| கண்ணீர் அவ்வுவகையால் அவளுடைய கண்கள் சொரிந்த நீர்; நோன்கழை துயல்வரும் - வலிய கழையாகிய மூங்கிலிடத்து அசையும்; வெதிரத்து வான்பெயத் தூங்கிய சிதரினும் பல - மூங்கிற் புதரின்கண் மழை பெய்தவழித்தங்கித் தூங்கித் துளிக்கும் நீர்த்துளியினும் பலவாகும்; எ - று.
முதியோள் சிறுவன் என்றது முதுமைக்காலத்துப் பற்றுக் கோடாய் நெடுநாள் பெறாதிருந்து பெற்ற மகன் என்பதுபட நின்றது. என்னுமென்ற பெயரெச்சம் காரியப்பெயர் கொண்டது. தனித்த மூங்கிற்கழி கழை யெனவும்.பலவாய் அடர்ந்திருக்கும் கழைத் தொகுதியாகிய புதர் வெதிரெனவும் வழங்கும். வெதிர மென்றதனை ஒரு மலை யென்பாருமுளர். உவகை ஈன்றஞான்றினும் பெரிது; கண்ணீர் சிதரினும் பலவெனக் கூட்டி வினைமுடிவு செய்க.
பட்டன்னென்னு முரை நோய் பயவாது உவகை பயந்து முதுமையினும் வாடாத மறமுடையளாதலைக் காட்டுதலின் இதனை விதந்து பாடினார்.
விளக்கம்: உவகைக் கலுழ்ச்சியாவது, வாள்வாய்த்த வடு வாழ்யாக்கை, கேள்கண்டு கலுழ்ந் துவந்தன்று என்பதாம். மாற்றருங் கூற்றம் என்ற சூத்திரத்து, பேரிசை, மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றம், ஆய்ந்த பூசல் மயக்கத் தானும் (புறத். சூ. 24) என்பதற்கு இதனைக் காட்டுவர் நச்சினார்க்கினியர். நரைத்த தலைமயிரின் வெண்மை நிறத்துக்குக் கொக்கின் தூவி உவமங் கூறப்பட்டது. என்னும், என்று சொல்லக் கேட்டவழி உள்ளத்துப்பிறக்கும் என்றவாறு. ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோனெனக் கேட்ட தாய் (குறள். 69) என்றவிடத்துச் சான்றோனென்றது, மறமாண் குணங்களால் நிறைந்தோனையும் குறிக்கு மாகலின்,ஈண்டும் அத் திருக்குறள் இயையுமாறு கண்டுகொள்க.கண்ணீரின் மிகுதி யுணர்த்தற்கு வெதிரத்து வான் பெயத் தூங்கிய சிதரினும் பல என்றார். வெதிர மென்பது வெதிர மென்னும் மலைக்கும் பெயர்; அதுபற்றி வெதிரமென்றது வெதிரமலையென வுரைப்பாருமுளர் எனப்பட்டது. டாக்டர்; திரு. ஊ. வே. சாமிநாதையரும் வெதிரம் ஒரு மலை யென்று குறித்திருப்பது காண்க. 278. காக்கைபாடினியார் நச்செள்ளையார்
விருந்து வருமாயின் கரைந்து காட்டுக, வாராதாயின் நடந்து காட்டுகஎன இளமகளிர் காக்கை மனைக்கண்வரின் அது கண்டு சொல்வது வழக்கம்.இவ்வழக்காறு தமிழகத்தில் தொன்று தொட்டு வருவது. இதனைப் பொருளாக வைத்துப் பாடிய சிறப்பினால் நச்செள்ளையார் காக்கைபாடினியார் எனச் சிறப்பிக்கப்படுகின்றார். செள்ளையென்பது இவரது இயற்பெயர்.சிறப்புணர்த்தும் எழுத்தாகிய நகரம் புணர்ந்து நச்செள்ளையென வந்தது. கீரனாரென்பது நக்கீரனார் என்றும், பூதனா ரென்பது நப்பூதனாரென்றும் வருவது காண்க. இனி, நக்கீரன் நற்பூதன் என்பன நக்கீரன் நப்பூதன் எனவரும்; அவ்வாறே நற்செள்ளை யென்பது நச்செள்ளையென வந்தது என்று கூறுவாருமுளர். இச்சான்றோர் கண்டீரக்கோப்பெருநள்ளியின் கானத்தையும் தொண்டி நகரத்தையும் பாடியவர். ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் பதிற்றுப்பத்துள் |