| இனி,இளம்பூரணர், மறங்கடை கூட்டிய குடிநிலை சிறந்த, கொற்றவை நிலையுமத்திணைப் புறனே (தோல். புறத். 4) என்று கொண்டு, குடி நிலையில் மகளிர் இயல்பு இது வென்பாராய், இப்பாட்டை யெடுத்துக் காட்டுவர்; நச்சினார்க்கினியார், குடிநிலை யென்னாது துடிநிலை யென்று பாடங் கொண்டு,வெறியறி சிறப்பின் (தொல். புறத். 5) எனத் தொடங்கும் சூத்திரத்து வரும் வாள் வாய்த்துக் கவிழ்தல் என்றதற்கு எடுத்துக்காட்டுவர். 280. மாறோக்கத்து நப்பசலையார்
மாறோக்கத்து நப்பசலையார் மாறோக்கமென்னும் பகுதியைச் சேர்ந்தவர். கொற்கையைச் சூழ்ந்த பகுதி மாறோக்கமெனப்படும். இப்பகுதியிலுள்ள மாறமங்கலம் என்பது மாறோக்கம் என்னும் பழைய வூரென்று சிலர் கூறவர்; இது மாறவன்மன் மங்கலமெனவும், மான மங்கல மெனவும் கல்வெட்டுக்களிற் கூறப்படுகிறதன்றி மாறோக்க மெனக் கூறப்படவில்லை. இம் மாறோக்கம் மாறோகமென்றும் வழங்குகிறது. ஒருகால் நப்பசலையார், போர்முடிவில் ஒரு தலைவன் மனைக்குச் சென்றார். அவன் போர்ப் புண்பட்டு இறுதிநிலையில் இருந்தான். எவ்வகையிலும் அவன் இறுதியெய்துவான் என்பதைப் பல குறிகளால் அவன் மனையோள் உணர்ந்து கொண்டான். மறக்குடி மகளாதலால் ஒருவாறு தேறியிருந்தாளாயினும், தலைவன் தாணிழலில் வாழ்ந்த துடியன் பாணன் விறலி முதலியோர் வாழ்வு சீர்குலையுமே என நினைந்தாள்; அவர்களும் ஆங்கே இருந்தனர். அவர்களை நோக்கி, தலைவன் மார்பில் உண்டாகிய புண்கள் பெரியவாய் உள்ளன; நண்பகற்போதில் முரலாத தும்பிகள் அப்போதில் வந்து ஒலிக்கின்றன; ஏற்றிய விளக்கும் நில்லாது அவிகிறது; என்னையறியாமல் எனக்கும் உறக்கமுண்டாகிறது; மனைக் கூறையில் இருந்து கூகை குழறுகிறது; விரிச்சி நிற்கும் முதுபெண்டிர் சொற்களும் பொய்படுகின்றன; ஆகவே தலைமகன் இறுதியெய்துவது உறுதி; இனி உங்கள் நிலை யாதாகுமோ, அறியேன்; இனி நீங்கள் இங்கே இருந்து வாழ்வதென்பதும் அரிது; அதனினும் அரிது யான் உயிர் வாழ்ந்திருப்பேன் என நினைப்பது என மொழிந்தாள். இதுகண்டு நெஞ்சு கரைந்துருகினார் நப்பசலையார். மனையோளது மறமாண்பை யெண்ணினார்; எண்ணிய எல்லையில் அவளுரைத்த சொற்கள் நெஞ்சிற் பதிந்தமையின் அவற்றை இப்பாட்டில் தொகுத்துப் பாடியுள்ளார்.
| என்னை மார்பிற் புண்ணும் வெய்ய நடுநாள் வந்து தும்பியுந் துவைக்கும் நெடுநகர் வரைப்பின் விளக்கு நில்லா துஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும் | 5 | அஞ்சுவரு குராஅற் குரலுந் தூற்றும் | | நென்னீ ரெறிந்து விரிச்சி யோர்க்கு செம்முது பெண்டின் சொல்லு நிரம்பா துடிய பாண பாடுவல் விறலி என்னா குவிர்கொ லளியிர் நுமக்கும் |
|