பக்கம் எண் :

331

     

படைத்தலும்  அதனை  யவன்  கையிலேந்திப் படைக்குங்கால்  பின்புறம்
பாராமல் படைக்கும் முறைமையும் ஈமத்திற் பண்டையோர் செய்த சடங்குகள்.
முன்னிய வினையாவது மீளவும் வேந்தர் குடியிற்றோன்றி  அரசவின்பம்
துய்க்கவேண்டுமென்பது;   இன்றேல்,   பிறவா   வாழ்க்கை   பெற்று
உயர்ந்தோருலகத்து உலவாப் பேரின்பம் நுகர்தல்வேண்டு மென்பது; இவ்
வினைக்கு முன்னே செயற்பாலது தவமென்றும், அதற்கு உருதுறவென்றும்
அறிக. காவலர் பலர் மாய்ந்தனர்; அதனால் கேண்மதி; உயிரும் இல்லை;
உண்மை, மாயமன்று; வாரா முன்னே துறந்து நீ முன்னிய வினையைச் செய்
என்று கூட்டி வினைமுடிவு செய்க. யாக்கையும் செல்வமும் நிலையாமை
கூறித் துறவுபூண்டு தவஞ்செய்யுமாறு வலியுறுத்தவாறு.

     விளக்கம்: “மாற்றருங் கூற்றம் சாற்றியபெருமையும்” (தொல். புறத். 19)
என்ற சூத்திரத்து “மாற்றருங் கூற்றமம்சாற்றியபெருமை” என்பதற்கு இதனைக்
காட்டுவர் இளம்பூரணர். இனி, ஆசிரியர் பேராசிரியர் இப் பாட்டை வாயுறை
வாழ்த்துக்கு   எடுத்துக்காட்டுவர்.   இந்த   மாநிலம்   ஏனையோர்க்கும்
உரியதாகலின் பொதுவெனக் கருதாது தமக்கே உரித்தாகக் கருதி வென்று
தாமே நிலவுலகிற்கு வேந்த ரென்னுமாறு ஆட்சி செலுத்திய பெரு வேந்தரும்
பின்னர் இறந்தொழிந்தனர்; ஆகவே, ஏனை எளியோர் இறப்பது சொல்ல
வேண்டா. எனவே, எத்திறத்தோரும் இறத்தல் ஒருதலையாம் என்பார்,
“வீயாது உடம்பொடு நின்ற உயிருமில்லை” யென்றார். இறக்கும் நாளில்
நிகழும் நிகழ்ச்சிகள் இன்பந்தாராவாகலின், அவை நிகழும் நாளை,
“இன்னாவைகல்” எனக் குறிக்கின்றார். இன்னாமையை விளக்குதல் வேண்டி,
புறங்காட்டு வியலுளாங்கண், இழிபிறப்பினோன் உப்பிலா அவிப் புழுக்கலை
நிலங்கலனாக வைத்துப் படைத்தலை எடுத்தோதினார். இறத்தற்குரிய வைகல்
நெருங்குங்கால் சொல்லும் செயலும் கை கூடாது போதலின், முன்னிய வினை
செய்யப்படாவென்பார், “இன்னா வைகல் வாரா முன்னே செயல்நீ முன்னிய
வினை” யென்றார். நினைத்த நினைவைச் செயற்படுத்தற்குரிய வாயும்
உடம்புமாகிய கருவிகள் பயன்படாது கெடுதலின், இறக்கும் நாள் “இன்னா
வைகல்” எனப் படுவர் இயல்பு. மாறிப் பிறப்பதாயின் வேந்தர் குடியிற்
பிறத்தலையே வேந்தர் வேண்டுவதை, “மன்பதை காக்கும் நீள்குடிச்சிறந்த,
தென்புலங்காவலினொரீ இப் பிறர், வன்புலங்காவலின் மாறியான் பிறக்கே”
(புறம். 71) என வருதல் கண்டுகொள்க.

364. கூகைக்கோழியார்

     பேராந்தையைக் கூகைக்கோழியென்று சிறப்பித்துரைத்த நயம் கண்டு
சான்றோர் இவரைக் கூகைக்கோழியார் என வழங்கினர். இதனால் இவரது
இயற்பெயர்  மறைந்துபோயிற்று.  இவரைப்போல  ஆரிசியர்  பரணரும்,
பசும்பூண்  பாண்டியனுடைய  தானைத்  தலைவனான  அதிகன் என்பான்
களிறொடு  பொருது  வீழ்ந்த  வாகைப்  பறந்தலையை “கூகைக்கோழி
வாகைப்பறந்தலை” (குறுந். 339)  யெனச்  சிறப்பித் துரைத்தது  இக்
கூகைக்கோழியார வழங்கிக்காட்டிய இத் தொடரை நல்லிசைச் சான்றோர்
விரும்பி யேற்றுக் கொண்டாரென்பதை வலியுறுத்துகிறது. இதனால் இவர்
பண்டைச்சான்றோரால் நன்கு மதித்துப் போற்றும் பெருமை பெற்றவரென