| என்ப; அது கேட்டுப் பாசறை, இரண்டாகாதென நடுங்கின்று என விளைமுடிவு செய்க. பாசறை: ஆகுபெயர்.
விளக்கம்: போர்க்குச் செல்லும் வீரர்க்கு அவர்தம் மகளிர் சாந்தணிந்து மாலைசூட்டி வழிவிடுவது பண்டையோர் முறை. அது விளங்க, கொடுங்குழை மகளிர் கோதை சூட்டி யென்றார்; ஆகலாற்றான் சூட்டி யென்றது சூட்டவெனத் திரிக்கப்பட்டது. குளிர் காலத்திற் போர்க்குச் சேறல் தோன்ற, நடுங்குபனி களைஇயர் நாரரி பருகினானென அறிக. நாரால் வடிக்கப்படுவது பற்றிக் கள் நாரரி யெனப்பட்டது. (புறம். 24) என்பதனலறிக. விரைந்தேகுந் தொழிலில் காற்றுச் சிறந்ததாயினம், அதன் தொழிலினும் குதிரையின் செலவாகிய தொழில் மேற்படுமாறு விளங்க, வளிதொழி லொழிக்கும் புரவி யென்றும், ஒழித்தற்கு ஏது கூறுவார், வணபரிப் புரவி யென்றும் கூறினார். இத்தகைய குதிரையைத் தேர்ந்து அதனை யிவர்ந்து போர்க்குச் செல்லக்கருதி அதனைச் சமைக்கின்றானாகலான், பண்ணற்குவிரைதி நீ என்றார். நின் விரைவை ஒற்றிக்கண்ட ஒற்றார் வேறாகக் கருதித் தம் பாசறையோர்க்கு உணர்த்தினரென்பார், நெருதை...என்ப என்றார். இன்றினிது நுகர்ந்தனமாயின் நாளை, மண்புனை யிஞ்சி மதில்கடந் தல்லது, உண்குவ மல்லேம் புகாவெனக் கண்ணி கண்ணிய வயவர் பெருமகன் (பதிற். 58) என்று வஞ்சினம் கூறுவது மறவர் இயல்பாதலின், பகைவரொற்றர் இவ்வாறு கருதிக்கொண்டு சென்று பாசறையோர்க் குரைத்தொழிந்தனரென்று கொள்க. வலம்படு முரச என்றதற்குத் தன் முழக்கத்தாலே பகை வேந்தர் வெருவியோடப்பண்ணித் தன்னையுடைய வேந்தர் போரைச் செய்யாமே வெற்றி தோற்றுவிக்கும் முரசு என்று உரை கூறுதலுமுண்டு. வெல்போர் என்றதற்கு இதுகாறும் செய்து போந்த போர்களிலெல்லாம் வெற்றியே பெற்றுச் சிறந்த போர் என்று உரைத்தலுமுண்டு. இவ்வகையால் போர்ப்புகழ் விள்கும் பாசறை யென்பார், இல்ங்கிரும் பாசறை யென்றார். என்றது, இத்துணைச் சிறந்த பகைவரும் நின் விரைவுகண்டு அஞ்சி நடுக்குறுகின்றனர் என்றவாறாம். 305. மதுரை வேளாசான்
வேள் சான் என்னும் பெயர் வேளாசான் என மருவிற்று. மதுரையில் பார்ப்பனரிடையே வேள்வித் தொழிற்கு ஆசானாக இருந்ததனால் இவர் மதுரை வேளாசான் எனப்படுவாராயினர். வேள்வி வேள்வு எனவும் வழங்கும் விழவும் வேள்வும் விடுத்தலொன்றின்மையால் (சீவக. 138) என்று தேவர் வழங்குவது காண்க. ‘இவரது இயற்பெயர் இறந்துபோயிற்று. ஒருகால் வேந்தரிடையே போர்க்குரிய பகைமையுண்டாயிற்று. இரு வேந்தரும் போர்க்கு வேண்டும் படைகளைத் தொகுத்தனர். இருவரும் போர்க்கெழாவாறு தகுவன கூறுதற்குப் பார்ப்பானொருவன் தூதனாய்ச் சென்றான். முற்பட்ட வேந்தனையடைந்து தக்கது கூறி அவனது போர் வேட்கையை மாற்றினான். பின்பு அவனுடைய மாற்றானாகிய வேந்தனை யடைந்தான். அதைற்குள், நாட்டில் போர்ப் பறை முழங்கிற்று. தானை வீரரும் தொகுவாராயினர். பகைவர் மதில்கோடற்பொருட்டு ஏணிகளும் மதில் காத்தற்பொருட்டுச் சீப்புகளும் நன்கமைந்திருந்தன. தூது போந்த பார்ப்பான் இரவில் வேந்தனைக் கண்டு |