| குறுந்தாளேற்றைக் கொழுங்கண் நல்விளர் - குறுகிய கால்களையுடைய பன்றியின் கொழுவிய வூன்துண்டங்களான நல்ல வெள்ளிய வூனை; நறுநெய் உருக்கி - நறிய நெய்யையுருக்கி அதன்கட் பெய்து பொரித்து; நாட்சோறு ஈயாப் பசி தீர்த்தல் வல்லன் - நாட்காலையில் சோற்றுணவோடு கொடுத்து எம்முடைய பசியைப் போக்க வல்லவனாவான்; என - என்று; கொன்வரல் வாழ்க்கை நின் கிணைவன் கூற - விடியற்காலத்தே வந்து பாடும் மரபினையுடைய நின் கிணைப்பொருநன் வந்து எனக்குச் சொல்லவே; கேட்டதற் கொண்டும் வேட்கை தண்டாது - கேட்டதுகொண்டு நின்னைக் காணவேண்டுமென்றெழுந்த விருப்பம் அமையாமையால்; விண்தோய் தலையகுன்றம் பிற்பட - வானளாவிய உச்சியையுடைய குன்றுகள் பிற்பட்டொழிய; வசையில் தாயில் தூஉங் குழவி போல - குற்றமில்லாத தாயிடத்துப் பாலுண்டற் கோடிவரும் குழவிபோல; நசைதர வந்தனன் யானே - நின்பாற் பெறலாகும் பரிசின் மேற் சென்ற ஆசை செலுத்த வந்தேன் யான்; திருவுடைத் திருமனை ஐது தோன்று கமழ்புகை - செல்வமுடைய நின் திருமனைக்கண் மெல்லிதாகத் தோன்றும் நறிய புகை; வருமழை மங்குலின் மறுகுடன் மறைக்கும் - பெய்தற்கு வரும் மழைமுகில் படிந்து மறைப்பது போலத் தெருவெல்லாம் ஒருங்கு மறைக்கும்; குறும்படு குண்டகழ் நீள் மதிலூர் - அரணை யடுத்த ஆழ்ந்த அகழினையும் நீண்ட மதிலினையுமுடைய வூர்க்கு எ - று.
ஆங்க: அசைநிலை. நின்கிணைவன் எம்மைநோக்கி, பெரும, கிணையேம், நாட்சோறீயா பசி தீர்த்தல் வல்லன் எனக்கூற என இயைக்க. வில்லியாதனுடைய ஆதரவு பெற்று வாழும் வாழ்க்கை நலத்தை நினையுமாற்றால் தன் நன்றியறிவும் கடப்பாடும் ஓதுவான், யானே பெறுகவன் தாணிழல் வாழ்க்கை என்றும், அவனே பெறுகவென் நாவிசை நுவற லென்றும் கூறினான். ஏகாரம் இரு வழியும் தேற்றம்; எதிர்வரும் கிணைவனையும் ஆற்றுப்படுக்கும் குறிப்பிற்றாமென அறிக. தொழுவர், களவர், புரவு, விளைபுலம். இக்காலத்தும் மாவிலங்கை நாட்டவர் நெல்விளைவயலைப் புரவடை யென்ப. குறுந்தாளேற்றை யெனவே பன்றியாயிற்று. கொன், விடியற்காலம். விடியலிற் போந்து துயிலெடை நிலைபாடுவது கிணைப்பொருநன் கடனாதலின், கொன்வரல் வாழ்க்கை நின் கிணைவன் என்றார். வேட்கை தண்டா தென்றும், அதன் வயப்பட்டெழும் உள்ளம் பொருணசை நிறைந்து உந்துதலின், நசைதர வந்தனெ னென்றும் கூறினார். வசையில் தாய் என்றது, தாய் தன் குழவியின் பசிநிலையைத் தானே நினைந்தறிந்து பால் சுரந்தளிப்பதுபோல நீயும் எம் குறிப்பறிந்து நல்குதல் வேண்டுமென்றவாறு. தூஉங்குழவி, தூஉவரும்குழவி. மனையிடத்தெழுந்த கமழ்புகை மறுகுடம் மறகை்கு மென்றது, நின்புகழெழுந்து உலக முழுதும் பரவும் என்றவாறாம். நின்கிணைவன், என, கிணைவன் கூறக் கேட்டதிற்கொண்டும், தண்டாது பிற்பட, நசைதர, ஊர், குழவிபோல, வந்தனென் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. |