| நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும் - நெய்யுடைக் கையராய் மனையோர்வெண் சிறு கடுகைப் புகைப்பதிலும்; எல்லா மனையும் கல்லென்ற - எல்லாருடைய மனைகளும் கல்லென்ற ஆரவாரத்தை யுடையவா யிராநின்றன; வேந்து உடன்று எறிவான் கொல்லோ - பகை வேந்தகைச் சினந்து அவனை வீழ்த்தவல்லது மீளலாகாதெனப் பொருகின்றான் போலும்; நெடுந்தகை தேர் நெடிது வந்தன்று - நெடுந்தகையாகிய இவனுடைய தேர் நெடிது தாழ்த்து வந்தது; எ - று.
நெடித்தென்பது நெடிதென வந்தது. எல்லா மனையும் கல்லென்ற; தேர் நெடிது வந்தன்று; அதனால் எறிவான் கொல்லோ என வினைமுடிவு செய்க. வந்ததன்றென்பது வந்தன்றென விகாரமாயிற்றெனக் கொண்டு, பொழுது நெடிதாகியும் வாராதாயிற்று; எறிவான் கொல்லோ என்றுரைத்தலு மொன்று.
விளக்கம்: ஏறாண் முல்லையாவது மாறின்றி மறங்கனலும் ஏறாண் குடி யெடுத்துரைத்தன்று (பு. வெ. மா. 8:22) என வரும். வேம்பின் தழையை மனையின்கட் செருகுவதும் காஞ்சிப்பண் பாடுவதும் புண்ணுற்று வந்த வீரர் பொருட்டு அவர் மனையோர் செய்வது மரபு. அதனால் புண்ணுற்றோரைப் பேய்கள் அணுகா என்பது பண்டையோர் கருத்து. ஐயவி, வெண் சிறுகடுகு. அப்போழ்து ஐயவி புகைப்பதும் உண்டென்பதை, நீயே ஐயவி புகைப்பவுந் தாங்காது ஒய்யென, உறுமுறை மரபின் புறநின்றுய்க்கும்...கூற்றத் தனையை (புறம். 98) என்பதனாலு மறிக. ஏனை மனைக்குறிய வீரர்கள் விழுப்புண்பட்டுப் பேய்க்கோட்படாமை கருதி யேமமாவன செய்யப்பட்டனரெனவே, நெடித்து வந்த வீரன் புண்ணொன்றுமின்றி வந்தமை விளங்க, அவனை நெடுந்தகை யென்றாள். வெந்துடன்றென்பது பாடமாயின், சினமிக்குப் பகைவரை எறிதலையே மேற்கொண்டு போர் செய்யாநிற்கின்றான்போலும் என்றுரைக்க. 297. உண்டாட்டு வேந்தனொருவன் வெட்சிப் போர் புரியுங் கருத்தினனாகித் தானை வீரரை வருவித்தான். தானைவீரரும் அரசியற் சுற்றத்தாரும் ஒருங்கு கூடினர். உண்டாட்டு நிகழ்ந்தது. அக்காலை, தானைத்தலைவரிடையே போரில் மாண்புறப் போர்புரிபவர்க்குச் செய்யப்படும் சிறப்புகளைப் பற்றிப் பேச்சு நிகழ்ந்தது. போரில் பகைவர் எறியும் வேல் பல பாய்ந்து மடலொடு நிற்கும் பனைமரம்போல் சலியாது நிற்கும் தானை வீரர்க்குப் பைம்பயறு விளையும் சீறூர்கள் இறையிலிப் புரவாக வழங்கப்படின் யாம் அவற்றை விரும்பியேலேம்; ஏற்க நேரில் நெல்லும் கரும்பும் விளையும் மருதநிலத்தூர்களையே யாம் விரும்புவேம் என்று ஒரு தலைவன் மொழிந்தான். அக் கூற்றில் யாம் பெறற்குரியது மறப்புகழே; பிறிதன்று; புகழோடு வேந்தன் தரும் ஊர்களைப் பெறுவதாயின் மருத நிலத்தூர் களையே யாம் விரும்புவேம் என்று விளம்புவதனால் வெளியாகும் உள்ளப் பெருமை புலவர் பாடும் பொற் புடையதாதலைக் கண்ட சான்றோர் ஒருவர் இப் பாட்டினைப் பாடியுள்ளார். அவர் பெயர் ஏட்டில் விடப்பட்டுள்ளது. |