| சுருள்களில் தங்குதலால்; நீரும் புல்லும் ஈயாது - நீரையும் புல்லையும் கொடாமல்; உமணர் - உப்பு வாணிகரால்; யாரும் இல் ஒரு சிறை - யாருமில்லாததோரிடத்தே; முடத்தொடு துறந்த வாழா வான் பகடு ஏய்ப்ப - முடம்பட்டதனால் கைவிடப்பட்ட வாழும் திறனில்லாத பெரிய எருதுபோல; தெறுவர் பேருயிர் கொள்ளும் - பகைவருடைய மிக்க உயிர்களைக் கவர்வான்; அது கண்டு - அச்செயலைக் கண்டு; வெஞ்சின யானை வேந்தனும் - வெவ்விய சினத்தையுடையயானைவேந்தனும்; இக்களத்து எஞ்சலில்சிறந்தது பிறிது ஒன்ற இல்லென் - இக்களத்தில் இறத்தலினும் சிறந்த செயலொன்று வேறியாதும் இல்லையென்று கருதியும்; பண்கொளற்கு அருமை நோக்கி - புலவர் பாடும் பாட்டை வேறு வகையால் பெறுதலின் அருமை நோக்கியும்; நெஞ்சற வீழ்ந்த புரைமையோன் - தன்னுயிர்மேல் ஆசையின்றி வீழ்ந்து பெருமை யுடையனாயினான்; எ - று.
பட்டோன், முதுவீயரியல் சுரியலில் தங்குதலால், உதுக்காண், வம்பலன்போலத் தோன்றும்; வான்பகடேய்ப்பத் தெறுவர் பேருயிர் கொள்ளும்; அது கண்டு வேந்தனும் இல்லெனவும் நோக்கியும் வீழ்ந்த புரைமையோன்; ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ என மாறிக் கூட்டி வினை முடிவு செய்க. உமணரால் துறக்கப்பட்ட வான்பகடுதான் இருக்கும் சூழலில் எத்தகையு புல் கிடைப்பினும் அதனை யுண்டொழித்தல்போல இவனும் தன்னைச் சூழநின்ற பகைவர் எத்துணைப் பெரியராயினும் அவரைக் கொன்று மேம்பட்டானென்பார் வான்பகடேய்ப்பத் தெறுவர் பேருயிர் கொள்ளும் என்றார். பேருயிர், தன்னை யொப்பாரும் மிக்காருமாகிய பகைவருயிர். உமணர் பகட்டைத் துறந்ததற்குத் காரணம் கூறுவார், முடத்தொடு என்றார். ஒடு, ஆனுருபின் பொருட்டு, வாழா வான் பகடென்றது, தன் சூழலிற்பட்டவை யொழிந்தபின் பகடு இறப்பது போலத் தன்னை யெதிர்ந்தவர் பட்டபின் தானும் பட்டான் என்பது எய்துவித்தது. முடத்தொடு துறந்த பகடென்ற உவமையாற்றால் களிறொடுபட்ட இவனும் புண்பட்டு நின்ற தெறுவர் பேருயிர் கொண்டானென்றறிக. இன்னோரன்ன அரிய செயல் புலவர் பாடும் புகழ்க்குரிமையும் அருமையும் உடையதாதலின், பண்கொளற் கருமை நோக்கி யென்றார். தன்னெஞ்சைத் தனக்காக்காது தன்பொருட்டுயிர்கொடுத்தானுக்காக்கி வீழ்ந்ததனால், பெறுவதுபற்றி, புரைமையோன் என்றும் கூறினார். வீழ்ந்த வென்னும் பெயரெச்சம் காரணப்பொருட்டு ஆக்கவினை விகாரத்தாற்றொக்கது.
விளக்கம்: களிற்றுடனிலையாவது, ஒளிற்றெஃகம் படவீழ்ந்த, களிற்றின்கீழ்க் கண்படுத் தின்று (பு, வெ. மா. 7:20) என வரும். தானை யானை (தொல்.புறத்.14) என்ற சூத்திரத்துக் களிறெறிந்தெதரிந்தோர் பாடு என்றதற்கு இளம்பூரணர் இதனை யெடுத்துக் காட்டுவர். களிற்றின்கீ்ழ் வீழ்ந்த உருச் சிதைந்து போனமையின், வம்பலன் போலத் தோன்றும் என்றார். ஏனைக் காலத்தாயின் மழையாலும் பனியாலும் நனைந்து மயிர் படிந்து வேறுபடத் தோன்றுவது பற்றி, வேனிற் காலத்துத் தோன்றும் |