314. ஐயூர்முடவனார் போரில் புகழ் உண்டாகப் பொருது வென்றி மேம்பட்ட வீரர் தலைவனொருவனைப்பற்றி அவனுடைய வீரர்கள் தம்முட் பாராட்டிப் பேசிக்கொண்டனர். அதனையறிந்த ஐயூர் முடவனார் இப்பாட்டில் அவர் கூற்றைத் குறி்த்துள்ளார். அத்தலைவன் போலவே அவன் மனைவியும் புகழ் புரியும் நன்மாண்புடையவள். போர் முனையில் அவன் தானைக்கு வரம்பாய் நின்று பொரும் வேல் வன்மையால் நெடும்புகழ் பெற்றவன். அவனைப் போல அவன் இருக்கும் ஊரவருள் முன்னோர் பலர் கடும்போர் உடற்றிக் கன்னின்றமையின், நடுகற்கள் பல அவன் ஊரில் உண்டு. ஊரில் இருக்குங்கால் அவன் ஊர் வாழும் குடிகளுள் ஒருவனாய்த் தன் குடிக்கடனை யாற்றுவான். போர் வரின் படையாய் நிற்கும் அவன, போரில் தன் வேந்தன் துன்பமெய்துவானாயின், அக்காலை கொடியும் படையுங் கொண்டு மண்டி மேல்வரும் பகைவர் தானைக்குக் கற்சிறைபோல் தடையாய் நின்று வென்றியெய்தும் விறல்மிக்கவன் என இதன்கட் கூறியுள்ளார். | மனைக்குவிளக் காகிய வாணுதல் கணவன் முனைக்குவரம் பாகிய வென்வே னெடுந்தகை நடுகற் பிறங்கிய வுவலிடு பறந்தலைப் புன்காழ் நெல்லி வன்புலச் சீறூர்க் | 5. | குடியு மன்னுந் தானே கொடியெடுத்து | | நிறையழிந் தெழுதரு தானைக்குச் சிறையுந் தானேதன் னிறைவிழு முறினே. |
தினணயும் துறையு மவை. ஐயூர் முடவனார் பாடியது.
உரை: மனைக்கு விளக்காகிய வாணுதல் கணவன் - மனையின்கண் ஒளி செய்யும் விளக்குப்போலத் தன் மாட்சியால் புகழாகிய விளக்கத்தைச் செய்யும் ஒளிபொருந்திய நுதலையுடைய வட்குக் கணவனும்; முனைக்கு வரம்பாகிய வென்வேல் நெடுந்தகை - போரில் தன் படைக்கு எல்லையாய் நின்று காக்கும் வெற்றி பொருந்திய வேலேந்திய நெடிய புகழையுடையவனு மாகயி எம் தலைவன்; நடுகல் பிறங்கயி உவலிடு பறந்தலை - நடு கற்களால் உயர்ந்த தழைகள் உதிர்ந்த பறந்தலைகளையும்; புன்காழ் நெல்லி வன்புலச் சீறூர் - புல்லிய கொட்டையையுடைய நெல்லி மரங்கள் நிற்கும் புன்செய் நிலங்களையுமுடைய சீறூரின் கண் வாழும்; குடியும் தானே - குடிகளுள் ஒரு குடியாகி இருப்பவனும் அவன்; தன் இறைவிழுமுறின் - போரில் தன் வேந்தன் துன்பமுறுங்காலமாயின் அக்காலத்தே; கொடி யெடுத்து நிறையழிந்து எழுதரு தானைக்கு - கொடியை யுயர்த்தி நிறுத்தப்படும் நிறைக்கடங்காது முந்துற் றெழுந்து வரும் பகைவர் படைக்கு; சிறையும்தானே - மேற்செல்லாதபடியாகக் குறுக்கிட்டுத் தடுத்து நின்று காக்கும் அணையாய் நிற்பவனும் - அவனேயாம்; எ - று. |