| புறத்தேசெல்ல விடுவாளல்லள்: தன்பால் இன்மையினைப் புறத்தே நீவிர் அறியச் செய்குவாளல்லள் என்றுரைப்பது முண்டு. இஃது இல்லுறை மகளின் நன்மாட்சி யுணர்த்தி நின்றது. விதைத்தினையையுண்டல் முறையன்றாதலின், குறி யெதிர்ப்பை நாடினளெனவும், அது பெறாமையின்,விருந்தோம்பலோமபா மடமையினும் வித்தட்டுண்டல் குற்றமன்றெனத் தேர்ந்தனளெனவும் அறிக. வித்துமிடல் வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி, மிச்சில் மிசைவான்புலம், (குறள்) என்றது. ஈண்டுநினைவு கூதத்தக்கது விருந்தோம்பி மிச்சில்மிசைவான் விருந்து வந்தவிடத்துத் தன்புலத்துக்கு வித்து இடல் வேண்டுங் கொல்லோ; அதனையும் விருந்தோம்புதற்குச் செலவிடுவன் என உரை கூறற்கும் இக்குறள் அமையுமாறு காண்க: புலவர்களாகிய உம்மையேயன்றி, நாடாளும் பெருவேந்தர் தரினும் அவரையும் இவ்வாறே உண்பிக்கும் இயல்பினன் அவள் கணவன் என்றார். இத்துணை யெளியோனாகிய மனைக் கிழவன் வேந்தன்பால் மாராயமாகப் பெறும் பரிசில்களைத் தனக்கென வோம்பாது பரிசிலர்க்கு நல்கி மேம்படுமியல்பினன் என்பது விளங்க, பரிசில் மன்னும் குரிசில் கொண்டதுவே யென்றார். 334. மதுரைத் தமிழக் கூத்தனார் சிலப்பதிகார வுரையில் அடியார்க்கு நல்லார் (சிலப். 3:12) இருவகைக் கூத்தாவன வசைக் கூத்து, புகழ்க்கூத்து, வேத்தியல், பொதுவியல்; வரிக் கூத்து வரி சாந்திக் கூத்து, சாந்திக் கூத்து, விநோதக் கூத்து, ஆரியம் தமிழ்; இயல்புக் கூத்து, தேசிக் கூத்தெனப் பல்வகைய, இவை விரிந்த நூற்களிற்காண்க என்றனர். இதனால் கூத்து ஆரியக் கூத்து, தமிழ்க்கூத்து என இருவகைப்படுமென்று, இவ் வகைகளின் இயல்புகள் விரிந்த நூற்களிற் காணப்படுமென்றும் அறிகின்றோம். ஆயினும் விரிந்த நூல்கள் இப்போது இறந்தன. உலகவழக்கில் ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திற் கண்ணாயிருக்கவேண்டும் என்றொரு பழமொழி யுண்டு. ஆதலால், ஆரியக் கூத்தும் தமிழ்க் கூத்தும் வழக்கிற் பயின்று வந்தன என்பது பெற்றாம். முகற் குலோத்துங்க சோழன் காலத்தில் கும்பகோண வட்டத்து வானம்பாடியிலுள்ள நாக நாதசாமி கோயிலில் உண்டான கல்வெட்டொன்று, அங்கே விக்கிரமாதித்தன் திருமுதுகுன்றனான விருதராச பயங்கர ஆசாரியன் என்றொரு கூத்தன் இருந்தானென்றம். மிழலைநாட்டு வீரநாராயண புரத்துக் கயிலாயமுடைய மகாதேவர்க்குரிய சித்திரை விழாவில் ஐந்து முறை தமிழக் கூத்தாட வேண்டுமென்றும், அதற்காக அவனுக்கு நகரத்தாரும் கோயிலார்களும் கூடி நாகன்பாடி (மானம்பாடி) யென்றவூரிற் சில நிலங்களைக ் கூத்தாட்டுக் காணியாகக் கொடுத்தனரென்றும் கூறுகிறது. (A. R. No. of 1931-32) பண்டை நாளில் மதுரையிலிருந்து தமிழ்க் கூத்து வகையிற் சிறந்து விளங்கிய சான்றோர் தமிழ்க்கூத்த ரெனப்பட்டார். இச் சிறப்பு மிகுதியால் இச்சான்றோருடைய இயற்பெயர் மறைந்துபோக,தமிழக்கூத்தர் என்ற பெயரே நிலவுவதாயிற்று. மதுரைத் தமிழக்கூத்தன் நாகன் தேவனாரென்று வேரொரு சான்றோர் பெயர் தொகை நூல்களிற் காணப்படுகின்றது. அவர் பெயரைக் காண்போர் அவர் மதுரைத் தமிழக்கூத்தனாரான நாகனாரென்றும், அவருக்கு மகனே மதுரைத் தமிழக்கூத்தன் நாகன் வேதனாரென்றும் கருதுவர். தமிழக்கூத்தன் நாகன் தேவன் என்ற சான்றோர் பெயரால் சோழநாட்டு நாகன்பாடி தோன்றி |