| தார், கிண்கிணிமாலை. செல்வவுணவன்றாதலின், சீறூர் மன்னன் குரிரைகள் ஒய்ந்த நடையுடையன என்பார் ஓய்நடைப் புரவி யென்றார். முருகன் மகளிரை வருத்துவனென்ற கொள்கையால், அணங்குடை முருகன் என்றார். பூப்புக்காலம் கூட்டத்துக்காகா தென்பது பற்றி, பூப்புற்ற மகளிர் மனைகளில் கலந்தொடாது விலகியிருந்து தாம் பூப்புற்றமை தெரிவிப்பது தமிழர் மரபு. பூப்புத் தோன்று மகளிர்க்கு அதன் வரவு முன்கூட்டி அறிய வாராமையின், அதன் வரவைத் தாம் விலகிநின்று நாணிக்காட்டும் இயல்புபற்றி, கலந்தொடா மகளிரின் இயழ்ந்துநின் றவ்வே யென்றார்.இனி ஈராறு நாட்கு நீவிர் எம்மை நீத்தகன்றுறைவது கூடாதென்பதுபோலும் புணர்குறி யாதலின், அதன் வரவு மகளிர்க்கு நாணடச் சாய்ந்து கவிழ்ந்து நிற்கும் நலம் பயப்பதாயிற்றென்னுமாம். ஓய் நடைப் புரவி படைமுகம் போழ, தாருடைப் புரவி இகழ்ந்து நின்றன என வினைமுடிவு செய்க.
விளக்கம்: குதிரை மறமாவது, ஏமாண்ட நெடும்புரிசை, வாமானது வகையுரைத்தன்று (பு. வெ. மா. 5:5) என வரும். பருத்தி வேலிச் சீறூர் எனவே, நீர்வளமின்றிக் கரிசில் மண்ணுள்ள நிலப்பகுதியில் உள்ள சீறூர் என்றும், அம் மட்பாங்கு உழுந்தும் கொள்ளும் விளைதற்கேற்ற தென்றும் தெளியப்படும். ஊறவைத்து அரைக்கப்பட்ட உழுந்து ஈண்டுச் சக்கையெனப்பட்டது; அதன் உமியே சக்கையெனப் பட்டதென்றும் கூறுவர். போர்க் குதிரைக்கு ஒய்நடை குற்றமாகும். நெய் பெய்து நறுமணமும் சுவையுமுடையதாகச் சமைத்த உணவென்றற்கு நெய்ம்மிதி யென்றார்.குதிரை யுணவுக்கு மிகச் சிறந்தது பன்றி நெய்யென்பர். தண்ணடை, நிலத்துக் கணியாகிய நெல்லுங் கரும்பும் விளையும் நீர்வளம் சான்ற நிலப்பகுதி. பூப்புத்தோன்றக் கண்ட மகளிர், அணங்குடை முருகன் கோட்டத்தை அணுகற்கஞ்சி நீங்குவதுபோலக் குதிரைகளும் படை கண்டு அஞ்சிப் பின்னிட்டுப் பெயர்ந்தன என்றவாறாயிற்று.
300. அரிசில் கிழார்
வேந்தர் இருவர் தும்பை சூடிக் கடும்போர் புரிந்தனர். இருதிறத்து வீரரும் மறலி மைந்துற்று மண்டமர் உடற்றினர். ஒரு வீரன் தன் முன்பிறந்தோனை முன்னாளைப் போரில் மாற்றார் படையிடத்து மறவனொருவன் கொன்றானென்று வெஞ்சினங்கொண்டு வஞ்சினம் பேசி அவனைப் போர்க்கழைத்தான். அம் மறவனும் அதற்குப் பின்னிடானாய்த் தன்பக்கலுள்ள இளையரைத் தன் கேடகத்தைக் கொண்டுவந்து தருமாறு விரைந்தான். அது கண்ட வீரனொருவன் இருவர் திறலையும்தூக்கி நோக்கி மறவா! நீ கேடகத்தைக் கொணருமாறு பணிக்கின்றாய்; அது கொண்டு நின்னை மறைப்பதை விடுத்துத் துறுகல்லைத் தோலாகக் கொண்டு மறைக்கினும் உய்குவாய்போலும்; நெருதல் நின்னால் எறியப் பட்டோன் தம்பி இந்நாள் கண் சிவந்து பேரூரில் காய்ச்சிய பெருங்கள்ளைப் பெறுதற்குத் தன் மனைக்கண் நுழைத்து ஒரு கலத்தைத் தேடுவானைப் போல நின்னைத் தேடி வருகின்றான், காண் என்றுரைத்தான். இவ்வுரை போர் மறவர்க்கு நல்லூக்கங்கொளுத்தும் நல்லுரையாக இருப்பதுகண்ட சான்றோராகிய அரிசில்கிழார் இப் பாட்டினுள் அக்கருத்தை வைத்துச் சிறப்பித்துள்ளார். |