279. ஒக்கூர் மாசாத்தியார்
மாசாத்தனாரைப்போல் மாசாத்தியாராகிய இவரும் ஒக்கூரிற் பிறந்தவராவர். ஒக்கூரெனப் பெயரிய ஊர்கள் பாண்டிநாட்டிலும் சோழநாட்டிலும் உள்ளன. இந்த ஒக்கூர் இன்ன நாட்டதெனத் துணிய முடியவில்லை.சங்ககாலத்து நல்லிசை மெல்லியலாருள் இந்த மாசாத்தியாரும் ஒருவர். போர் நிகழுங் காலத்தில் மறக்குடி யொன்றிற்கு மாசாத்தியார் சென்றிருந்தார். அங்கே நிகழ்ந்த நிகழ்ச்சி யொன்று இவர் கருத்தைக் கவர்ந்தது. அந்த இல்லக்கிழத்தியான மற்குடிமகள் முகத்தில் மறத்தீக் கிளர்ந்து நின்றது. அன்றைய முன்னாளில் அவளுடைய கொழுநன் ஆனிரைகளைப் பகைவர் கவர்ந்தேகாவாறு குறுக்கிட்டுப் பொருது நின்று மாண்டான்; அதற்கு முன்னாள் அவளுடைய தந்தை போரில் தன்மேல் வந்த பெருங் களிற்றைக் கொன்று தானும் பட்டு வீழ்ந்தான். மாசாத்தியார் இச்செய்திகளை உசாவிக்கொண்டிருக்கையில் தெருவில் செருப்பறை முழங்கிற்று. தெருவில் விளையாடிக்கொண்டிருந்த அவளுடைய ஒரு மகன் ஓடிவந்துரைத்தான். மறமகள் முகத்தில் உவகை பிறந்தது. உலறிக்கிடந்த அவன் தலையில் எண்ணெய் தடவிக் குடுமியை ஒப்பனை செய்தாள்; அரையில் வெள்ளிய ஆடையை எடுத்துடுத்தினாள்; வேலொன்றை யெடுத்து அவன் கையில் தந்தாள். மகன் முகத்தைத் தன் முகத்துக்கு நேரே திருப்பி, மகனே, உன் தந்தையும் தன்னையரும் போருடற்றித் தமது கடனைக் கழித்து நம் மறக்குடியின் புகழை நிறுவினர்; நீ இப்போது செல்க! என விடுக்கலுற்றாள். புலவர் பாடும் புகழமைந்த இச்செயலை மாசாத்தியார் வியந்து இப்பாட்டின்கண் இதனை அழகுறப் பாடியுள்ளார்.
| கெடுக சிந்தை கடிதிவ டுணிவே மூதின் மகளி ராத றகுமே மேனா ளுற்ற செருவிற் கிவடன்னை யானை யெறிந்து களத்தொழிந் தனனே | 5 | நெருத லுற்ற செருவிற் கிவள் கொழுநன் | | பெருநிரை விலங்கி யாண்டுப்பட் டனனே இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி வேல்லைக் கொடுத்து வெளிதுவிரித் துடீஇப் பாறுமயிர்க் குடுமி யெண்ணெய் நீவி | 10 | ஒருமக னல்ல தில்லோள் | | செருமுக நோக்கிச் செல்கென விடுமே. |
திணை: வாகை. துறை: மூதின் முல்லை. ஒக்கூர் மாசாத்தியார் பாடியது.
உரை: சிந்தை கெடுக - இவளது சிந்தை கெடுக; இவள் துணிவு கடிது - இவளது துணிவு அச்சம் பொருந்தியதாகவுளது; மூதில் மகளிராதல் தகும் - இவள் முதிய மறக்குடியில் பிறந்த மகளாமெனல் தக்கதே; மேனாள் உற்ற செருவிற்கு - முன்னாளில் |