| உயர்வுடைய தென்பதுபற்றி, வெண்மதியத்தின்...எனப்பட்டது என வுரைக்கப்பட்டது. குமரிப்படை யென்றது, புதியவாய்ச் செய்து வாய் தீட்டி நெய் பூசப்பெற்று முதன் முதலாக எறிதற்கேந்தும் படை யென்றுமாம். ஓரிடத்தே கூடி நிறைந்திருக்கும் பாடி வீடு, கண்கூடிறுத்த பாசறை யெனப்பட்டது. இது கட்டூர் என வழங்கும்: கடல் கிளர்ந்தன்ன கட்டூர் (புறத். 295) என்று பிறரும் கூறுவது காண்க. போர் எதிர்ந்தவழித் தமரென்றும்பிறரென்றும் பாராது பொருவது மறவர் இயல்பாதலால் தமர் பிறர் அறியா அமர் என்றார். இதனைச் சிலர் படைமடம் என்ப. படைமடம் மறவர்க்கு இழுக்காதலின், அது சிறவாமையறிக; கொடை மடம் படுதலல்லது, படைமடம் படான் பிறர் படை மயக்குறினே (புறத். 142) என்றும், படைமட மென்றது வீரரல்லாதார் மேலும் முதுகிட்டார் மேலும், புண்பட்டார் மேலும், மூத்தார் இளையார்மேலும் செல்லுதல் (பழையவுரை) என்றும் சான்றோர் உரைப்பது காண்க. நிலைமக்கள் சாலவுடைத்தெனினும் தானை, தலைமக்கள் இல்வழி இல் (குறள். 770) என்பதனால் வெற்றியுற நிகழும் போரில் தலைவன் பெயரும் விளக்கம் பெறுதலின், இறையும் பெயரும் தோற்றி யென்றார். வாணாட்கோள் பகை மறவர் நீணாட்கோள் எனப்படும் வழக்குப்பற்றி, நாண் முறை தபுத்தீர் என்றதற்கு வாழ்நாள் முறை முடிந்தவர்களே என்று உரை கூறப்பட்டது. பிறரும் யாவருங், குறுகலோம்புமின் குறை நாண் மறவீர் (புறத். 1342) என்பது காண்க. இனி நாண் முறை யென்புழி நாண், நாணம் என்பாரு முளர். நாணிழந்தவர் ஒத்த பண்புடைய மறவராகாமையின், அவரைத்தமிழ்மறவர் போர்க்கு அழையாரென அறிக. மறமானம் மாண்டவழிச் செலவு தேற்றம், என நான்கே யேமம் படைக்கு (குறள். 766). வந்த வழி நாள் முறைகெடுதல் தப்பா தென்றற்குத் தபுத்தீர் என இறந்த காலத்தாற் கூறினான். 295. ஒளவையார் ஒருகால் வேந்தர் இருவர் தும்பை சூடிப் போருடற்றுவாராயினர். இருவர்பக்கத்தும் வீரர் பலர் பொருது வீழ்ந்தனர். வீழ்ந்த வீரருள் பலர் அரிய போருடற்றிப் பகைவரால் வேறு வேறாகத் துணிக்கப்பட்டனர். அவருள் வீரனொருவனுடைய தாய்க்குப் போர் முடிவில் அவன் மாண்ட செய்தியைத் தெரிவித்தனர். அவன் வீழ்ந்த திறத்தைக் காண்பதற்கு அவளும் போர்க்களஞ் சென்றாள். அதனை ஒளவையார் அறிந்து அவள் செயலை உற்று நோக்கினார். அத்தாய் மிகவும் முதியள். போர்க்களத்தே வீழ்ந்து கிடக்கும் வீரரிடையே அவள் மகன் சிறப்புறப் பொருததன் பயனாக உடல் சிதைக்கப்பட்டிருப்பது கண்டு சிறப்புடைய அவன்பால் உள்ளங் கரைந்தாள். அன்பின் முதிர்வால் வற்றி வாடிய அவள் மார்பில் பால் சுரந்தது. ஒளவையாருக்கு வியப்பு மிகுந்தது. அம்மிகுதி இப் பாட்டினுருக் கொண்டு வெளிப்பட்டது.
| கடல்கிளர்ந் தன்ன கட்டூர் நாப்பண் வெந்துவாய் வடித்த வேறலைப் பெயரித் தோடுகைத் தெழுதரூஉத் துரந்தெறி ஞாட்பின் வருபடை போழ்ந்து வாய்ப்பட விலங்கி | 5 | இடைப்படை யழுவத்துச் சிதைந்துவே றாகிய | | சிறப்புடை யாளன் மாண்புகண் டருளி |
|