தானையானை என்ற சூத்திரத்துத் தானை நிலையின்பாற்படும் என்பர். செம்முதுபெண்டின் முதுமையை விரித்துக் கூறியது, அவள் முதியளாயினும், அவள் வயிற்றிற் பிறந்து அவள் மார்பிற் பாலுண்டு வளர்ந்த சிறுவன் மாற்றார்படை முழுதும் கலங்கியலமரச் செய்யும் பெருமறம் உடைய பெருந்தகையாயினான் என வியந்தோதியவாறு. வறுந்தலை முதியாள் அஞ்சுதக்கனளே, வெஞ்சமத், தென்செய் கென்னும் வேந்தர்க், கஞ்சலென்னுமோர் களிறீந்தனளே (புறத். 1372) என்று பிறரும் கூறுதல் காண்க.
277. பூங்கண் உத்திரையார்
பூங்கண் என்பது காவிரியின் வடகரையிலுள்ள தோரூர் எனக் கல் வெட்டுக்களால் (M.E.R. No. 153 of 1932) அறிகின்றோம். இவரது இயற்பெயர்உத்திரையென்பது. இஃது ஆதிரை யென்றாற்போலப் பிறந்த நாளால் வந்த பெயர். களவுக் காதலொழுக்க மேற்கொண்ட தலைமக்களுள் வரைவு நீட்டித்தவிடத்துத் தலைவி பிரிவாற்றாது வேறுபடும் திறத்தை இனிய பாட்டுக்களால் நயம்படிவுரைக்கும் நலம்வாய்ந்தவர் இவர். ஒரு மறவன் காளைப் பருவத்தே வேந்தன் பொருட்டுப் போர்க்குச் சென்றான். அவன் தாய் மிக்க முதுமை யெய்தி அவனையேபற்றுக் கொடாகக் கொண்டிருந்தாள். அவன் போரில் விழுப்புண்பட்டு மேலோராகிய சான்றோர் வருந்த இறந்தான். இச்செய்தியை அவர்கள் அம்முதியவட்டு மெல்ல அறிவித்தனர். அது கேட்டு அவள் கழிபேரு வகை யெய்திக் கண்ணீர் சொரிந்து மகிழ்ச்சியுற்றாள். மறக்குடி மகளாகிய அவளது மறமாண்பு முதுமையால் வாடாத திறம் கண்ட உத்திரையார் வியந்தார். அவ்வியப்பின் உண்மை வடிவே இப்பாட்டு.
| மீனுண் கொக்கின் றூவி யன்ன வானரைக் கூந்தன் முதியோள் சிறுவன் களிறெறிந்து பட்டன னென்னு முவகை ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர் | 5 | நோன்கழை துயல்வரும் வெதிரத்து | | வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே. |
திணை: அது; துறை: உவகைக் கலுழ்ச்சி. பூங்கண் உத்திரையார் பாடியது.
உரை: மீன் உண் கொக்கின் தூவி யன்ன - மீன் கவர்ந்துண்ணும் கொக்கினுடைய தூவிபோன்ற; வால் நரைக் கூந்தல் முதியோள் சிறுவன் - வெள்ளிய நரைத்த கூந்தலையுடைய முதியவளுடைய மகனாகிய இளையோன்;களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை - போரில் தன்மேல் வந்த களிற்றைக் கொன்று தானும் இறந்தானெனச் சான்றோர் உரைத்த செய்தி கேட்டதனால் எய்திய உவகை; ஈன்ற ஞான்றினும் பெரிது - அவனை யீன்றபொழுது அவட்குண்டாகிய உவகையினும் பெரிதாயிருந்தது; |