| அவன் இறந்தவழி அவர்கள் துன்புறுவரென இரங்குவாள், என்னாகுவிர் கொல் அளியீர் என்றாள். மழித்ததலை மழித்தலையென வந்தது.வழிநினைந் திருத்தல் அதனினும் அரி தென்றது, இறத்தல் ஒருதலை யென்றவாறாம். புண்ணும் வெய்ய; தும்பியும் துவைக்கும்; விளக்கும் நில்லா; கண் துயில் வேட்கும்; குராஅல் குரல் தூற்றும்; சொல்லும் நிரம்பா; ஆதலால் துடிய, பாண, விறலி, என்னாகுவிர் கொல், அளியீர்; நுமக்கும் அரிது; யானும் இருத்தல் அதனினும் அரிது எனக்கூட்டி வினைமுடிவு செய்க.
விளக்கம்: ஆனந்தப்பையுளாவது, விழுமங் கூர வேய்த்தோளரிவை, கொழுநன் வீயக் குழைந்துயங்கின்று (பு. வெ. மா. 10:13) என வரும். என்னை- எனக்குத் தலைவன்; ஈண்டுக் கணவன் என்பது படநின்றது. அன்னை யென்னை யென்றலு முளவே, தொன்னெறி முறைமை சொல்லினும் எழுத்தினும்,தோன்றா மரபின் என்மனார் புலவர் (தொல். பொருள்-52) என ஆசிரியர் கூறுதல் காண்க. தலைவன் உறக்கமின்றி வருந்துவது காண்பாள் மனைவி யுறங்காளாயினமைின், துஞ்சாக் கண் என்றாள். கூகையின் குரல் கேட்போர்க்கு அச்சம் தருவதுபற்றி, அஞ்சவரு குராஅல் எனப்பட்டது. நெல்லொடு நாழி கொண்ட நறுவீ முல்லை அரும்பவி ழலரி தூஉய்க் கைதொழுது; பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப (முல்லை. 8-11) என்று பிறரும் கூறுவதால் விரிச்சியின் இயல்புணரப்படும். நிரப்பாமை, பொய்படுதல். துடியன் துடியும், பாணன் யாழுமாகிய கருவி யுடையர்; விறலிதன் மிடறொன்றே கருவியாகப் பாடுபவளாதலின், பாடுவல் விறலி யென்றாள். தலைமகன் வாழ்ந்த நாளில் பகைப்புலத்துப் பொருது கொணர்ந்த பொன்னும் பொருளும் மாவும் களிறும் துடியன் முதலாயினார்க்குப் பரிசிலாக வழங்கப்பட்டமையின், அவர்கள் வறுமையின்றி இனிது வாழ்ங்கப்பட்டமையின், அவர்கள் வறுமையின்றி இனிது வாழ்ந்தனராதலின், அவர் வாழ்வு சீர் குலைவது நினைந்து வருந்திக் கூறுவாள், என்னாகுவிர் கொல் என்றும், பெற்றவை செலவான பொழுதெல்லாம் தலைவன்பால் வந்து வேண்டுவன நிரம்பப்பெற்று மகிழ்ந்த அவர் தம் நிலைமைக்கு இரங்கி, அளியீர் என்றும் கூறினாள். வாழ்க்கை, வறுமைத்துன்பமின்றி வாழ்தல்.அருமை,இன்மைகுறித்து நின்றது. மகளிர் கணவனைணயிழந்தபின், அவரொருவரானன்றிப் பிறரால் தீண்டப்படாத தம் கூந்தலைக் கழித்துவிடுவது பண்டையோர் மரபு. கூந்தல் கொய்து குறுந்தொடி நீ்க்கி, அல்லியுணவின் மனைவி (புறம்:250) எனப் பிறரும் கூறுவது காண்க. மென்சீர்க் கலிமயிற் கலாவத்தன்ன இவள், ஒலிமென் கூந்தல் உரியவாம் நினக்கே (குறுந்:225) எனவும், குறுந்தொடி மகளிர், நாளிருங் கூந்தற் கிழவரைப் படர்ந்து (புறம்:113) எனவும் சான்றோர் கூறுவனவற்றால் மகளிர் கூந்தலைத் தீண்டும் உரிமை கணவனொருவற்கே யுண்டென்பதும், எனவே, கூந்தற்குரியர் இறந்தவழி, கூந்தலும் உடன்கழிதல் முறைமையென்பதும் பண்டையோர் கொள்கையாதல் தெளியப்படும். மழித்த தலை, மழித்தலையெனவும், வைத்த தலை, வைத்தலை (பதிற்:44) யெனவும் வருதல் விகாரம்.
|