| கழலையணிந்த காலையுடைய நெடுந்தகையாகிய தலைவற்குண்டாகிய புண்களை; எ - று.
நகர் வரைப்பில் மனைச்செரீஇ, கறங்க, இழுகி, சிதறி, ஊதி, எறிந்து, பாடி, புகைஇ, நெடுந்தகை புண்ணை, தோழி, காக்கம் வம்மோ என மாறிக்கூட்டி வினைமுடிவு செய்க. இரவமொடு வேம்புமனைச் செருகுதல் முதலிய செயல்களை பேய்கள் புண்ணுற்றோனை வந்து தொடாவாறு காத்தற்குச் செய்வன. நெடுந்தகை புண்ணுற்றதற்குக் காரணம் கூறுவாள், வேந்துறு விழுமம் தாங்கிய நெடுந்தகை யென்றாள். நோய்க்கெல்லாம் காரணம் பற்றாதலின், பற்றறுதி குறித்துக் காஞ்சிப்பண் பாடப்பட்டது.
விளக்கம்: இப்பாட்டுப் பேய்க்காஞ்சியென ஏடுகளில் துறை வகுக்கப்பட்டுள்ளது; பேய்க்காஞ்சியாவது பிணம் பிறங்கி களத்து வீழ்ந் தார்க்கு, அணங்காற்ற வச்சுறீஇ யன்று (பு. வெ. மா. 4:17) என வரும். இப்பாட்டு அதற்குப் பொருந்தாது; அடலஞ்சா நெடுந்தகை புண், தொடலஞ்சித் துடித்து நீங்கின்று (பு. வெ. மா. 4:19) என வரும். தொடாக் காஞ்சிக்கண் அடங்கும்; எங்ஙனமெனின், பேய் தொடுதற்கஞ்சி நீங்குமாறு புண்ணுற்று வீழ்ந்த மறவனுடைய மனைவி காப்பது இதன்கட்கூறப்படுகின்றது; (தொல். புறத். 24) என ஆசிரியர் கூறுவது காண்க. நச்சினார்க்கினியரும் இப் பாட்டைத் தொடாக்காஞ்சித் துறையென்றே கொள்வர். இரவமரத்தின் தழையும்வேம்பின் தழையும் பேய் நெருங்காவாறு கடிவன. வாங்கு மருப்பு - வளைந்த கோடு. மையிழுது கொண்டு மனையை ஒப்பனை செய்தற்கண் கைபையச் செல்லுமாதலின், ஒப்பனை செய்தலைக் கைபயக் பெயர்த் தென்றாள். பிறந்த பொழுதேயும் பெய்தலைக் கைபயப் பெயர்த் தென்றாள். பிறந்த பொழுதேயும் பெய்தண்டார் மன்னர்க் குடம்பு கொடுத்தாரே மூத்தார் (புறத். 1318) என்ற கருத்தால், வேந்துறு விழுமந் தாங்கினானென்றும், அதனால், பழிதீர் கொடைக் கடனாற்றிய புகழ் (புறத். 1274) பெற்று மேம்படுதலின், நெடுந்தகை யென்றும் கூறினாள். போரிற் பெரும்புண்பட்டு வீழ்ந்த மறவர்க்கு மருத்துவம் செய்வோர் மனையைத் தூய்மை செய்து ஒப்பனை செய்வதும், இனிய இசை பாடுதலும் நறிய விரைப் பொருள்களைப் புகைத்து எங்கும் நறுமணங் கமழுமாறு செய்வதும் பண்டைத் தமிழ் மக்கள் மரபு. 282. சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ முடிவேந்தருள் ஒருவனாதலேயன்றி நல்லிசைச் சான்றோர் வரிசையிலும் ஒருவனாகத் திகழ்பவன். அருந்திறல் படைத்த மறவனொருவன் போரில் புண்பட்டு இறந்தான். அவனது பேராண்மை புலவர் பாடும் புகழ் படைத்தது. அவன் புகழ் நாடுமுற்றும் பரவியிருந்தது. அவனைக் காண்பது குறித்துச் சான்றோர் ஒருவர் அவனூர்க்குச் சென்று வினவினார். வினாவப்பட்டோர், ஐய பகைவரொடு செய்த போரில், வேல் மார்பில் ஊடுருவவும், அஞ்சாது பொருது செய்தற்கரிய செயலால் பெறற்கரிய வென்றியும் புகழும் எய்திய வீறுடையவன் அவன்; அவன் யாண்டுளன் என வினவுகின்றீர்; போரிற் பகைவர் அவன் உடம்பு தெரியாதவாறு அழித்துச் சிதைத்தனர்; அதனால் உயிர் நீங்கிற்று. ஆயினும், அவன் தன் நல்லிசையை உலகில் நிறுவிப் புலவர் பெருமக்களின் நாநவில் செய்யுளில் நிலைபெற்றுள்ளான் என்றனர். |