| இவ்வகையால் போர் செய்தலில் வன்மைமிக்க சேவலை, பூழின்போர்வல் சேவல் என்றார். குறும்பூழ்களைப் போரிற் பயிற்சி செய்து விடுவோரைக் குறும்பூழாடிகள் என்ப. குறும்பூழ்க்கு அரிசி யுண்ணத் தருதலும், பச்சிலை பிசைந்து தடவுதலும் அவ்வப்போது அதற்கு மந்திரம் பல வோதுவதும் உண்டு. குறும்பூழ்களுள் வெல்லும் திறலுடையவற்றிற்கு இலக்கணங்களும் பண்டை நாட்புலவர் கண்டிருந்தனர். குறும்பூழைக்காடை யென்றும், காடையின் வேறாகிய கவுதாரி யென்றும் கூறுவர். நன்கு நனைத்துத் தேய்த்து மேல்தோலை நீக்கிய வெள்ளெள்ளை ஈரம் புலரச் சுளகிடைப் பரப்பி உணக்குப. உணக்கினாரது அற்றம் நோக்கி வெள்ளெள்ளைக் கவர்தலின், செவ்வி கொண் டென்றார். செவ்வி யுணங்கல் கொண்டு எனக் கொண்டு சுளகிடைச் செவ்வியுண்டாக உணக்கியதனைக் கவர்ந்து கொண்டென வுரைப்பினும் அமையும். குடந்தை, வனளவு. முடம் முடந்தை (பதிற் 32) யென வருதல்போல, குடம் குடந்தையென வந்தது; குடந்தையஞ் செவிய (அகம். 284) என வருதல் காண்க. இதனைப் பெயர்த் திரிசொல்; இனிப் பழ வழக்கென்பது மொன்று (பதிற். 27) என்பர் பதிற்றுப்பத்தின் பழைய வுரைகாரர். வேனிற்காலத் தரும்பும் கோங்கின் அரும்மபு சுண்டெலியின் காதுக்கு உவமை. பாணன் தங்கிச் செல்வானாயின் அவற்குத் தரப்பெறு வனவற்றை யுரைக்கும் அடிகள் சிதைந்துள்ளன. வாட்போர் செய்வார்க்குத் தலையிற் புண்ணுண்டாதல் இயல்பாதலின், வாழ்வடு விளங்கிய சென்னி என்றார் திருக்கோயிலூர் வட்டத்தின் மேலைப்பகுதியிற் காணப்படும் கல்வெட்டுக்களுள் வாட்போர் செய்து தலையிற் புண்பட்ட வீரர்களைக் குறித்திருப்பது காணத்தக்கது.
322. ஆவூர்கிழார் ஆவூர்கிழாரது இயற்ெ்பயர் தெரிந்திலது. ஆவூரென்ற பெயருடைய ஊர்கள் தஞ்சை மாநாட்டிலும் வடவார்க்காடு மாநாட்டிலும் உள்ளன. திருவண்ணாமலைப் பகுதியிலுள்ள ஆவூரே இச்சான்றோரது ஊராக இருக்கலாமென எண்ணுதற்கேற்ப, முல்லை நிலத்தையே இவர் சிறப்பித்துப் பாடியிருக்கின்றார். இவர்க்கு மகனாரொருவருளர். என்பது. ஆவூர்கிழார் மகனாரான கண்ணனார் பாடிய பாட்டொன்று அகத்தில் காணப்படுகிறது. அதுவும் குறிஞ்சி நிலச் சிறப்பை யெடுத்துக் கூறுகிறது. தஞ்சை மாநாட்டு ஆவூர் காவிரியின் தென்கரையில் உளது. அஃது ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தராற் சிறப்பித்துப் பாடப்பெற்றதெனினும் மருத வளஞ்சார்ந்து அண்ணாமலை நாட்டு ஆவூரின் வேறுபடுகிறது. ஆவுர்கிழார் பாடியதாக இந்த ஒரு பாட்டுத்தான் இந் நூலில் நமக்குக் கிடைத்துள்ளது. இதன்கண்வெள்வேல் வீரனொருவன் போரில் கடுஞ்சமம் புரிந்து பகைவேந்தர் அவனை நினைக்குந்தோறும் அச்சம் மிகுந்து உறங்காக் கண்ணராய்த் துன்ப முழக்குமாறு வென்றி மேம்பட்டான். அவனது ஊரைச் சிறப்பிக்கின்றார் ஆசிரியர் ஆவூர்கிழார். அந்த ஊர் வன்பலமாகிய முல்லை நிலத்தில் உளது; அந்த நாட்டு வில்லேருழவருடைய சிறுவர்கள் வரகுக் கொல்லைகளில் வரசினது அரிகாலைப் பொருந்தியிருக்கும் காட்டெலிகளை வேட்டமாடுவர்; எலியொன்றைக் கண்டதும் அவர்கள் வில்லை வளைத்து ஆரவாரிப்பர்; அவ்வோசை கேட்டதும் அருகே மேயும் குறுமுயல்கள் அண்மையில் அவர்கள் மனைமுற்றத்தில் இருக்கும் கரிய மட்கலங்களிடையே, அவை யுருண்டோடி யுடைந்து கெடுமாறு |