| திருவேங்கடத்திற்கு வடக்கிலுள்ள நாட்டவராதலால் வடுகர் எனப்பட்டனர். பரிவடிம்பு குதிரையிவர்ந்து செல்பவர் அதனை விரையச் செலுத்தற்பொருட்டுக் காலில் அணியும் இரும்பு; இதுவடிம்பு போறலின் வடிம்பெனப்பட்டது; பிறரும், மாவுடற்றிய வடிம்பு எனக் கூறுதல் காண்க. மறுவில்லாத பிறைத்திங்கள் மிக வெள்ளிதாக இருக்குமாறு விளங்க, புதுப்பிறையன்ன சுதை என்றார். அரித்த ஓசை, அரியெனப் பட்டது; ஓசை கூட்டப்பெற்ற கிணையை அரிக்கூடுகிணை யென்றார்; அரிக்கூடின்னியம் (மதுரை: 612) என வருதல் காண்க. எஞ்சா மண்ணசைால் வந்த வேந்தன் எதிர்சென்று பொருது மேம்பட்டு மேற்சேறலின், எஞ்சா மரபின் வஞ்சி என்றார். வேந்தனது பரிசில் அவரவர் வரிசைக்கேற்ப வழங்கப்படுமாயினும். ஈண்டு அவரவர் வரிசை நோக்காது மிக்க பரிசில் தரப்பட்டதென்பதும் விளங்க, எமக்கென வகுத்தவல்ல மிகப்பல மேம்படு சிறப்பினருங்கல வெறுக்கை தாங்காது பொழிதந்தோனே யென்றார். இலம்பாட்டால் அறிவு மயங்கிச் செபவது தெரியாது தன் சுற்றத்தார் விரைந்தனரென்பார், கலங்களை முறைமை மாறியணிந்து காண்பார்க்கு நகைவிளைத்தனர் என்றார். அரக்கன் வலியால் தகைமைபெற்றவனேயன்றி ஒழுக்கத்தனர் தகைமை பெற்றவனல்ல னென்பார், வலித்தகை யரக்கன் என்றார். இவ்வாசிரியர் காலத்தில் இராமராவணப்போர் வடபுலத்தவர்க்கும் தென்புலத்தவர்க்கும் நடந்த போரென்னும் பொய்க்கருத்து நாட்டில் நிலவவில்லை. மதர் - அழகு, ஒளிமிகுதியுமாம். செம்முகப் பைங்கிளை மந்திக்கூட்டம். எவ்வம் இருந்த எம்பால் நகைச் சுவை நுகரும் இன்பம் உளதாயிற்றென்பான், எவ்வ முழந்ததன்றலை அறாஅ வருநகையினிது பெற்றிகும் என்றான், தலைமையெய்திப் பெற்றது எவ்வமே; மகிழ்ச்சியன்று; சோழன் அருங்கலவெறுக்கை பொழிந்து இன்ப முறுவித் தான் என்பதாம். சோழன் கோயில் நீணகர் நின்று, ஒற்றி, பாட, பொழிதந்தோன்; ஒக்கல் அதுகண்டு தொடக்குநரும், செறிக்குநரும், யாக்குநரும், யாக்குநருமாய், கிளை பொலிந்தாங்கு, தலைமையெய்தி உழந்ததன்றலை அருநகை இனிது பெற்றிகும் எனக் கூட்டி வினை முடிவு செய்க.
விளக்கம்: இயன் மொழியின் இலக்கணம் முன்பே கூறப்பட்டது. பெற்ற பின்னரும் பெருவள னேத்தி, நடைவயிற்றோன்றிய இருவகை விடை (தொல். புறத். 30) என்றசூத்திரத்திற்கு, அவையாவன, தான் போதல் வேண்டுமெனக் கூறுதலும், அரசன் விடுப்பப் போதலும் என்றும் உரைத்து, வளன் ஏத்தலும் இருவகை விடையுமாக மூன்று பகுதியாக்கி, வளன் ஏத்தியதற்கு இப்பாட்டைக் காட்டுவர் இளம்பூரணர்; நச்சினார்க்கினியர், இத்துறைக்கே இதனைக் காட்டி, இதுதானே போவென விடுத்தபின் அவன் கொடுத்த வளனையுயர்த்துக் கூறியது (தொல். புறத்: 36) என்பர். கிணைப்பொருநன் சென்னியின் நீணகர் நின்று வஞ்சி பாடுதலும், இளஞ்சேட் சென்னி பெருவளன் நல்குதலும், பெற்றுச் சென்ற பொருநனுடைய சுற்றத்தார் செய்கையுமெ இப் பாட்டு மூன்று பகுதிக்கண் அடங்கும். இளஞ்சேட் சென்னியின் கோயிலைக் கூறுபவன் அவனுடைய சிறப்பைப் பரதவர் மிடல் சாய்த்ததும், வடுகரது வாளாண்மை கெடுத்ததும் எடுத்தோதி, அவன் கோயில் வெள்ளிய சுதையாலமைந்து தண்ணிய காற்றும் ஒளியும் நிலவத்தக்க சிறப்புக் கொண்டிருந்த தென்பான் புதுப்பிறையன்ன |