பக்கம் எண் :

158

     

உண்டாகிய போரின்கண்; இவள் தன்னை யானை எறிந்து களத்
தொழிந்தனன்- இவளுடைய தந்தையானவன் யானையைக் கொன்று தானும்
வீழ்ந்து மாண்டான்; நெருநல் உற்ற செருவிற்கு - நெருநற் றுண்டாகிய
செருவின்கண்;இவள் கொழுநன் பெருநிரை விலங்கி ஆண்டுப்பட்டனன்
- இவளுடைய கணவன் பெரியவாகிய நிரைகளைக் கவர்ந்து செல்லாவாறு
பகைவரைக் குறுக்கிட்டு நின்று பொருது அவ்விடத்தே மாண்டான்; இன்றும்
-; செருப்பறை கேட்டு - போர்க்கெழுமாறு வீரரையழைக்கும் பறையொலி
கேட்டு; விருப்புற்று- மறப் புகழ்பால் விருப்பங்கொண்டு; மயங்கி - அறிவு
மயங்கி; வேல் கைக் கொடுத்து - வேலைக் கையிலே தந்து; வெளிது
விரித்து உடீஇ - வெள்ளிய ஆடையை எடுத்து விரித்து அரையில் உடுத்தி;
பாறு மயிர்க்குடுமி எண்ணெய் நீவி - உலறிய மயிர் பொருந்திய குடுமியல்
எண்ணெயைத் தடவிச்சீவி; ஒரு மகன் அல்லது இல்லோள் - இந்த ஒரு
மகனையல்லது இல்லாதவளே யாயினும்; செருமுகம் நோக்கிச் செல்க என
விடும் - போர்க்களம் நோக்கிச் செல்வாயாக எனச் சொல்லித் தன்
மகனை விடுக்கின்றாள்; எ - று.


     மூதில், முதுகுடி; “கற்றோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு,
முற்றோன்றி மூத்தி குடி.” தன்னை, தன் உடன்பிறந்த மூத்தோருமாம்.
பெருநிரை யென்றது அவள் கொழுநனது ஆண்மை மிகுதி புலப்படுத்தா
நின்றது. தன்னொரு மகனும் மிக இளையனாதலையறியாது செருமுக
நோக்கிச் செல்க என விடுத்தற்கேது இது வென்பார், “மயங்கி” யென்றும்,
அதற்குக் காரணம் மறப்புகழ்பால் அவட்குள்ள விருப்பமென்பார் “விருப்புற்”
றென்றும் கூறினார். சிந்தையையும் துணிவையும் வியந்து பாராட்டும்
கருத்தினராதலின், “கெடுக சிந்தை கடிதிவள் துணி” வென்றது எதிர்மறைக்
குறிப்புமொழி.

     விளக்கம்: மூதின் முல்லையாவது, “அடல்வே லாடவர்க் கன்றியும்
அவ்வில், மடவரன் மகளிர்க்கு மறமிகுத்தன்று” (பு. வெ. மா. 8:21)
எனவரும்.மூதில் மகளிர், முதிய மறக்குடியிற் பிறந்த பெண்டிர்; “மூதிற்
பெண்டிர் கசிந்தழ” (புறம். 19) என்பதன் உரை காண்க. மூதில்,
முதுமையான குடி; அஃதாவது, “வையகம் போர்த்த வயங்கொலி நீர்
கையகல, கல் தோன்றி மண்தோன்றாக்  காலத்தே  வாளோடு, 
முன்தோன்றி  மூத்தகுடி” (பு. வெ. மா. 1:14) என்பதாம், இம்முதுகுடி
மகளிர், உலக வாழ்வில் உயிரினும் மறத்தையே பெரிதும் விரம்புபவர்.
கெடுக சிந்தை யென்றும், கடிதிவள் துணிவு என்றும் கூறியது இகழ்வது
போலப் புகழ்ந்தவாறு. “மூதின் மகளிராதல் தகும்” என்றது மேற்கோள்;
தன்னை யொழிந்தனனெனவும் கொழுநன் பட்டனனெவும்,மகனை 
விடுமெனவும் கூறியது அதனைச் சாதித்தற்கு வந்த ஏது. விலங்குதல்,
குறுக்கிடுதல். ஆண்டு, பெருநிரை குறித்துச் செய்த போர்க்களத்தின்கண்.
விருப்பு  மறப்புகழ்  மேலாதலின், செருப்பறை கேட்டெழுந்த விருப்பத்தால்
செய்வதறியாது மயங்கினளென்பார்,“விருப்புற்று மயங்கி” யென்றார்.வெளிது,
வெள்ளாடை. பாறு மயிர், விரிந்த தலைமயிர். ஒரு மகனல்ல தில்லோள்
என்றது, மதுமகளின் மறப்பண்பைச் சிறப்பித்து நின்றது.