| வெந்து வாய்மடித்து என்ற பாடத்துக்குப் போர் குறித்தெழுந்த சினத்தீயால் உடலகம் வெந்து வாயிதழ் கடித்து என வுரைக்க. தோடு, தொகுதி. வெள்யாடு போலத் தலைமகனைப் பின்தொடர்வதுபற்றி, தானைத் தொகுதி தோடெனப் பட்டதென்றுமாம். ஞாட்பு, போர்க்களம். அழுவம், ஆழ்ந்த இடம்; களத்தின் நடுவிடம் அழுவம் போறலின் அழுவம் எனப்பட்டது. சிறப்பு, ஏனைமறவர் பலர்க்கும் இ்ல்லாத போர்ச் சிறப்பு. மாண்பு, போரிடை வஞ்சியாது பொருது விழுப்புண் பட்டு வீழ்ந்தது; நோற்றோர் மன்றாமே கூற்றம், கோளுற விளியார் பிறர்கொள விளிந்தோர் (அகம். 61) என்று சான்றோர் இம் மாண்பினை விளங்கக் கூறுமாறு காண்க. உயிரின்றிச் சிதைந்து வேறாகிய உடம்பின் சிதைவு கண்டு அன்பு பெருகி நிற்றலின், அருளி என்றும், அதனால் மார்பிடைப் பால் சுரந்ததென வியந்து கூறுவார், வாடுமுலையூறிச் சுரந்தன என்றும் கூறினார். ஓடாப் பூட்கை, பிறக்கிடாத மேற்கோள். உவகைக் கலுழச்சியாவது, வாள் வாய்த்த வடு வாழ் யாக்கைக், கேள் கண்டு கலுழ்ந்து வந்தன்று (பு. வெ. மா. 8:25) என வரும். ---
296. வெள்ளை மாறனார் வெள்ளை மாறனார் என்ற இச்சான்றோர் பெயர் அச்சுப் பிரதிகளில் வெள்ளை மாளரென்று காணப்படுகிறது. இப் பெயர் வெள்ளை மாளனார் என்று கொள்ளக் கிடக்கின்றது. இவரைப்பற்றி வேறு குறிப்பொன்றும் கிடைத்திலது. இவர் பாடியதாக இந்த ஒரு பாட்டுத்தான் உளது. முன்னைப் பதிப்பாசிரியராகிய திரு. உ.வே. சாமிநாதையரவர்கள்,இவர் பாடிய ஏறாண் முல்லைத்துறை மிக்க பொருள் நயமுடைய தென்ற ஒரு கருத்தையே இவரைப்பற்றிக் குறித்துள்ளார். போர்க்குச் சென்றிருந்த வீரருள், இறந்தோரொழியப் புண்பட்ட வீரர் பலர் ஓரூரில் தத்தம் இல்லம் வந்துசேர்ந்தனர்.அவர் மனைகளில் புண்ணையாற்றுவது குறித்து வேப்பிலை கொணர்ந்து மனையிறைப்பில் செருகுவதும் காஞ்சிப்பண் பாடுவதும் ஐயவி புகைப்பதுமாகிய செயல்களால் கல்லென்னும் ஓசை மிக்கிருந்தது. போர் முடியும் நிலையில் இருந்தமையின் வீரர் சிலர் வரத்தாழ்த்தனர்.சிறப்புடைய வீரனொருவனது தேர் நெடிது தாழ்த்து வந்தது. அது கண்டு மிகழ்ச்சியுற்ற அவன் தாய், தாழ்த்தற்குக் காரணம் காண்பாளாய், பகைவேந்தனை வீழ்த்தல்லது மீளலாகாதெனத் தன்மகன் பொருகின்றான் போலும்;இன்றேல் அவன் தேர் நெடித்து வாராதென்றாள். இதனை யுவகையுடன் கண்ட ஆசிரியர் வெள்ளை மாறனார் இப் பாட்டின்கண் அவள் கூற்றினைத்தாம்கொண்டு கூறியுள்ளார்.
| வேம்புசினை யொடிப்பவுங் காஞ்சி பாடவும் நெய்யுடைக் கைய ரையவி புகைப்பவும் எல்லா மனையுங் கல்லென் றவ்வே வெந்துடன் றெறிவான் கொல்லோ | 5 | நெடிதுவந் தன்றா னெடுந்தகை தேரே. |
திணை: வாகை. துறை: ஏறாண் முல்லை. வெள்ளைமாறனார் பாடியது.
உரை: வேம்பு சினை யொடிப்பவும் - வேம்பின் கிளையை யொடித்து அதன் இலை கொணர்வதிலும்; காஞ்சி பாடவும் - காஞ்சிப் பண்பாடுவதிலும்; |