பக்கம் எண் :

251

     

327. மூதின்முல்லை

     இப்பாட்டைப் பாடிய ஆசிரியர் பெயர் தெரிந்திலது. மூதின்முல்லை
யாவது “அடல்வே லாடவர்க் கன்றியு மவ்வில், மடவரல் மகளிர்க்குமற
மிகுத்தன்று” எனப் புறப்பொருள் வெண்பாமாலை கூறும். சீறூர்த் தலைவன்
ஒருவன் சிலவாய் விளைந்த வரகையறுத்துக் காலால் மிதித்துக்
கொண்டதைக் கடன்காரர்க்குக் கொடுத்து எஞ்சியதைப் பசித்துவந்த
பாணருக்கு அளித்தான்; அவரும் உண்டு நீங்கினாராக, பின்வந்த
சுற்றத்தாருடைய  வறுமையைத் தீர்த்தல் வேண்டிப் பிறரிடம் வரகு கடன்
பெறுவானாயினான்.இவ்வாறு வறுமை களையும் செயலில் வெற்றி மேம்படும்
இத் தலைமகன், பேரரசர் பொர வரினும், அவர் படையை எதிர் நின்று
தாங்கி வெல்லும் வீறுடையனாவான் என்று அவனது மற மிகுதியை
இப்பாட்டு எடுத்துக் கூறுகிறது.

 எருதுகா லுறாஅ திளைஞர் கொன்ற
சில்விளை வரகின் புல்லென் குப்பை
தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில்
பசித்த பாண ருண்டுகடை தப்பலின்
 5.ஒக்க லொற்கஞ் சொலியத் தன்னூர்ச்
 சிறுபுல் லாளர் முகத்தளவ கூறி
வரகுகட னிரக்கு நெடுந்தகை
அரசுவரிற் றாங்கும் வல்லா ளன்னே

     திணையும் துறையு மவை.............

     உரை: எருது கால உறாது - எருதுகளைப் பிணித்து அவற்றின்
காற் கீழ்ப் பெய்து கடாவிடுதலின்றி; இளைஞர் கொன்ற  சில்விளை
வரகின் புல்லென்  குப்பை -  இளையர்கள்  காலால் மிதித் தெடுத்த
சிலவாக விளைந்த புல்லிய குவியவில்; தொடுத்த கடவர்க்குக் கொடுத்த
மிச்சில் - வளைத்துக்கொண்ட  கடன்  காரருக்குக் கொடுத்ததுபோக
எஞ்சியதை; பசித்த பாணர் உண்டு கடை தப்பலின் - பசித்து வந்த
பாணர் உண்டு வெளிகேினாராகப் புறங்கடை வறிதாகலின்; ஒக்கல்
ஒற்கம் சொலிய - வறுமையுற்று வந்த சுற்றத்தாருடைய வறுமையைக்
களைய வேண்டு; தன்னூர்ச் சிறு புல்லாளர் முகத்து அளவ கூறி -
தன்னூரில் வாழும் சிறிய புல்லாளர் முன்னே தனக்கு வேண்டுமளவைச்
சொல்லி; வரகு கடன் இரக்கும் - வரகினைக் கடனாகக் கேட்டுப் பெறும்;
நெடுந்தகை நெடிய புகழுடைய தலைவன்; அரசுவரின் தாங்கும் வல்லாளன்
- பெருவேந்தர் போர் குறித்து வருவாராயின் அவரது நெடும்படையைத்
தாங்கி வெல்லும் வல்லாண்மையால் வீறுடையனாவான்; எ - று.


     மிக விளைந்த வரகையே எருது கொண்டு கடாவிட்டு மிதித்தெடுப்ப
தமையுமாகலின், சிலவாய் விளைந்தமைபற்றி இளைஞர் காலால் மிதித்துக்