இவர் பாடிய பாட்டொன்று அகத்திலும் காணப்படுகிறது. இவர்க்குக் கடலன் என்ற பெயருடைய மகன் உண்டு. கடலனாரும் நல்லிசைச் சான்றோராவர். ஒருகால் ஒரு மறவன் தும்பை சூடிப் பகைவருடன் போர்செய்ய நேர்ந்து அழகிய குதிரையூர்ந்து சென்றான். அவனோடு வேறு பல குதிரை மறவரும் சென்றனர். போர் முடிந்த பின், சென்ற குதிரை வீரர்களின் குதிரைகள் திரும்ப வந்தன. அம்மறவனுடைய குதிரைமட்டில் வாராதாயிற்று. அதனால் அவன் மனையோள் மனவமைதி பெறாது கலக்கமுறலானாள். வாராமைக்குரிய காரணத்தைப் பலரையும் வினவினாள். அவளது நிலைகண்ட வெளியனார் மிக்க வியப்புற்றார். குதிரை இறந்தது கொல்லோ என அவள் வருந்தியது அவர் உள்ளத்தில் இப்பாட்டினை எழுவித்தது.
| மாவா ராதே மாவா ராதே எல்லார் மாவும் வந்தன வெம்மிற் புல்லுளைக் குடுமிப் புதல்வற் றந்த செல்வ னூரு மாவா ராதே | 5 | இருபேர் யாற்ற வொருபெருங் கூடல் | | விலங்கிடு பெருமரம் போல உலந்தன்று கொல்லவன் மலைந்த மாவே. |
திணை: தும்பை; துறை: குதிரைமறம். எருமைவெளியனார் பாடியது.
உரை: மாவாராது மாவாராது - குதிரை வாராதாயிற்று குதிரை வாராதாயிற்று; எல்லார் மாவும் வந்தன - ஏனைமறவர் எல்லாருடைய குதிரைகளும் வந்து சேர்ந்தன; எம்இல் புல்லுளைக் குடுமிப் புதல்வன் தந்த செல்வன் ஊரும் மா வாராது - எம் மனையின்கண் புல்லிய உளைபோலும் குடுமியையுடைய புதல்வனைப்பெற்ற செல்வனாகிய கொழுநன் ஊர்ந்து செல்லும் குதிரையே வாராதாயிற்று; இருபேர் யாற்ற ஒரு பெருங்கூடல் - இரண்டு பெரிய யாறுகள் கூடும் ஒரு பெரிய கூடற் பெருக்கை; விலங்கிடு பெருமரம்போல - குறுக்கிட்டு நின்று தடுக்கும் பெரிய மரம் அலைப்புண்டு வீழ்வது போல; அவன் மலைந்த மா உலந்தன்று கொல் - அவனைச் சுமந்து சென்று போருடற்றிய குதிரை பட்டு வீழ்ந்து போயிற்றுப் போலும்; எ - று.
மக்கட்பேறுடையாரைச் செல்வரெனச் சிறப்பித்துரைப்பது பண்டையோர் மரபு; செல்வக் கொண்கன் (ஐங்.104) எனப் பிறரும் கூறுதல் காண்க. இரண்டு பெரிய யாறுகள் கூடுமிடத்தே இடைநிற்கும் மரம். நீர்ப்பெருக்கால் வேரலைக்கப்பட்டு வீழ்தல் ஒருதலையாதலின், விலங்கிடு பெருமரம் போல என்றார். எத்துணைப் பெருமையுடையதாயினும் பயனின்றென்றதற்குப் பெருமரம் எனச்சிறப்பிக்கப்பட்டது. எல்லார் மாவும் வந்தன; செல்வனூரும் மாவாராது; ஆகலான் அவன் மலைந்த மா உலந்தன்று கொல்லென வினைமுடிவு செய்க. |