பக்கம் எண் :

162

     

281. அரிசில்கிழார்

     முடிவேந்தருள்   சேரமான்  தகடூரெறிந்த   பெருஞ்சேரலிரும்
பொறையையும் குறுநில  மன்னருள்  வையாவிக்  கோப்பெரும்பேகன்,
அதியமான் எழினி முதலியோரையும்  பாடிப்  பெருஞ்  சிறப்புப்  
பெற்றவர்  சான்றோராகிய அரிசில்கிழார்.  இவரது  அரிசில் என்னும்
ஊர்  சோழ  நாட்டுக் குடந்தை நகர்க்கண்மையில்  இருந்ததோரூர்; 
குடந்தையிலுள்ள  கல்வெட்டொன்று(A. R. 255 of 1911)  அரிசிலூரைக்
குறிக்கின்றது.  அஃது  இப்போது இருக்குமிடம்  தெரிந்திலது. வேந்தன்
பொருட்டுப் போரில் புகழுண்டாகப் பொருது  விழுப்புண்பட்ட  
வீரனொருவன் தன் மனைக்கண்ணே யிருந்தான். மனையுறை மகளிர்
அவன்  புண்ணை  யாற்றிவந்தனர்.  அரிசில் கிழார்  அவனைக்
காண்டற்பொருட்டு அவன் மனைக்குச் சென்றிருந்தார். அக்காலை
அவன்  மனையோள்  தன்  தோழியுடன் சொல்லாடியது கேட்டார். அது
மறக்குடி  மகளொருத்தியின்  மாண்பை  எடுத்துக்காட்டு தலின் அதனை
இப் பாட்டில் வைத்துப் பாடியுள்ளார்.

 தீங்கனி யிரவமொடு மேம்புமனைச் செரீஇ
வாங்குமருப் பியாழொடு பல்லியங் கறங்கக்
கைபயப் பெயர்த்து மையிழு திழுகி
ஐயவி சிதறி யாம்ப லூதி
5இசைமணி யெறிந்து காஞ்சி பாடி
 நெடுநகர் வரைப்பிற் கடிநறை புகைஇக்
காக்கம் வம்மோ காதலந் தோழி
வேந்துறு விழுமந் தாங்கிய
பூம்பொறிக் கழற்கா னெடுந்தகை புண்ணே.

     திணை: காஞ்சி, துறை: தொடாக் காஞ்சி. அரிசில்கிழார்
பாடியது.

     உரை: தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ - தீவிய கனிகளைத்
தரும் இரவமரத்தின் தழையுடனே வேப்பிலையும் சேர்த்து மனையிறைப்பில்
செருகி;  வாங்கு  மருப்பு  யாழொடு  பல்லியம்  கறங்க - வளைந்த
கோட்டையுடைய யாழும் பலவாகிய இயங்களும் இயம்ப; கைபயப்
பெயர்த்துமை யிழுது இழுகி - கையை மெல்ல எடுத்து மையாகிய
மெருகினையிட்டு; ஐயவி சிதறி - வெண் சிறுகடுகைத் தூவி; ஆம்பல்
ஊதி - ஆம்பற்குழலை யூதி; இசைமணி எறிந்து - ஓசையைச் செய்யும்
மணியையியக்கி; காஞ்சி பாடி,காஞ்சிப் பண்ணைப் பாடி; நெடுநகர்
வரைப்பில் கடி நறை புகைஇ - நெடிய மனையின்கண் நறுமணம் கமழும்
அகில் முதலியவற்றைப் புதைத்து; காதலம் தோழி - அன்புடைய
தோழியே; காக்கம் வம்மோ - காப்போமாக வருக;வேந்துறு விழுமம்
தாங்கிய - வேந்தனைக்குறித்துச் செய்யப் பெற்ற இடுக்கணைத்
தானேற்றுக் காத்த; பூம் பொறிக் கழற்கால் நெடுந்தகை புண்
- பூத்தொழில் பொறிக்கப்பட்ட