| பாணனே, சீறூர் மன்னன் சிறியிலை எஃகம் - சிறிய ஊரையுடைய சிற்றரசனது சிறிது இலையையுடைய வேல்; வேந்தூர் யானை ஏந்து முகத்தது - பெருவேந்தன் ஊர்ந்துவந்த யானையின் உயர்ந்த நுதலிற்றைத்து அதன்கண்ணே அழுந்திக் கிடந்தது; வேந்து உடன்று எறிந்த வேல் - பெருவேந்தன் சினந்தெறிந்த வேல்; என்னை சாந்தார் அகலம் உளம கழிந்தன்று - என்னிறைவனுடைய சாந்தணிந்த மார்பிற்றைத்து உருவிச்சென்றுது; உளம் கழி சுடர்ப்படை யேந்தி - மார்பினுள் உருவிய ஒளிவிளங்கும் வேலைப் பிடுங்கிக் கையிலேந்தி; நம் பெருவிறல் - நம்முடைய மிக்க வலி படைத்தவனான தலைவன்; ஓச்சினன் துரந்த காலை - ஒக்கிச் செலுத்தியவிடத்து; மற்றவன் குஞ்சரமெல்லாம் - பகைவனான பெருவேந்தனுடைய களிறுகளெல்லாம்; புன்றலை மடப்பிடி நாண -புல்லிய தலையையுடைய இளமையான பிடியானைகள் கண்ட நாணுமாறு; புறக்கொடுத்தன் - பின்னிட்டு அஞ்சியோடின; எ - று.
பாண, எஃகம் முகத்தது; வேல் கழிந்தன்று; ஏந்தி ஓச்சினன் துரந்த காலை, குஞ்சரமெல்லாம் பிடி நாணப் புறக் கொடுத்தன என வினைமுடிவு செய்க. சீறூர் மன்னன் எஃகம், பேரூர் வேந்தன் யானையின் நெற்றியில் பிடு்கவாராதபடி அழுந்தியதென்றதற்கு “ஏந்து முகத்தது” எனவும், வேந்தன் வேல் எளிதிற்பிடுங்கி எறியும் அளவில் மார்பிற் சென்ற தென்றற்கு “உளங்கழிந்தன்” றெனவும் கூறினார். களிறுகளின் புறக்கொடை பிடியானைகட்கு நாணம் விளைத்ததென்றதனால் வேந்தன்பட்ட இளிவரவு சொல்லவேண்டாதாயிற்று. என்னையென்றும் நம் பெருவிறல் என்றும் கூறியதனால், இக் கூற்று மனையோள் கூற்றாமென வுணர்க. இன்றேல் மூதின் முல்லை யாகாமை யறிக.
விளக்கம்: மூதின்முல்லையாவது, “அடல்வே லாடவர்க் சுன்றியு மவ்வில், மடவரன் மகளிர்க்கும் மறமிகுத் தன்று” (பு. வெ. மா. 8:21) என வரும். சீறூர் மன்னன் எனப்பட்டவன் தன் கணவன் என்பது தோன்ற, “என்னை” என்றும், “நம் பெருவிறல்” என்றும் ஆர்வமுடைமை விளங்கக் கூறினாள். இக் கூற்றில் வேந்தனெறிந்த வேல், தன் கணவன் மார்புளங் கழியச் சென்றது கூறுங்கால் அவல வுணர்வின்றி மறவுணர்வே மிக்கு நிற்பக் கூறுவது மனையோளது மற நிலையை எடுத்துக் காட்டுகிறது. நேர் நின்று எறிந்திருப்பானாயின், வேந்தன் ஒழிவது ஒருதலை யென்பது “வேந்துடன்றெறிந்த வேல்” என்றார். உடன்றெறிந்த வேல் என்றதனால் வேல்பட்டு யானை வீழ்ந்ததென்றும், எனவே வேந்தன் சினந்து தன் வேலைச் செலுத்தினனென்றும், அது தானும் மார்பில் நெடிது செல்லாது, சீறூர் மன்னனால் வாங்கி மீள மாற்றார்மேல் எறியப்பட்டதென்றற்கு, “உளங்கழி சுடர்ப்படையேந்தி ஓச்சினன்” என்றும் கூறினாள். வேந்தூரும் பேரியானை வீழ்ந்தது கண்ட ஏனைக் களிறுகள் அஞ்சிப் புறக்கொடுத் தோடின வென்றும், அது கண்டு மடப்பிடிகள் நாணினவென்றும் கூறியது மறக்குடி மகளின் மற மாண்பைக் சிறப்பித்து நிற்கிறது. |