| உயரிய மறப் புகழையுடைய இவன் தொன்று தொட்டுநின் குடியோடு பெருந்தொடர்புற்று அரிய மறப்பணி செய்த குடியில் தோன்றியவன் என அவன் குடிநிலை கூறுவார், நுந்தை தந்தைக்கு இவன் தந்தை தந்தையும், நுந்தைக்கு இவன் தந்தையும் போர்செய்து மாய்ந்தனரென்று கூறுவதாயின், மாய்ந்தனரெனப் பன்மைவினை வருதல் வேண்டும்; அவ்வாறின்மையின், அஃது ஆசிரியர் கருத்தன்றென வுணர்க. மைந்து, வலிமை; மறப் புகழ்க்கு ஏது மைந்தாதலால், மறப்புகழ் நிறைந்த மைந்தினோன் என்றார். பனை, தெங்கு, தாழை முதலியவற்றால் மழையை மறைத்தற்காகச் செய்யப்படுவது குடை; இக் குடைத்தான், தன்னைப் பிடிப்பானை மழையில் நனையாவாறு இடைநின்று காப்பதுபோல, இவனும் நின்னைத் தாக்கவரும் வேலிற்கும் நினக்கும் இடையே நின்று அதனைத் தானேற்றுக் காப்பன் என்பதாம். 291. நெடுங்களத்துப் பரணர் நெடுங்களத்துப் பரணர் நெடுங்களம் என்னும் ஊரினர். இவ்வூர் திருச்சிராப்பள்ளிக்குக் கிழக்கே காவிரியின் தென்கரையிலுள்ளது. பரணரென்ற பெயருடைய சான்றோர் ஒருவர் இருத்தலால் அவரின் வேறுபடுத்தறிதற்குப் பண்டையோர் இவரது ஊராகிய நெடுங்களத்தைச் சேர்த்து நெடுங்களத்துப்பரணரென்று வழங்கினர். ஏடுகளில் நெடுங்களத்து என்பது நெடுங்கழத்து எனப் பிழைபட்டுப் பின்னர் நெடுங்கழுத்தெனத் திரிந்ததன்மேலும் திரிபடைவதாயிற்று. இத் தொடரினை நோக்கின் பலரும், சீத்தலைச்சாத்தனார் என்பதுபற்றிப் பல பொருள் கூறியதுபோல இவர் நெடிய கழுத்தையுடையராதல் பற்றி நெடுங்கழுத்துப் பரணரென உறுப்புப் பற்றிப் பெயர் பெற்றனரெனக் கூறினர். இதுபற்றிய விரிந்த ஆராய்ச்சியுரை, உரைகாரரால் சங்க காலப் பரணர்கள் (செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு: 23; பக். 481) என்ற கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
ஒருகால் ஒரு தானைத்தலைவன் பகைவர் கவர்ந்துசென்ற ஆனிரைகளைமீட்பது கருதிக் கரந்தை சூடிப் போர்க்குப் புறப்படலானான். மறக்குடி மகளாகிய அவன் மனையோள் அவன்பாற்கொண்ட பெருங் காதலால் தான் சூடியிருந்த மாலையை அவற்குச் சூட்டி அவன் மார்பில் அணிந்திருந்த மாலையைத் தான் அணிந்து கொண்டு விடை கொடுத்து விட்டாள். இஃது அக்கால மறவர் குடி மரபு. அவன் செல்லுங்கால் உடுத்திருந்த வெள்ளிய தூய ஆடை அவனுடைய கரிய உடம்பிற்படிந்து பேரொளி கொண்டு திகழ்ந்தது. அக் காட்சி அவள் நெஞ்சிற் படிந்து மிக்க இன்பத்தைச் செய்தது. போர்க்குச் சென்ற தலைவன் நேரே தன் தலைவனான வேந்தனைக் கண்டான். வேந்தனும் அவன்பால் பேரன்பும் பெருமதிப்பும் உடையன். அவனை விடைகொடுத்து வழிவிடுவான், தான் அணிந்திருந்த பல வடங்களோடு கூடிய மணிமாலையை அவன் கழுத்தில் அணிந்து, அவ் வீரர் தலைவன் அணிந்திருந்ததாகிய ஒற்றை வட மாலையைத் தான் அணிந்து மகிழ்ந்தான். இதனைக் கண்டிருந்தோர் சென்று தானைத்தலைவன் மனையோட்குரைத்து மகிழ்வித்தனர். வெட்சியாரை நோக்கிச் சென்ற தலைவன் கரந்தை சூடிப் போருடற்றும் தன் தானை வீரர்க்கு முன்னே, காட்டில் மறைந்து சென்று வெட்சிப் பகைவரொடு கடும்போர்உடற்றினான். |