பக்கம் எண் :

237

     

புணர்நிலைக்கண் விளையாட்டயரக் காண்பனேல் வேட்டுவனாகிய கணவன்,
கலையை யருளாது வீழ்த்துவன் என்றுணர்ந்து அவன் உறக்கத்தினீங்கி
யெழுவனோ  எனவும்,  தன்  வரவு  காணின்  புதிதுவந்த கலைமான்
அஞ்சியோடியவழிப் பிணைமானது புணர்நிலை யின்பம் சிதையுமெனவும்
அஞ்சி ஒருபுடையில் ஒடுங்கினள். அவளது ஒடுக்கம், திணை யுணங்கலைக்
கானக்  கோழியும்  இதலும்  அஞ்சாது கவர்ந்துண்டற்கு இடந்தந்தது,
கானக்கோழி முதலியவற்றின் இறைச்சியும்  ஆரல்மீன் கறியும் ஏனை
மான்   முதலியவற்றின்   இறைச்சித்  துண்டமும் சந்தன விறகிற் சட்டு
விருந்தினர்க்களித்து ஓம்புவர் எனக் கானவருடைய விருந்தோம்புந் திறன்
கூறியவாறு. இதனைத் தொகுத்துத் சுருங்கவுரையாது விரித்தோதியது கேட்கும்
பாணற்கு உள்ளத்தில் வேட்கை  எழுப்பி,  உரைக்கப்படும்  உரைவழி
நிற்கப்பண்ணுவது குறித்ததாம். சந்தனவிறகிற் சுடுவது நறுமணம் ஊட்டற்கென
வுணர்க தங்கியவழி. இவ்விறைச்சி வகையுடனே, பகைப் புலத்துப் பெறும்
உயரிய பொருளையும் தரப்பெறுதல் ஒருதலையென்பார், “தங்கினை
சென்மோ” எனவும், “அருகாது ஈயும் வண்மை உரைசால் நெடுந்தகை”
யெனவும் கூறினார். போரிடையே செய்யப்படும் அருஞ் செயலை வியந்து
பாராட்டி வேந்தன் நல்கும் சிறப்பும் உளப்பட “விழுக்கூழ்” என்றார்.

321. உறையூர் மருத்துவன் தாமோதரனார்

     சோழன் குராப்பள்ளித் துஞ்சிய திருமாவளவன், பிட்டங்கொற்றன் என்ற
இவர்களைப் பாடிச் சிறப்பெய்தியவர் இச் சான்றோர். இவர் உறையூர்ன்கண்
இருந்து மருத்துவத்தொழில் செய்துவந்தவராதலால், உயையூர் மருத்துவன்
தாமோதரனார் என இவர் கூறப்படுகின்றார். போரில் புகழுண்டாகப் பொருது
வாகை மிலைந்து சிறப்புற்ற தலைவன் ஒருவனைப்பற்றிப் பாணரிடையே
பேச்சுண்டாக,  அதனைக்  கேட்டிருந்த  தாமோதரனார்  அவர்கட்கு
விடைகூறுவார்போல இப்பாட்டைப் பாடியுள்ளார். இதன்கண் தலைவனது
ஊர் அமைந்த நாட்டின் இயல்பை விரித்துரைப்பாராய், அந்த நாடு நன்செய்
வளமின்றிப் புன்செய் வளமிக்கதென்றும், அங்கே வரகே மிகுதியும்
விளைவதென்றும், வரகுக் கொல்லைகளில் வாழ்வனவற்றுள் ஒன்றான
பூழ்ச்சேவல் வரப்புகளில் வாழும் சுண்டெலிகளைப் பிடித்துத் தின்னுமாற்றால்
அவற்றை யலைக்குமென்றும், அவற்றிற்கஞ்சும் எலிகள் ஓடிக் கொல்லையில்
உதிர்ந்து கிடக்கும் தோனைகளிடையே பதுங்குமென்றும் சொல்லி, இத்தகைய
நாட்டிடையுள்ள ஊரையுடைய தலைவன் சென்னி, போரில் பகைவருடன்
பொருதலால் வாள்வடுவால் சிறப்புற்றுத் திகழுமென்றும், அவன் போரைப்
பெரிதும் விரும்பும் வல்லாண்மையுடைய னென்றும் எடுத்துரைத்துள்ளார். இப்
பாட்டு இடையே சில அடிகள் சிதைந்துள்ளது.

 பொறிப்புறப் பூழின் போர்வல் சேவல்
மேந்தோல் களைந்த தீங்கொள் வெள்ளெட்
கூளகிடை யுணங்கற் செவ்வி கொண்டுடன்
வேனிற் கோங்கின் பூம்பொகுட் டன்ன
 5.குடந்தையஞ் செவிய கோட்டெலி யாட்டக்