| கன்றமர்கறவை மான - கன்றைக் காதலிக்கும் கறவைப் பசுப்போல; முன் சமத்து எதிர்ந்த தன் தோழற்கு வரும் - முன்னணிப்போரில் பகைவரை நேர்பட்டு அவரால் வளைப்புண்டிருக்கும் தோழன்பால் வருவானாயினன்; எ - று.
கண்ணி முதலிய மூன்றனோடும் ஒத்தன் றென்றதைத் தனித் தனியே கூட்டுக. வளைத்தல் என்றதற்கேற்பச் சூடலும் உடுத்தலும் வருவிக்கப் பட்டன. கண்ணி சூடல் முதலிய மூன்றும் செயல்வகையால் மாண்புற வேண்டுதலின், ஒத்தன்று என்றார். திணிநிலை, இருதிறத்து வீரரும் செறிந்து போருடற்றும் களத்தின் நடுவிடம். வில்லும் வேலும் வாளும் ஏந்தி அணிநிலை பெற்றுக் காண்பார்க்கு அச்சமுண்டாக நிற்கும் படை வரிசையின் முன்னணி கடிமுகம்எனப்பட்டது. இனித் தான் செல்லும் திசை நோக்கி வேலின் இலைமுகத்தை யேந்திச் செல்கின்றான் எனினுமாம். கடிமுகம், வேலின் இலைமுகம். ஓம்பு மின் ஓம்புமின் இவண் என்றது, பகைவர் கூற்றினைக்கொண்டு கூறியது. தோழற்கு வருமாகலின், இவற்கே ஒத்தன்று எனக் கூட்டி வினை முடிவு செய்க.
விளக்கம்: தானையானை யென்ற சூத்திரத்து (தொல். புறத். 17) ஒருவ னொருவனை யுடைபடை புக்குக், கூழை தாங்கிய எருமை யென்பதற்கு இப்பாட்டை யெடுத்துக் காட்டுப. தானையானை குதிரை யென்ற, நோனா ருட்கும் மூவகை நிலையுள் தானை நிலைக்கு இதனைக் காட்டி, இஃது உதவியது என்பர் நச்சினார்க்கினியர். கோட்டம், வளைவு. ஒத்தல், உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும் (தொல். உவம, 8) என்றாற்போல. கூவை போழ்ந்து என்ற பாடத்துக்குக் கூவைக்கிழங்கைப் பிளப்பதுபோலப் பிளந்துசென்று எனவுரைக்க. பின்னோக்காத பெருமித நடையும், வழியிடையுள்ள இடையீடுகளை மதியாது செல்லும் மாண்பும் உடையனென்றதற்குத் தொடர்கொள் யானை யுவமமும், தோழன் பாலுள்ள அன்பு விளங்குதற்கு, கன்றமர் கறவை யுவமமும் கூறப்பட்டன. கன்றமர் கறவை யெனப் பொதுப் படக் கூறினாராயினும், விரைவுடைமையும் உடன்தோன்ற, தன் கன்று பிறர் கைப்பட்டிருக்கக் காணும் கறவை அவர்பால் விரைந்து செல்வது போலத் தோழன்பால் சென்றாரெனினும் அமையும்; கன்றுசேர்ந்தார்கட் கதவிற்றாய்ச் சென்றாங்கு, வன்கண்ணன் ஆய்வரல் ஓம்பு (கலி. 116) என்று சான்றோர் கூறுவது காண்க.ஓம்புமின் ஓம்புமின் என்ற அடுக்கு அச்சம் பொருளாகப் பிறந்த விரைவுக் குறிப்புணர நின்றது.
276. மதுரைப்பூதன் இளநாகனார்
மதுரையில் வாழ்ந்த பூதன் என்பாருடைய மகனாதலால் இளநாகனார், இவ்வாறு வழங்கப்பட்டார். இளநாகன் என்பது இவரது இயற்பெயர். மதுரை மருதன் இளநாகனாரென வேறொரு சான்றோருண்மையின், அவரின் வேறுபடுத்தற்கு இவர் பூதன் இளநாகனார் என்று சிறப்பிக்கப் பெறுகின்றார். பெருவேந்தர் இருவர் தும்பை சூடிப் போருடற்றினர். அவருடைய இருபடைகளும் கைகலந்து போர் செய்தன. அத் தானையின் நிலையினை இளநாகனார் கண்டார். மறவருள் ஒருவன் பகைவர் படைநிலை முழுதும் கலக்கி வென்றிமேம்படுவது தெரிந்தது. அதனை இப்பாட்டின்கண் அழகு திகழக் கூறியுள்ளார். |