பக்கம் எண் :

397

     

உண்மையறிக. பாம்பிற்கு அதன் தோல்போல எமக்கு வறுமை யமைந்துளது
என்பார், “அராஅப்போலும் வறனொரீஇய” என்றார். வழங்கு: முதனிலைத்
தொழிற்பெயர். கிணையின் கண்ணிடத்தே சிறுகோலைக் கட்டி வைப்பது
இயல்பு. “நுண்கோற் சிறுகிணை” (புறம். 383) என்பர் பிறரும். கிணைவன்
கூற்றாதலின் அதற்கேற்ப அவன் பயின்ற சிறுகோலும் தடாரிக்கண்ணின்
நடுக்கமும் உவமமாகக் கூறப்பட்டன. சோழ நாட்டுப் பொருநன்; பொருநரேம்;
வேண்டேம்; வாழிய எனப்பாடுதும், நின் துன்பற நல்குவன் என்ப; பெரும,
அதற்கொண்டு, சிறாரும் யானும் அராஅப் போலும் வறன்ஒரீஇ, வாய்ப்ப,
தோன்றல், விடுமதி, உலகம்நினதே; மாக்கிணை உலகறிய எனதுவென்
சிறுகோல் நுடங்கியாங்கு, பகைஞர் நடுங்க, வேத்தவையான் ஏத்துவென்
எனக் கூட்டி வினை முடிவு செய்க. அத்தை: அசைநிலை.

     விளக்கம்:கடை நிலையாவது, ஆசிரியர் தொல்காப்பியனாரால் “பரிசில்
கடைஇய கடைக்கூட்டுநிலை” (தொல். புறத் 36) எனப்பட்டதாக, புறப்பொருள்
வெண்பாமாலைக்காரரால்   பரிசினிலை    யெனப்பட்டது.   அஃதாவது
“புரவலன்மகிழ்தூங்க, இரவலன் கடைக்கூடின்று” (பு.வெ.மா. 9:25) என வரும்.
“பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலை” யென்றதனை, பரிசில் கடைஇய
நிலையும் கடைக்கூட்டு நிலையும் என்று இரண்டாகக் கொண்டு, கடைக்கூட்டு
நிலையாவது “வாயிலிடத்தே நின்று தான் தொடங்கிய கருமத்தினை முடிக்கும்
நிலை” யென்றுரைத்து, “நிலையென்றத னானே பரிசில்பெறப் போகல்
வேண்டுமென்னும் குறிப்பும் பரிசில் நிலையும் பல்வகையாற் கூறுதல் கொள்க”
என்பார் நச்சினார்க்கினியர். ஆசிரியர் கோவூர்கிழார் இப்பாட்டு, சோழன்
நலங்கிள்ளியின் கிணைப்பொருநன் கூற்றைக் கொண்டெடுத்து மொழி்யும்
பகுதியும், தான் வேண்டும் பரிசுநிலை கூறும் பகுதியுமென்று மூன்று
பகுதிகளையுடையது. கிணைப்பொருநன் கூறுவனதாம் நன்கறிந்தனவாயினும்,
தாம் நேரே வேந்தன் முன்னின்று கூறுதல் சிறப்பன்மையின், கிணைவன்
கூற்றில் வைத்துக்கொண்டு கூறினார்; அவன் கூறியன தமக்கும் உடன்பாடே
யென்பதும் இதனால் பெறுவித் தாரென அறிக. “பிறர்பாடிப் பெறல்வேண்டேம்,
அவற்பாடுதும் அவன்றாள் வாழிய” எனப் பொருநன் கூறுவதனோடு,
புறத்திணை நன்னாகனார், “யானே பெறுகவன் றாணிழல் வாழ்க்கை, அவனே
பெறுகவென் னாவிசை நுவறல்” (புறம். 379) என்பது ஒப்பு நோக்கத்தக்கது.
இவ்வாறு கூறுவது கிணைப்பொருநர் இயல்பென அறிக. அரவின் தோல்
புதுத்தோலுண்டாக நீங்குவதுபோல, வறுமையும் செல்வமுண்டாக நீங்கத்
தக்கதென்பது விளங்க, “அராஅப்போலும் வறன் ஒரீஇ” என்றார். எனக்கு
வழங்குவதால், நின் பகையொடுக்கம் பயனாகக் காண்பாய் என்பார்,
“நின்பகைஞர்...வேத்தவை யானே” என்றார்.