275. ஒரூஉத்தனார்
எண்ணுப்பெயராகிய ஒருத்தன் என்பதனின் வேறுபடுத்தற்கு இவர் பெயர்ஒரூஉத்தனாரென நின்றது. இவர் பாடியதாகத் தொகை நூல்களுள் இவ்வொரு பாட்டே காணப்படுகிறது. போர்க்களத்தே பெரிய போரைச் செய்யும் மறவன் ஒருவன் தன் சோழன் பிறிதொரு புறத்தே பகைவர் வளைத்துக்கொள்ள அவர் நடுவே நின்று பொருவது கண்டான். உடனே, அவற்குத் துணைசெய்யக் கருதி நெடிய வேலைக் கையிலேந்திக்கொண்டு விரைந்து செல்லலுற்றான். அது கண்ட பகைவர் அவனைத் தடுத்தற்கு முயன்றனர்; அவன் தடைப்படாது சென்று தோழர்க்குத் துணையாயினான். அவன் செயலைக்கண்ட ஒரூஉத்தனார் இப்பாட்டின்கண் அதனை வைத்துப் பாடியுள்ளார்.
| கோட்டங் கண்ணியுங் கொடுந்திரை யாடையும் வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும் ஒத்தன்று மாதோ விவற்கே செற்றிய திணிநிலை யலறக் கூழை போழ்ந்துதன் | 5 | வடிமா ணெஃகங் கடிமுகத் தேந்தி | | ஓம்புமி னோம்புரி னிவணென வோம்பாது தொடர்கொள் யானையிற் குடர்கா றட்பக் கன்றமர் கறவை மான முன்சமத் தெதிர்ந்ததன் றோழற்கு வருமே. |
திணையும் துறையு மவை. ஒரூஉத்தனார் பாடியது.
உரை: கோட்டம் கண்ணியும் - வளையத்தொடுத்த கண்ணி சூடுதலும்; கொடுந்திரை யாடையும் - வளைந்து திரைந்த ஆடை யுடுத்தலும்; வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும் - வேந்தன் விரும்பியதுவே தானும் விரும்பிச் சொல்லி அவனை வளைத்தலும்; இவற்கு ஒத்தன்று - இவன்கண் பொருந்தியுள்ளன; செற்றிய திணிநிலை அலறக் கூழை போழ்ந்து - பகைவர் கறுவு கொண்டு சூழ்ந்த திணிநிலையிலுள்ள மறவர் அஞ்சியலறிச் சிதையுமாறு அவருடைய பின்னணிப்படையைப் பிளந்து கொண்டு; தன் வடிமாண் எஃகம் கடிமுகத் தேந்தி - தனது வடித்து மாட்சியுள்ள வேலைப் படைமுகம்நோக்க ஏந்தி; இவண் ஓம்புமின் ஓம்புமின் என - இவ்விடத்தேயே இவனைச்செல்லாத படி பரிகரியுங்கோள் பரிகரியுங்கோள் என ஏனைத் தானை வீரர் தம்மிற் கூறித் தடுக்கவும்; ஓம்பாது அவர் தடையைக்கடந்து; தொடர்கொள் யானையின்- சங்கிலியாகிய தளைபூண்டு செல்லும் - யானை போல; குடர்கால் தட்ப - கொலை யுண்டு வீழ்ந்த மறவர்களின் குடர் தன் காலைத் தளைக்கவும்; |