| விடுவர் -நெடிது தாழ்க்காமல் தாம் செய்தற்குரிய சிற்புக்களைச் செய்து இவண் வரவிடவராதலால்; புல்லிலை வஞ்சிப் புறமதில் - அலைக்கும் இலையில்லாத வஞ்சியாகிய வஞ்கிமாநகரின் மதிற்புறத்தை யலைக்கும்; கல்லென் பொருதை மணலினும் - கல்லென்னும் ஒசையையுடைய ஆன் பொருதையாற்று மணலினும்; ஆங்கண் - அவ்விடத்து; பல்லூர் சுற்றிய கழனி யெல்லாம் - விளையும் நெல்லினும் பல வூழி வாழி - பலவாகிய வூர்களைச் சூழவுள்ள வயல்களெல்லாவற்றினும் விளையும் நெல்லினும் பலவாகிய வூழிகள் வாழ்வானாக; எ - று.
கிணை இயக்கி, தந்து, அகற்றில் பொலியர்தன் சேவடி என்று இசைப்பின் நனிநன்று எனா, வாழ்த்த இருந்தோர் தங்கோன், குறுகல் வேண்டி, இரங்கும், முரசினோன்; நோக்கான் நல்கியோன் தோன்றல், பெருமகன், செல்வக் கடுங்கோ வாழியாதன் என்னாத் தெவ்வர் குடை பணித்து, நில்லாது விடுவராதலின், மணலினும் நெல்லினும் பல வூழி வாழி என்று கூட்டி வினை முடிவு செய்க.
ஆமையின் வெள்ளகடுபோல்வது கிணைப்பறை யென்பதை ஆமை கம்புள் இயவனாக விசிபிணித் தெண்கட் கிணையிற் பிறமும் (அகம். 356) என்று பிறரும் கூறுதல் காண்க. நாற்றிசையும் பரந்து சென்று காவற்காட்டையழித்தலின், வேறு வேறு பரந்தியங்கி வேந்துடை மிளையயல் பரக்கும் என்றார், திருந்து தொழிற் பகடென்றது, தாம் செய்தற்குரிய வினைபலவும் நன்கு பயின்றிருப்பது விளக்கி நின்றது. பகடாகிய திறையென இயையும். பகைப்புல வேந்தர் பணிந்து நண்பராயினமை தோன்றத் திறை பகர்ந்ததோடு அமையாது. சேரமானுடைய நகைப்புலவாணர்க்கு நல்குரவு தீர வழங்குவதும் சேரமான் புகழை அவர் பாடக்கேட்டிருந்து மகிழ்வதும் செய்வரென்பதாம். நகைப்புலவாணர், அறிவுக்கு இன்பச்சுவை நல்கும் புலவர், பாணர், கூத்தர் முதலாயினார். மருவுவார்க்குச் சீர்த்தவுணவும் உடையுந் தந்து சிறப்பித்தலின் மருவவின்னகர் என்றார். பெரிய தப்புநராயினும்தன் கழல் பணிந்து திறைதருவரேல் தான் பேரருளுடையனா மென்பதைக் குறித்துத் தெரிவித்தலின், வென்றிரங்கும் விறன்முரசு என்றார். ஏற்போர் சிறுமை நோக்காது ஈவோர் தம்தகுதி நோக்கிக் கொடுப்பது மரபு. என்கோ, ஆங்கு அசைநிலை பிணர் மருப்பு என்புழி: பிணர் ஆகுபெயராய்க் கைமேனின்றது. மனைக்களமர், மனையிடத்தே சோறும் கூறையும் பெற்றுப் பணிபுரியும் உழவர். செல்வக் கடுங்கோ வாழியாதன் பெயர்கூறக் கேட்ட அளவிலே பகைவேந்தர் அஞ்சி நெடிது தாழ்த்தாது பெயர் கூறினார்க்கு வேண்டுவன நல்கி வழிவிடுவரென அவனது ஒளியின் இயல்பு கூறுவார், என்னாத் தெவ்வர் உயர்குடை பணித்திவண் விடுவர் மாதோ நெடிதே என்றார். புல்லிலை யென்புழி புன்மை இன்மை குறித்து நின்றது: இது வஞ்சிமாநகர்க்கு வெளிப்படை வஞ்சிநகர்க்கண்மையிலோடும் பொருநை ஆன்பொருநை யெனப்படும். கருவூர்க்ல்வெட்டும், (A. R. No. 166 of 1939-7) அதனை வஞ்சி நகரென்றும், அமராவதியை ஆன்பொருந்த மென்றும் குறிக்கின்றன. மண்ணாள் வேந்தே நின் வாணாட்கள், தண்ணான் பொருதை மணலினுஞ் சிறக்க (சிலப். 28; 125-6) என அடிகளும் உரைப்பது காண்க. எனவே சேரநாட்டுவஞ்சி தண்பொருநைக் கரையிலும் கொங்கு நாட்டுக்கருவூராகிய வஞ்சி ஆன்பொருநைக்கரையிலும் இருப்பன வென
|