| வெறிதேயும் உயிர் கொடுத்தற்கு விழைபவனாகிய என் தலைவனுக்கு; தன் தலைமணி மருள் மாலை சூட்டி - தன்னிடத்து மார்பிலிருந்த பல மணிகள் விரவிய பல வடமாலையைத் தலைவனுக் கணிந்து; அவன் தலை ஒரு காழ் மாலை தான் மலைந்தனன் - என் தலைவனாகிய அவனிடத்து மார்பிலிருந்து ஒற்றை வடமாலையைத் தான் அணிந்துகொண்ட பேரன்பினனாதலால்; எ - று.
போர்க்குச் செல்வோர் தூயவெள்ளாடையணிந்து செல்பவாதலால் தூவெள்ளறுவை மாயோன் என்றார்; பிறரும் வெளிது விரித்துடீஇ என்பது காண்க. காக்கை, கழுகு, பருந்து முதலிய பிணந்தின்னும் பறவைகள் சூழ்ந்து மொய்த்து ஆரவாரித்துச் செய்யும் பேரொலியை, இரும்புட் பூசல் என்றார். பருந்து வட்டமிடுவது போல இசைக்கப் படுவதுபற்றி, விளரிக் கொட்பு என்றார். யான் அவன்பாற்கொண்ட காதலால் நெஞ்சு நடுங்கு துயரம் எய்தியதுபோல வேந்தன் தன் மாலையை மாற்றிப் பெருங் காதலுடையனாதலால் மிக்க துயரம் எய்துவனென்பாள், என்போல் வேந்தனும்பெருவிதுப்புறுக என்றாள். ஓம்புமின், கடிகுவென்; மலைந்தனனாதலால் வேந்து பெருவிதுப்புறுக எனக்கூட்டி வினை முடிவு செய்க.
விளக்கம்: தோள் வலிய வய வேந்தனை, வாள்வலி மறவர் சிறப்புரைத்தன்று என்பது வேத்தியல் (பு. வெ. மா. 2 : 13) இதன்கண் வேந்தனை யென்றவிடத்து நான்காவதன்கண் இரண்டாவது மயங்கிற்றாகக் கொண்டு, வேந்தன் பொருட்டு உயிர் கொடுத்த வாள்வலி மறவர் சிறப்புரைப்பது வேத்தியல் என ஈண்டு அமைத்துக்கொள்க. என்போற் பெருவிதுப் புறுக வேந் தென்றது, மேற்கோள்; வெய்யோற்கு மாலை சூட்டித் தான் மாலை மலைந்தனனாகலான் என்பது அதனைச் சாதிக்கும் ஏது. 292. விரிச்சியூர் நன்னாகனார் விரிச்சியூர் என்பது பாண்டி நாட்டில் உள்ளதோர் ஊர். வேந்தன் பொருட்டு விரிச்சி நின்று கூறியது, அக் கூறியவாறே வேந்தற்கு வேண்டும் பயனை நல்கிற்றாக, அவ் வேந்தனால் இவ்வூர் விரிச்சி நின்றவளுக்கு வழங்கப்பட்டதாகல் வேண்டும். அதனால் இவ்வூர் விரிச்சியூர் எனப்படுவதாயிற்று. கணியூர், மருத்துவக்குடி,பிரமதேயம் முதலிய ஊர்கள் இவ்விரிச்சியூர் என (A. R. No. 66 of 1924) மருவி வழங்குவதாயிற்று. நன்னாகனாரென்ற பெயருடனே சான்றோர் வேறே இருத்தலால் அவரிற் பிரித்தறிதற்கு இந்த நன்னாகனார், ஊர்ப்பெயரோடு இணைத்து விரிச்சியூர் நன்னாகனார் என வழங்கப்பட்டனர். இவர் பாடியதாக இவ்வொரு பாட்டுத்தான் கிடைத்துள்ளது. இதன்கண், உண்டாட்டு நிகழுமிடத்து ஒரு வீரன் முறை தவறினானென. வெகுண்டவர்க்குச் சான்றோராகிய நன்னாகனார் அவனது ஆண்டகைமையை எடுத்தோதிப் பாராட்டியுள்ளார்.
| வேந்தற் கேந்திய தீந்தண் ணறவம் யாந்தனக் குறுமுறை வளாவ விலக்கி வாய்வாள் பற்றி நின்றனெ னென்று சினவ லோம்புமின் சிறுபுல் லாளர் |
|