| சுதைசெய்மாடத்துப், பனிக்கயத்தன்ன நீணகர் என்று புகழ்கின்றான். வஞ்சியாவது, எஞ்சா மண்ணாசை சேந்தனை வேந்தன், அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்று (தொல். புறத். 7) எனவரும். எனவே, மண்ணாசைகொண்டு பகைத்துக் காலங்கருதியிருக்கும் வினைசெயல் வகையைப் பாடுவது வஞ்சியாயிற்று. இதனை விரித்துரைத்தற் கிடமின்மையின், எஞ்சா மரபின் வஞ்சி பாட எனச் சுருங்க வுரைக்கின்றான். இவ் வண்ணம் வஞ்சிப்போருடற்றித் தோற்ற வேந்தர் பணிந்து நல்கிய அருங் கலங்களைப் பொருநர் முதலாயினார்க்கு இளஞ்சேட் சென்னி நல்குகின்றானென்பான், எமக்கென வகுத்த வல்ல...பொழிதந் தோனே என்று இசைக்கின்றான். பொழிதந்தோன் என்றது, மழைபோல் சொரிந்தமை தோன்ற நின்றது. அருங் கலங்களைக் கண்ட கிணைப் பொருநன் சுற்றத்தார், அவை தமக்கென வகுத்த வல்ல என்பது காணாமல், சீதையின் மதரணி கண்ட குரங்கின் செம்முகப், பெருங்கிளை இழைப் பொலிந் தாங்குக் கொண்டார் நகைக்கத்தக்க வகையில் அவ்வருங் கலன்களை அணியும் இடமும் முறையுந் தெரியாது அணிந்து மகிழ்ந்தனர் என்று சொல்லியின்புறுகின்றான். சுற்றத்துக்குத் தலைமை தாங்கிய தான் பெற்று வந்தது அரும்பட ரெவ்வம் எனவும், இப் போது பெறுவது அறாஅ வருநகை எனவும், கூறுவது பொருட்பேற்றிற் பிறந்த மருட்கை. 379. ஓய்மான் வில்லியாதன் ஓய்மான் வில்லியாதன் ஓய்மான் நல்லியக்கோடனுடைய வழித்தோன்றலாவன். அரம்பையின்கீழ்க் கன்றும் உதவுந் கனி யென்பது போல, இவனும் நல்லியக் கோடன்போலக் கொடைக்கடன் இறுக்கும் விரிந்த உள்ளம் படைத்தவன். தன் முன்னோன் காலத்தே தனது ஊராகியமா விலங்கைக்குப் போந்து, அவனைப் பாடிப் பெருஞ் சிறப்புச்செய்யப் பெற்றவர் புறத்திணை நன்னாகனா ரென்பதை நன்கு அறிந்திருந்தான் இந்த வில்லியாதன். புறத்திணை நன்னாகனார் நல்லியக் கோடனுக்குப் பின் அரசு கட்டிலேறித் தன் முன்னோனைப் போலவே வண்புகழ் நிறைந்து விளங்கும் வில்லியாதனைக்கண்டு இப் பாட்டினைப் பாடிச் சிறப்பித்துள்ளார். இதன்கண் தாம் வருங்கால வில்லியாதனுடைய கிணைப்பொருநன் ஒருவனைத் தாம் கண்டவாறும், அவன் தமக்குக் கூறியவாறும் எடுத்தோதி அவன்கூற்றே தாம் இப்போது வருதற்கோ ரேதுவாயிற் றென்பதுபட வுரைத்துள்ளார். நெல்வயல் நிறைந்து சூழ்ந்தது மாவிலங்கை; அதற்குரியவன் வில்லியாதன். அவனுடைய கிணைப்பொருநன் யான்; நெய்யிற் பொரித்த பன்றியூனும் சோறும் நாட்காலத்தே தந்து பசிதீர்க்கும் பண்புடையவன் என் தலைவன். அவன் தாணிழல் வாழும் வாழ்வே எனக்கு உண்டாகுக; என் நாவிசையெழும் பாட்டு அவற்கேயுரியவாகுக என்ற அப்பொருநன் தமர் கூற, நாகனார், அதுகேட்டு, அத்தகைய வள்ளியோகைக் காண்டல் வேண்டுமென்றெழுந்த வேட்கை உண்ணின்று உந்த, நின் திரு மனைக்கண் எழும் இனிய புகை யெழுந்து மறுகெங்கும் பரவி மழை முகில்போன் மறைக்கும் ஊர்க்கும் யான் வந்தேன் என்ற அக் கருத்தேயமைய இப் பாட்டினைப் பாடியுள்ளார். மாவிலங்கை ஆழ்ந்த அகழும் நீண்ட மதிலும் உடையது. இது தென்னார்க்காடு சில்லாவில் திண்டிவனம் தாலுகாவில் இன்றும் இப் பெயர் திரியாமல் இருக்கிறது. |