பக்கம் எண் :

217

     

ஒளியாவது “தான் உளனாய காலத்து மிக்குத் தோன்றுதலுடைமை” என்பர்
பரிமேலழகர்; “ஒளி  ஒருவற்குள்ள  வெறுக்கை”  (குறள் 971) என்பர்
திருவள்ளுவர். கடத்தல் ஏனோர்க்கும் எளிது; ஒளி என்னை கண்ணதே
என வினைமுடிவு செய்க.

      விளக்கம்: இரும்பென்றது ஆகுபெயரான் அதனாற் செய்யப்பட்ட
வேல், வாள் முதலிய படைகளைக் குறித்து நின்றது. ஒன்னார் அருஞ்சமம்
என்றது, ஒன்னார் செய்யும் வெல்லுதற்கரிய கடும்போர் என்பதுணர நின்றது.
ஏனோர் ஒளியில்லாத  ஏனை  மறவர். வலிமிக்க  போர்  விலங்குக்கும்
ஒளியில்லாத போர் மறவர்க்கும் வேறுபாடின்மையின், விலங்குபோலப்
பொருது வேறல் மக்களாகிய மறவர்க்கு எளிதென்றது, வலியும் வெற்றியும்
உடையனாதலோடு மாற்றார் தன்னுண்மை கேட்ட துணையானே அஞ்சி
நடுங்கத்தக்க சிறப்புடையனாதல் அரிதென்பது வற்புறுத்தற்கு இச்சிறப்பு
ஒளியெனப்படுகிறது.  ஒடுங்கி  யிருக்குங்கால்  உளதாகும்  ஒளிக்குப்
பாம்புறையும் புற்றும், போரெதிர்ந்து நிற்க வுளதாகும் ஒளிக்குக் கொல்லேறு
திரியும் மன்றமும் உவமமாயின். “வரிமிடற்றரவுறை புற்றத்தற்றே நாளும்,
புரவலர் புன்கண் நோக்காது இரவலர்க் கருகாதீயும் வண்மை, உரைசால்
நெடுந்தகை யோம்பு மூரே” (புறம். 329) எனச் சான்றோர் கூறுவது காண்க.
கொல்லேறு  திரியும்  மன்றம்  அச்சந்தரும்  தன்மைத்   தென்பதை,
“கொள்வாரைக் கொள்வாரைக் கோட்டுவாய்ச் சாக்குத்திக் “கொள்வார்ப்
பெறா அக் குரூஉச் செகில் காணிகா, செயிரிற் குறை நாளாற் பின்சென்று
நாடி, உயிருண்ணுங் கூற்றமும் போன்ம்” (கலி. 105) என்பதனாலறியலாம்.
நூழிவாட்டாவது, “களங்கழுமிய படை உளங்கழிந்த வேல்பறித் தோச்சின்று”
(பு. வெ. மா. 7, 16) என வரும்: இப் பாட்டு நூழிலாட்டின் விளைவாகப்
பிறந்த ஒளியுணர்த்தலின், நூழிலாட்டெனப்பட்டதெனக் கொள்க.

310. பொன் முடியார்

     வேந்தரிருவர்  தும்பை  சூடிப் போருடற்றினாராக, அப்போரில்
முன்னாளில் கடுஞ்சமர் புரிந்து வீழ்ந்த பெருவீரனொருவனுடைய மகன்
பகைவர் களிறுகள் பலவற்றைக் கொன்றான். அக்காலை, பகைவர் எறிந்த
அம்பொன்று அவன் மார்பில் பாய்ந்து தைத்துக்கொண்டது. ஆயினும்
அவன் அதனைப் பொருட்படுத்தாது மேலும் போரை நடத்தி முடிவில் தன்
கைக்கொண்ட கேடகம் கீழ்ப்பட அதன்மேல் வீழ்ந்தான். அதனைக் கண்ட
தாய், அவனது பிள்ளைப்பருவ நிலைமையை நினைந்து வருந்தினாள். சிறிது
போதில் மறக்குடி மகளாகிய அவள் தன் மனத்தைத் தேற்றி, “அனமேஇ
இவன் பிள்ளைப் பருவத்தில் வள்ளத்தில் பாலேந்தி யுண்பித்தபோது
உண்ணானகக்  கண்டு  சிறு  கோலை  யெடுத்து  ஓச்சின காலையில்
நம்மைக்கண்டு அஞ்சினான்: இப்போது, இவன் முன்னாள் போரில் வீழ்ந்த
பெரவிரற்கு மகனாதற்கேற்ப, பல   களிறுகளைக்  கொன்றதனோடு
அமையானாய், தன் கேடகம் கீழ்ப்படத் தான்  அதன்மேல்  வி்ாந்து
கிடக்கின்றான்:   இடையே   தன்   மார்பிற்  புண்ணில் பகைவர் எய்த
அம்பொன்று தைத்திருப்பதைக் காட்டியபோது யான் இதனைக் கருதிற்றிலேன்
என்கின்றான்: இவன் மறம் இருந்தவாறென்னே! எனத் தனக்குள் வியந்து
கூறிக்கொண்டான். இதனை நம் சான்றோராகிய பொன்முடியர் இப்பாட்டினுள்
அழகுறப் பாடியுள்ளார்.