| தழையாகவும் கிடப்பாய்; காப்புடைப் புரிசைக்கு - காவலையுடைய எயிலிடத்தே நின்று; மாறு அழித்தலின் - கோடல்கருதி வருவாரையடர்த்து அவர்கள் மாறுபாட்டை யழிப்பதால்;ஊர்ப்புறம் கொடா நெடுந்தகை - நகர்ப்புறத்தைக் கைவிடாது காக்கும் நெடுந்தகையினுடைய பீடுகெழு சென்னிக்கிழமையும் நினது - பெருமை பொருந்திய தலையில் அணியப்படும் உரிமையும் நின்னுடையதாம்; எ - று.
துணர் - கொத்து. மறவராற் காக்கப்படுவதேயன்றி, அமைப்பாலும் பொறி முதலியனவுடைமையாலும் காப்பமைந்திருப்பது பற்றிக் காப்புடைப்புரிசை யென்றார். ஊர்ப்புறம் கொடாஅ நெடுந்தகை யென்றதற்கு,அடுத்தூர்ந்து பொரும் போரின்கண் புறங்கொடாத நெடுந்தகை யெனினுமமையும். நெடுந்தகை - நெடிய தகைமையினை யுடையோன். சென்னிக்கிழமை - சென்னியிற் சூடப்படும் உரிமை. மற்று, இசின் என்பன அசைநிலை. மாக்குரல் நொச்சி பனமரனுள்ளும் சிறந்த காதல்மரம் நீ, அல்குலும் கிடத்தி; நெடுந்தகை சென்னிக்கிழமையும். நினது என வினைமுடிவு செய்க.
விளக்கம்: முற்றிய அகத்தோன் வீழ்ந்த நொச்சி (தொல் புறத். 13) என்பதற்கு இதனைக் காட்டி, இது சூடின நொச்சியைப் புகழ்ந்தது என நச்சினார்க்கினியர் கூறுவர். நொச்சித்துணரை, மணிக்குரல் நொச்சி (நற். 293) எனப் பிறரும் கூறுதல் காண்க. பன் மரனுள்ளும் சிறந்த காதல் நன்மரம் நீ என்றது மேற்கோள்: மகளிரும் மைந்தரும் ஒப்ப விரும்புதலான் என்றது ஏது. இதனை வற்புறுத்தற்கு மகளிர் அல்குலுங் கிடத்தி யெனவும், நெடுந்தகை சென்னிக் கிழமையும் நினது எனவுங் கூறினார். தழையில் ஆம்பல் முதலிய பிறவற்றோடு விரவும் நொச்சி, நொச்சிப் போரில் தனித்துச் சூடப்படும் உரிமையுடைமையின் கிழமை என்றார்.
---
273. எருமை வெளியனார்
எருமை யென்பது ஓர் ஊர். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுங்செழியனோடு பொருத எழுவருள் எருமையூரன் என்பவன் ஒருவன். அவனை நக்கீரனார், நாரறி நறவின் எருமையூரன் (அகம். 36) என்று கூறுவர். மைசூர்நாட்டுக்குப் பண்டைநாளில் எருமைநாடு என்றும், மைசூர் எருமையூரென்றும் வழங்கின. அப்பகுதியிலுள்ள கல்வெட்டுக்களுள் கன்னட மொழியிலுள்ளவை எருமைநாடு (Eq. car. Vol. X Cu. 20) என்றும் தமிழ்க் கல்வெட்டுக்கள் எருமைநாடு (A. R. for 1907. Para. 1) என்றும் கூறுகின்றன. தகடூர் அதியமான்களில் எழினியென்பான் எருவாயில் என்னும் ஊரைக் கைப்பற்றிய போரில் எழினியின் படைமறவன் ஒருவன் போரில் வீழ்ந்து நடுகல் நிறுவப்பட்டான். அவனை எருமைய நக்கன் என்று கல்வெட்டு(A. R. No.211 of 1910) கூறுவதால், இந்நக்கன் எருமைநாட்டு எருமையூரினனாம். இந்த எருமையூரில் தோன்றிய இந்தச் சான்றோரது இயற்பெயர் வெளியன் என்பது. இந்நாட்டில் வெளியமென்றோ ரூருமுளது. |