| | பெருநீர் மேவற் றண்ணடை யெருமை இருமருப் புறழு நெடுமா ணெற்றின் பைம்பய றுதிர்த்த கோதின் கோலணைக் கன்றுடை மரையாத் துஞ்சுஞ் சீறூர்க் | 5 | கோளிவண் வேண்டேம் புரவே நாரரி | | நனைமுதிர் சாடி நறவின் வாழ்த்தித் துறைநணி கெழீஇக் கம்பு ளீனும் தண்ணடை பெறுதலு முரித்தே வைந்நுதி நெடுவேல் பாய்ந்த மார்பின் மடல்வன் போந்தையி னிற்கு மோர்க்கே. |
திணை: வெட்சி; துறை: உண்டாட்டு...
உரை: பெருநீர் மேவல் தண்ணடை எருமை இருமருப்பு உறமும்- மிக்க நீரின்கண் இருத்தலை விரும்பும் மருதநிலத்தூர்களில் வாழும் தண்ணிய நடையினையுடைய எருமையினது பெரிய கொம்பைப்போலும்; நெடுமாண் நெற்றின் பைம்பயறு உதிர்த்த கோதின் - நெடிய முற்றிய நெற்றுக்களையுடைய பசிய பயற்றின் பயறு நீக்கப்பட்ட கோதுகளின்;கோல் அணை - திரட்சியைப் படுக்கையாகக் கொண்டு, கன்றுடை மரையா துஞ்சும் - கன்றையுடைய மரையான் கிடக்கும்; சீறூர் புரவு கோள் இவண் வேண்டேம் - சிறிய ஊர்களைப் புரவாகக் கொள்வதை இவ்விடத்து வேண்டேம்; நாரரி நனைமுதிர்சாடி நறவின் வாழ்த்தி - நாரால் வடிக்கப் பட்டுப் பூக்களையிட்டு முதிர்வித்த சாடியிலுள்ள கள்ளை வாழ்த்தி; துறைநணி கெழீஇக் கம்புள் ஈனும் நீர்த்துறையிலிருக்கும் புதல்களைப் பொருந்திக் கம்புட்கோழி முட்டைகளையீனும்; தண்ணடை பெறுதலும் உரித்து - மருத நிலத்தூர்களைப் பெற்றால் பெறுவது உரியதாம்; வைந்நுதி நெடுவேல் பாய்ந்த மார்பின் - மிகக்கூரிய நெடிய வேல் தைத்து நிற்கும் மார்புடனே; மடல்வன் போந்தையின் நிற்குமோர்க்கு - மடல் நிறைந்த வலிய பனைமரம்போல் நிற்கும் போர் வீரர்க்கு; எ - று.
நிற்கு மோர்க்குத் தண்ணடை பெறுதலும் உரித்து; சீறூர்ப்புரவு கோள் வாழ்த்தி இவண் வேண்டேம் என வினைமுடிவு செய்க. தரப் படுவதொன்றை வேண்டாவென விலக்குமிடத்து நறவினை வாழ்த்துவது பண்டைப் போர்மறவர் மரபு. மரை ஆ - காட்டுப் பசு. பெறுதலும் என்ற உம்மை பெறாமையும் உரித்தென்பதுபட நிற்றலின் எதிர்மறை; மறப்புகழ் பெறுதலே இவண் பெரிதும் வேண்டப்படுவது என்பது எஞ்ச நிற்றலின் எச்சவும்மையுமாம். மறமுடையோர் புகழையல்லது பிற எவற்றையும் கொள்ளேம் என மறுப்பது சிறப்பு. மடல்வன் போந்தையுவமையால் மறவர் மார்பில் தைத்த வேலொடு பெற்றாம். |