பக்கம் எண் :

164

     

இவ்விடை பெருங் கடுங் கோவின் புலமையுள்ளத்தை இயக்கி இப்பாட்டு
வெளி வருவதாயிற்று. இப்பாட்டு இடையிடையே சிதைந்துள்ளது.

 எஃகுளங் கழிய விருநில மருங்கின்
அருங்கட னிறுத்த பெருஞ்செ யாளனை
யாண்டுள னோவென வினவுதி யாயிற்
 ..........................
 வருபடை தாங்கிய கிளர்தா ரகலம்
5அருங்கட னிறுமார் வயவ ரெறிய
 உடம்புந் தோன்றா வுயிர்கெட் டன்றே
மலையுநர் மடங்கி மாறெதிர் கிழியத்
 ..........................
 அலகை போகிச் சிதைந்துவே றாகிய
பலகை யல்லது களத்தொழி யாதே
10சேண்விளங்கு நல்லிசை நிறீஇ
 நாநவில் புலவர் வாயு ளானே.

   திணை...பாலைபாடிய பெருங்கடுங்கோ பாடியது.

     உரை: எஃகு உளம் கழிய - பகைவர் எறிந்த வேல் நெஞ்சிற்
பாய்ந்துருவிச் செல்ல; இருநில மருங்கின் - பெரிய நிலத்தின்கண் இருந்து;
அருங்கடன் இறுத்த பெருஞ் செயாளனை - ஆற்றுதற்கரிய கடமையினை
ஆற்றிய மிக்க செய்கையையுடைய சான்றோனாகிய மறவனை; யாண்டுளன்
என வினவுதி - எவ்விடத்துள்ளான் என வினவுகின்றாய்; ஆயின் -
ஆராயுமிடத்து;...வருபடை   தாங்கிய   கிளர்தார்  அகலம் - தன்னைக்
குறித்துவரும் மாற்றார் படையை எதிரேற்றற்குக் கிளர்ந்தெழும்
மாலையணிந்த மார்பை;  அருங்கடன்  இறுமார்  வயவர்  எறிய
- தம்முடைய  அரிய கடனையாற்றுதல் வேண்டிப் பகைவர் எறிதலால்;
உடம்பும் தோன்றாஉயிர் கெட்டன்று - அம்பும் வேலும் மொய்த்து உடம்பும்
கட்புலனாகாத உயிரும் கெட்டன; மலையுநர் மடங்கி மாறு எதிர் கழிய -
பொருகின்ற பகைவர் பிறக்கிட்டு முரணவிந்து கெடுதலால்...அலகை போகிச்
சிதைந்து வேறாகிய பலகையல்லது - காக்கும் அமைதி கெட்டுச்
சிதைந்து துணி துணியாகிய கேடக  மொழிய;  களத்து  ஒழியாது -
போர்க்களத்தே  கிடந்தொழியாமல்;சேண்விளங்கு நல்லிசை நிறீஇ -
திசைமுற்றும் பரவி விளங்கும் நல்ல புகழை நிலைநாட்டி; நா நவில்
புலவர் வாயுளான் - நாவால் நல்லுரை பயிலும் புலவருடைய
வாயிலிருந்து வரும் செய்யுளிடத்தே யுள்ளான்; எ - று.