| தொடுக்கப்பட்ட கண்ணியினையுமுடைய; பெருந்தகை மறவன் - பெருந்தகையாகிய மறவன்; மேல்வருங் களிற்றொடு வேல் துரந்து - தன்மேல் கொலைகுறித்து வந்த களிற்றின் நெற்றியிலே வேலைச் செலுத்திப் போக்கி; இனி - இப்பொழுது; தன்னும் துரக்குவன் போலும் -தன்னுயிரையும் செலுத்திப் பொருவான்போலும்; ஒன்னலர் எஃகுடை வலத்தர் மாவொடு பரத்தர - பகைவர் வேலை வலத்தில் ஏந்தினவராய்க் களிற்றுடனே பரந்து வரக்கண்டு; கையின் வாங்கி - அவர் எறிந்தவேல் தன் மெய்க்கண்ணதாக அதனைப் பிடுங்கி அவர் திரளை மடித்து; தழீஇ- அவர்தம் தலைவனைத் தோளுறத் தழுவி மொய்ம்பின் ஊக்கி - தன் மெய் வலியாற் கிளர்ந்து உயரத்தூக்கி நிலத்தில் மோதி; மெய்க்கொண்டனன் - உயிர் நீங்கிய அவனது உடலைப்பற்றிக்கொண்டு நிற்கின்றானாதலால்; எ - று.
விலங்கெனக் கருதித் தான் களிற்றின்மேற் செல்லாத பெருந்தகை யாதலின், அவனாற் கொல்லப்பட்ட களிற்றை, மேல்வருங் களி றென்றார். வாங்குதல், மடித்தல். கையின் வாங்கி யென்றதற்கு, கை வேலைக் களிற்றொடு போக்கினமையின், தன்மேல் வந்த மறவரைக் கையால் வளைத்து என்றுரைப்பினுமாம். சிறப்புப்பற்றித் தழுவப் பட்டவன் தானைத் தலைவனெனவுணர்க.மெய்வலி வாடாது மேன் மேல் ஊக்குதலால் உயரத் தூக்கி நிலத்தில் மோதுவது பயனாதல் பற்றி, மொய்ம்பின் ஊக்கி யென்றார். மெய்க்கொண்டு நிற்பது, வந்து மீட்போர் நும்மில் உள்ளீர் வம்மின் என்றழைப்பது போறலின், மெய்க் கொண்டனனே என்று அறிவிக்கின்றார். ஆண்டு தன்னுயிர் முடியுங்காறும் பொருவது குருதினமை. புலப்படுதலின், தன்னும் துரக்குமவன் போலும் என்றார்.
விளக்கம்: எருமை மறமாவது, வெயர்பொடிப்பச்சினங்கடை இப் பெயர்படைக்குப் பின்னின் றன்று (பு.வெ. மா. 7 :13) களிறு மனவுணர்வில்லாத விலங்காதலின், அது தம்மெல்வரினன்றித் தாம் அதன்மேற் செல்லுதல் மறச்சான்றோர் சால்புக்கு நாணுத் தருவ தொன்றென்பர்.வான்வணக்கி யன்ன வலிதரு நீள்தடக்கை, யானைக்கீ தென்கையி லெஃகமால் - தானும், விலங்கால் ஒருகைத்தால் வெல்கைநன் றென்னும், நலங்காணேன் நாணுத் தரும் எனத் தகடூர் யாத்திரை கூறுவது காண்க. தானை யானை (தொல். புறத். 17) என்ற சூத்திரத்து, படையறுத்துப் பாழிகொள்ளும் ஏமம் என்பதற்கு இப்பாட்டை யெடுத்துக் காட்டுப. |