309. மதுரை இளங்கண்ணிக் கோசிகனார் இளங்கண்ணி யென்பது இவரின் தந்தை பெயர், முடத்தாமக் கண்ணியார், புல்லாளங் கண்ணியார் எனச் சான்றோர் பலர் இருந்திருத்தல்போல இளங்கண்ணியார் என்றொருவர் இருந்துள்ளார். இவர் தந்தை சிறப்புடைய சான்றோரன்மையால், இளங்கண்ணியாரென்று கூறப்பட்டது இளங்கண்ணி யென்றே கூறப்பட்டனர்போலும். இவர்க்குப் போர் வீரரது மறம் பாடுவதில் பெருவிருப்புண்டு. இவர் பாடினவாகப் பல பாட்டுகள் கிடைத்திலவாயினும் இவ்வொரு பாட்டே போதிய சான்றாகிறது. ஒரு வீரன் போரில் பகைவர் பலரையும் களிறுகள் பலவற்றையும் கொன்று குவிப்பதனால் மட்டில் சிறப்புடையனாக லில்லை; அஃது வீரர் பலர்க்கும் பொதுவாயமைந்த செயலே; தன் போர் நலத்தால் கேட்ட பகைவர் உள்ளத்தே உட்குண்டமாறு மேம்படும் ஒளியைப் பெறுவதே சீரிதாம் என்று இப்பாட்டில் விதந்தோதுவது, இவர். அறத்தாற்றிற் போராற்றிப் புகழ் பெறும் மறவர் மறத்தை நயப்பவரென்ற நலத்தை நாமறிய விளக்குகின்றது.
| இரும்புமுகஞ் சிதைய நூறி யொன்னார் இருஞ்சமங் கடத்த லேனோர்க்கு மெளிதே நல்லரா வுறையும் புற்றம் போலவும் கொல்லேறு திரிதரு மன்றம் போலவும் | 5. | மாற்றருந் துப்பின் மாற்றோர் பாசறை | | உளனென வெரூஉ மோரொளி வலனுயர் நெடுவே லென்னைகண் ணதுவே. |
திணை: தும்பை: துறை: நூழிலாட்டு. மதுரை இளங்கண்ணிக் கோசிகனார் பாடியது.
உரை: இரும்பு முகம் சிதைய ஒன்னார் நூறி - இரும்பாலாகிய வேல் வாள் முதலிய படைகள் வாய்மடிந்து ஒடியும்படியாகப் பகைவரைக் கொன்று; அருஞ்சமம் கடத்தல் - அவரது கடத்தற்கரிய போரை வஞ்சியாது செய்து வெல்லுதல்; ஏனோர்க்கும் எளிது - ஏனை வீரர் எல்லாருக்கும் எளிதாகும்; நல்லரா உறையும் புற்றம் போலவும் - நல்லபாம்பு வாழும் புற்றுப் போலவும்; கொல்லேறு திரிதரும் மன்றம் போலவும் - கண்டாரைக் கொல்லும் ஆனேறு திரியும் மன்றுவெளி போலவும்; மாற்றருந் துப்பின் மாற்றோர் - கெடுதற்கரிய வலியினையுடைய பகைவர்; பாசறை உளன் என வெரூஉம் ஓர் ஒளி - பாசறைக் கண்ணே உள்ளான் எனக் கேட்டு நெஞ்சு நடுங்குதற்கேதுவாகிய சிறந்ததோர் - ஒளியானது; வலன் உயர் நெடுவேல் என்னை கண்ணதே - வெற்றியால் உயர்ந்த நெடிய வேலையுடைய என் தலைவன் பாலே யுளது; எ - று.
என்னை கண்ணதே என எடுத்தோதுதலின் ஏகாரம் தேற்றம். மன்றம், கொல்லேறு தழுவுதற்கு ஆயர் சமைக்கும் பொதுவிடம். |