| 5 | அடுத்தெறி குறட்டி னின்றுமாய்ந் தனனே | | மறப்புகழ் நிறைந்த மைந்தினோ னிவனும் உறைப்புழி யோலை போல மறைக்குவன் பெருமநிற் குறித்துவரு வேலே. |
திணை: கரந்தை. துறை: குடிநிலையுரைத்தல். ஒளவையார் பாடியது.
உரை: கள் இவற்கு ஈத்து உண்மதி - கள்ளை முன்னர் இவனுக்குத் தந்து பின்னர் நீ யுண்பாயாக; சினப்போர் இனக் களிற்று யானை இயல் தேர்க்குருசில் - சினந்து செய்யும் போரினையும் இனமான களிற்றியானைகளையும் செய்யப்பட்ட தேர்களையுமுடைய தலைவனே; நுந்தை தந்தைக்கு - நின் தந்தையின் தந்தைக்கு; இவன் தந்தை தந்தை - இவனுடைய தந்தைக்குத் த ந்தை; எடுத்தெறி ஞாட்பின் இமையான் - படைகளை யெடுத்துப் பகைவர்மேலெறிந் தழிக்கும் போரின்கண் கண்ணிமையால்; தச்சன் அடுத்தெறிகுறட்டின் நின்று - தச்சனால் ஆர்க்காலைச் சேர்த்து எறியப்பட்ட குடம்போலப் பகைவர் எறிந்த படைகளைத் தானேற்று நின்று; மாய்ந்தனன் - மாண்டான்; மறப்புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும் - மறப்போர் செய்து பெற்ற புகழ் நிறைந்த வலியை யுடையனாகிய இவனும்; உறைப்புழி ஓலை போல - மழை பெய்யுமிடத்து இடைநின்று நம்மை அதனினின்று காக்கும் பனையோலைக்குடை போல; பெரும---; நிற் குறித்து வரு வேல் மறைக்குவன் - பகைவர் நின்னைக் குறித்து எறிய வரும் வேலைத் தான் இடை நின்று ஏற்றுத் தாங்குவனாதலால்; எ - று.
முன்னர் பின்னரென்பன அவாய் நிலையால் வந்தன. யானையும் தேரும் உடையையாயினும் இவன் சிறப்பாக வேண்டற்பாலன் என்பது தோன்ற, இனக்களிற்றியானை யியல்தேர்க் குருசில் என்றார். குறடு, ஆர்க்கால் செறிந்திருக்கும் குடம். காக்கும் திறப்பாடு விளங்க, கண்ணிமையான் என்றார். இமைப்பது வீரர்க்குப் புறக்கொடை போல் இழிவு தருவதெனக் கருதிஇமையானாயினா னென்பாருமுளர். இவன் தந்தைக்குத் தந்தை செயல்கூறி இவன் செயல் கூறாதொழிவது மயங்க வைத்தலென்னும் குற்றமாதலின், இவன் சிறப்பை மறப்புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும் என்றார். தந்தைய ரொப்பர் மக்கள் (தொல். கற்.6) என்பதனால், தந்தை செயல் தானே விளக்கமுறுதலின் கூறாராயினார். குருசில், பெரும, இவற்கீத் துண்மதி, தந்தை மாய்ந்தனன், இவனும் மறைக்குவன் என வினைமுடிவு செய்க. ஓலை: ஆகுபெயர்.
விளக்கம்: குடிநிலையுரத்தலென்பது, மண்டிணி ஞாலத்துத் தொன்மையும் மறனும், கொண்டுபிற ரறியுங் குடிவர வுரைத்தன்று (பு. வெ. மா. 2:14) என வரும். பொருதற்குரிய சினமும், களிற்றி யானைகளும் தேரும் இருப்பினும் தொல்குடிப் பிறந்த மறச் சான்றோர் காப்பில்வழி வெற்றியுண்டாகாதென்பது தோன்றச், சினப்போர் இனக்களிற்றியானையியல்தேர்க் குருசில் என்றார். |