| பாணரொடு என்புழி மூன்றாவது நான்காவதன்கண் மயங்கிற்று. பாடினி மாலையும் பாணர் தாமரையும் பெறுதலை, வாடாமாலை பாடினியணியப், பாணன்சென்னிக் கேணி பூவா, எரிமரு டாமரைப் பெருமலர் தயங்க (புறம். 364) எனப்பிறரும் கூறுதல் காண்க. உரிமை மகளிராதலின், அவருடைய பொறையும் கற்பும் விதந்தோதினார். வல்லென்ற சொற்களை விரைந்து பேசின் மேலும் கீழும் உள்ள பற்கள் துள்புறுத்துமென அஞ்சினமை தோன்ற, வல்லென நல்கின் நாவஞ்சு முள்ளெயிற்றுமகளிர் என்றார்; அமிழ்து பொதிசெந் நாவஞ்ச வந்த, வார்ந்திலங்கு வையெ யிற்றுச் சின்மொழி யரிவை (குறுந் 12) என்று சான்றோரும் கூறுவது காண்க. அல்குல்: ஆகுபெயர். இகழ்தல், ஈண்டு மறத்தன் மேனின்றது; தன்னுயிரைக் கொள்ள வருகின்ற நின் கொடுமைபற்றி நின்னை இகழ்விலன் என்றற்கு ஏது கூறுதலின், முந்தறிந்த முழுதுணர் கேள்வியனாகலிந் என்றார். கூற்றம். பெருந்தகை; சிதறி, ஈத்து அருளியும், ஈத்தும், அளைஇய இருக்கையில், மடுப்பமாந்தி இகழ்விலன்; அதனால் நின் வரவு அஞ்சலன்: நீ நிலையாமை சொல்லவேண்டா; தோன்றல் கேள்வியனாகலின் எனக்கூட்டி வினைமுடிவு கொள்க. இதன் ஈற்றடியின் முதலிரு சீர்களும் சிதைந்து விட்டன.
விளக்கம்: எத்தனை வலியுடையாராயினும் போரெதிர்ந்தவழி அஞ்சாது நின்று பொருது வெல்லும் பேராண்மையுடையவனாதல் கண்டு, அவன் அஞ்சுமாறு இடிபோல் உரறிவருமாயினும் கூற்றத்துக்கு அஞ்சான் என்பது விளங்குதற்கு. காரெதிர் உருமின் உரறிக் கல்லென வரும் கூற்றம் என்றார். இனி, எந்நாளாயினும் ஒரு நாள் கூற்றம் வருவது ஒருதலை யென்றும், அது வருமுன் செய்தற்குரிய நல்வினை செய்தல் வேண்டுமெனக் கருதி அவற்றைச் செய்துள்ளானென்றும், அதனால் அவன்முன் கூற்றம் அச்சமுண்டாகத்தோன்றி வருதல் பயனில் செயலென்றும் கூறுவார், கூற்றம் நின்வர வஞ்சலன் என்றாரென்றுமாம். அற்தணர், அரசர். பாணர், விறலியார் முதலிய பலர்க்கும் அவரவர் வரிசையறிந்து நல்கினான் எனவே, நிலையாமை யுணர்வு நன்கு வாய்த்திருப்பது விளங்கிற்று, கலங்கலந் தேறலை மகளில் மடுப்ப மாந்தி இன்பக் களிப்பில் மூழ்கியிருந்த காலத்தும் நிலையாமைபற்றிய நல்லுணர்வு அவன் நினைவின்கண் நீங்காது நிலை பெற்றிருந்தது காட்டுவார், இகழ்விலன் என்றார். இவ்வாற்றால் அவற்குக் கூற்றம் போந்து நிலையாமையைக் காட்டுவது மிகையென்னும் குற்றமென்பார், நில்லா வுலகத்து நிலையாமை நீ, சொல்ல வேண்டா என்றும், இதனை அவன் தன் வாழ்க்கையான் மட்டுமன்றிக் கற்றுவல்ல நூலோர் நூல்களைக் கற்றும், அவர்பாற் கேட்டும் பேரறி வினனாயின னென்பார், முழுதுணர் கேள்வியன் என்றும் கூறினார். |