என்பது ஈண்டு நோக்கத்தக்கது. --- 205. கடியநெடுவேட்டுவன் வெட்டுவனெனப் பொதுப் பெயராற் கூறப்படினும், இத் தலைமகனது இயற்பெயர் நெடுவேட்டுவன் என்பதாம். கடியமென்பது நெடுவேட்டுவனது ஊர்; இது கோடைமலைக்கடியிலுள்ளது. இவ்வூர் பிற்காலத்தே நன்னியார் என்னும் சான்றோர் பிறந்து விளங்குதற்கு இடமாய் விளங்கிற்று. அச் சான்றோர் கடிய நன்னியார் எனப்படுவர். அவர் எழுதிய செய்யுளிலக்கணத்தைப் பேராசிரியரும் யாப்பருங்கலவிருத்தி யுடைகாரரும் மேற்கொள்ளுகின்றனர். (தொல். செய். 161; யாப். விரு. செய். 2) இவன் தன்னைத் துணைவேண்டியவர்க்குப் பெரும்புகலாகி, ஆதரவு நல்குபவன்; பகைத்துப் பொரக்கருதுவாரை அவர் வலியறுத்துக் கருத்தழிவிக்கும் காட்டாண்மையுடையவன். கொடைவண்மையால் இவன்பால் பரிசிலர் கட்கு மிக்க தொடர்புண்டு. அதனால், கடலுக்குச் சென்ற முகில், நீர் பெற்றன்றி வாராதவாறு போல, இந் நெடுவேட்டுவனைக் காணும் பரிசிலர் இவனது கொடை நலத்தைப்பெற்றன்றிப் பெயர்ந்து போகாரென்னும் பெருமை இவனுக்குப் பிறங்கியிருந்தது. கோடைமலை இவனுக்கு உரியது. இக்காலத்தே மதுரைநாட்டில் கோடைக்கானல் என்ற பெயரால் சிறப்புற்று விளங்கும் மலையே இக் கோடைமலை. கோடைக்காலத்தில் வேனில் வெம்மை பொறாது செல்லும் செல்வமாக்கட்கு இக் கோடைமலை இன்னும் பெருந்தட்பந்தந்து இன்புறுத்தி யிலங்குகிறது.
இக் கோடைமலைத் தொடராகிய பழனிமலைத் தொடரின் வடசார்க் குன்றாகியமுதிர மலைக்குரியகுமணனைப்பாடிச்சிறப்பெய்திய பெருந்தலைச்சாத்தனார், ஒருகால்இவனைக்காணச்சென்றார். பெருந்தலையென்பது சாத்தனாரது ஊர். அது கொங்குநாட்டில் உளது. இந் நெடுவேட்டுவனுடைய புகழ் சாத்தனார்க்கு இன்பந் தந்தது. இவனைப் பாடிவந்த பரிசிலர் களிறும் பொருளும் பெற்றுச் செல்லும் சிறப்பு இவர்க்குப் பேருவகையளித்தது. கடிய நெடுவேட்டுவன் எக்காரணத்தாலோ இச்சாத்தனார்க்கு வேண்டும் பரிசிலைத் தந்து விடைதராது நீட்டிப்பானாயினன். அவன் கருத்தறியாத சாத்தனார்க்கு வருத்த முண்டாயிற்று. வேட்டுவ, முடிவேந்தர்பாற் சென்றால் அவர்கள் கொடையில் விருப்பின்றி, அது வேண்டிவரும் பரிசிலர்க்கு நீட்டித்து நல்குவது இயல்பு. அதனையறிந்தே எம்போலும் பரிசிலர் அவர் விருப்பின்றி நல்குவதை விரும்புவதில்லை. நின்பால் வரும் பரிசிலர் அவர் விருப்பின்றி வந்குவதை விரும்புவதில்லை. நின்பால் வரும் பரிசிலர், கடற்குச் சென்ற முகில் நீரின்றிப் பெயர்ந்து செல்லாததுபோலப் பரிசிலின்றிப் போவது கண்டிலேன்; இன்று யான் பரிசிலின்றி வறிது செல்லுமாறு நீட்டித்தனை; யான் வருந்தும் மனத்தோடு செல்கின்றேனாயினும், நீ வருத்தமின்றி வாழ்வாயாக என்ற கருத்துப்பட இப் பாட்டைப் பாடினார். |