பக்கம் எண் :

401

      எடுத்தோதி வாழ்த்துதல் முறையாயிற்று; “பால்பல வூறுக பகடுபல சிறக்க“
(ஐங்.3)  என மகளிர்  விழைந்து  கூறுமாறு  காண்க. ஊன்: ஆகுபெயர்.
புலந்  தென்றது  பிறவினைப்  பொருட்டு. இடுக்கண் - வறுமைத் துன்பம்.
இரியது  போக-நீங்க;  “அந்நிலை யிடுக்கண் இரியல் போக“ (புறம். 388)
எனப்  பிறரும்   கூறுதல்  காண்க.  மடார்  தேறலையுண்ணும்  வள்ளம்.
ஆம்பல, மடாருக்கு  வடிவுபற்றி  வந்த  உவமம்.  உண்பித்தென்னும்
வினையெச்சம்  உணவெனத் திரிந்தது. சொலி, தோல். இழை யறிவாரா
வென்ற பாடத்துக்கு இழையறியப்படாதவென்ப  பொருள்  கொள்க.வசிந்து
வாங்கு நுசுப்பு,  முகிலிடைத் தோன்றும் மின்று அதனைப் பிளந்து
தோன்றி விளங்குதல் போல விளங்குகின்ற நுசுப்பு.வசிவு. பிளவு.“வானமுன்னு
வசிவு பொழிய“ (மலைபடு. 97)  என்று  சான்றோர்  கூறுதல் காண்க. இனி,
வசிந்தென்பதற்கு  வேறு  கூறுவாருமுளர்.  உந்திக்கு  வாங்குதல், சுழிதல்.
மடந்தை புறம் புல்லிக் கிடக்க அணையிற்கிடந்து உறங்குவது இயல்பு;
“புதல்வற் கவைஇயினன்றந்தை மென்மொழிப், புதல்வன்றாயோ விருவருங்
கவையினள்,இனிது மன்றவலர்  கிடக்கை“ (ஐங் 409)  எனப் பிறரும்
கூறுதல்  காண்க. நரைமுக வூகம், வெள்ளிய மயிர் பரந்த முகமுடைய
குரங்கு. மன: ஒழியிசை. பொருள்வளம் இடையறாமையே யன்றி எம்மைப்
புரத்தலினும் இடையறவுபடான் என்பது தோன்றப் பொதுப்பட, “அறான்“
என்றும், வெள்ளிமீன் நிலைபிறழு மாயின் நாட்டில் நலங்குன்று
மென்று சான்றோர் வருந்துபவாகலின், தான் அது  செய்யாமைக்கு ஏது
கூறுவாராய், “ஒருவனையுடையேன், அறான் எவன் பரிகோ வெள்ளியது
நிலையே“ என்றார். எழுந்து,  ஒற்றி,  நின்று, வாழ்த்தி ஏத்தினெனாக, 
இரியல்போக, உண, வேண்டி, உடீஇ, மடந்தை,புல்லக்கிடந்தோன்...நோக்கி
...ஆகி, படர்பு அறியேன; அவியனென ஒருவனை  யுடையேன், அறான்,
நிலைக்கு எவன் பரிகோ எனக் கூட்டி வினைமுடிவு செய்க.

     விளக்கம்: இப் பாட்டின் இடையே சில அடிகள் சிதைந்து
விட்டமையின் பொருள்விளக்கம் நன்கு உண்டாகவில்லை. இதுவும் முன்னைப்
பாட்டுக்களைப் போலக் கிணைவன் கூற்றைக் கொண்டெடுத்துக் கூறும்
குறிப்பினதாகும். பசித்து வருவாரை  முதற்கண்  நீராட்டி நல்லாடை தந்
துடுப்பித்து இனிய வுணவுதந் துண்பித்த பின்னர்த் தான் காண வருவித்தல் 
தமிழ்ச்  செல்வம் கொடைப்பண்பாதலின்,  அருங்கடி வியனகர்க் குறுகல்
வேண்டிக்கள்ளுண்பித்ததும், ஒண்பூங் கலிங்கம் உடுப்பித்ததும் கூறினா னென
வறிக.  பிறரும், “ தன்னுழைக் குறுகல் வேண்டி யென்னரை, முதுநீர்ப் பாசி
யன்ன வுடை களிந்து, திருமல ரன்ன புதுமரக் கொளீஇ, மகிழ்தரன் மரபின்
மட்டு“  (புறம் 360)  நல்கியது கூறுதல் காண்க. வறுமையுற்ற குடியிற்பிறந்த
பிறப்பு   மாற்றிச்  செல்வக்  குடியிற்  பிறந்தார்  போலச்  செல்வம்  மிக
வுடையனானது கண்டு தன்னையே வியந்து கூறுகின்றானாதலால், “அழித்துப்
பிறந்தனெ னாகி“  யென்றும்,  குறைபடாச் செல்வம் நல்கினமை தோன்ற“
அவ்வழிப்  பிறர்  பாடுபுகழ்  பாடிப்படர்  பறியேன்“  என்றும் கூறினான்.
வேண்டுங்காலத்து வேண்டுவன குறை வின்றாக நல்கும் அவியனது தூய
அன்பை உடையேனாதலால், ‘எங்கெழிலென் வெள்ளி யென விருக்கின்றேன்’
என்றான். இவ்வாறே பிறரும் “அன்னோனை யுடையேமென்ப வினிவறட்
கியாண்டு நிற்க வெள்ளி“ (புறம். 384) என்று கூறுதல் காண்க.