| உரை: களிறு பொரக் கலங்கும் - களிறு படிந்துழக்கக் கலங்கிச் சேறாகும்; அரிதுண் கூவல் - உண்ணும் நீர் அரிதாகிய நீர்நிலையும்; முள் கழல் வேலி இங்குடிச் சீறூர் - முள்ளையுடைய கழற்கொடியாலாகிய வேலி சூழ்ந்த அழகிய குடிகளைமயுடைய சிறறி வூரில் வாழும்; ஒலிமென் கூந்தல் ஒண்ணுதல் அரிவை - தழைத்த மெல்லிய கூந்தலையும் ஒள்ளிய நுதலையுமுடைய அரிவையாவாள்; ஒடியாது நடுகல் கைதொழுது பரவும் - நாளும் தவிராமல் நடுகல்லைக் கைகூப்பித் தொழுது வழிபடா நின்றாள்; விருந்தெதிர் பெறுக யான் - விருந்தினர் எதிர்வரப் பெறுவேனாக யான்; என்னையும்-என் கொழுநனும்...வேந்தனொடு நாடுதரு விழுப்பகை எய்துக என - வேந்தனும் மண்ணாசையால் அவன் உண்டாக்கும் பெரிய போரும் உண்டாகுக என்று; எ - று.
கலங்கும்கூவல், வேலிச்சீறூர் என நிரல்நிறையாகஇயைக்க. கழல் முள்வேலியெனக் கிடந்தவாறே கொண்டு கழற் கொடியாகிய முள்ளையுடைய வேலி யென்றுரைப்பினுமமையும், ஒடியாது பரவும் என இயையும். எதிர்பெறுதல் - எதிர்கொண்டோம்புதல். இல்லற மகளிர்க்கு நல்லறமாகலின், விருந்தெதிர் பெறுகதில் லெனவும், வேந்தனும் நாடு தரும் பகையும் உண்டாவதால் கணவற்கு மறப்புகழும், விருந்தெதிர் பெறுதல் முதலிய அறங்கட்கு வேண்டும் பொருளும் உண்டாதலின் விழுப்பகை யெய்துகவெனவும் விரும்பிப் பரவினாள். பகை: ஆகுபெயர் மாறுகொள்மன்னருமவாழியர் நெடிதே (புறம். 172) என்றுபிறரும் விழைந்தவாறுகாண்க. சீறூர் அரிவை. பெறுக, எய்துகவென் ஒடியாது பரவும் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. தில், விழைவின்கண் வந்தது.
விளக்கம்: முதில் முல்லையாவது அடல்வே லாடவர்க் கன்றியும் அவ்வில், மடவரன் மகளிர்க்கு மறமிகுத்தன்று (பு. வெ. மா. 8:21) என வரும். மறக்குடிமக்கள் வாழும் ஊராதலின், அங்குடிச்சீறூர் என்றும், நடுகல்லைத் தெய்வமாகக் கருதி வழிபடுதல் மரபாதலின், நடுகல் கைதொழுது ஒடியாது பரவும் என்றும் கூறினார். அடும்புகழ் பாடியழுதழுது நோனா, திடும்பையுள் வைகிற்றிருந்த - கடும்பொடு, கைவண் குருசில்கற்கைதொமூஉச் செல்பாண, தெய்வமாய் நின்றான் திசைக்கு (பு. வெ. மா. 10:13) என்று பிறருங் கூறுதல் காண்க. கற்புங் காமமும் நற்பர் லொழுக்கமும், மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின் விருந்துபுறத் தருதலும் சுற்ற மோம்பலும். பிறவு மன்ன கிழவோண் மாண்புகள் (தொல். கற். 11) என்று ஆசிரியர் கூறுதலின், விருந்தெதிர் பெறுகதில் யானே என விருந்தோம்பல் விதந்து கூறப்பட்டது. பகையை வேறலால் நாடும் செல்வமும் பெறப்படுதலால். நாடு தரு விழுப்பகை யென்றார். எஞ்சா மண்ணாசைகொண்டு செய்யும் வஞ்சிப்போர் நாடுதரு பகையெனப்படுகிறது. மறக்குடி மகளின் செயலை வியந்து கண்டோர் கூறியது. ஏட்டில் இதன் அடியில் இது கண்டோர் கூற்று ்என்றொரு குறிப்புத் காணப்படுகிறது. இப் பாட்டு இடையே சிதைந்துளது. |