பக்கம் எண் :

44

     

அது பழுதின்றி வந்தவன் அறிவும் அவன் சொல்லிய சொற்பழுதின்றாக
வந்தவனது அறிவும்; வியத்தோறும் வியத்தொறும் வியப்பிறந்தன்று -
வியக்குந்தோறும் வியக்குந்தோறும் வியப்புக் கை மிக்கது; அதனால் -
ஆதலால்; தன் கோல் இயங்காத் தேயத்து உறையும் - தன் செங்கோல்
செல்லாத தேயத்துறையும்; சான்றோன் நெஞ்சுறப்பெற்ற - அமைந்தோனது
நெஞ்சைத் தன்னிடத்தே யுரித்தாகப்பெற்ற; தொன்றிசை அன்னோனை
இழந்த இவ்வுலகம் - பழைய புகழையுடைய அப்பெற்றிப்பட்ட
பெரியோனையிழந்த இத் தேயம்; என்னாவது கொல் - என்ன இடும்பை
யுறுங் கொல்லோ; அளியது - இது தான் இரங்கத்தக்கது; எ - று.


    இது வென்பது அரசினைக் கைவிட்டு இறந்துபடத் துணித
லென்றுமாம்.

    விளக்கம்: “புணர்ச்சி பழகுதல் வேண்டா வுணர்ச்சிதான். நட்பாம்
கிழமை தரும்” (குறள். 785) என்பதன் உரையில் “உணர்ச்சி தான் நட்பாங்
கிழமை தரும்” என்றதை விளக்கத் தொடங்கிய பரிமேலழகர்,
“கோப்பெருஞ்சோழனுக்கும் பிசிராந்தையாருக்கும்போல உணர்ச்சி
யொப்பின், அதுவே உடனுயிர் நீங்கும் உரிமைத்தாய நட்பினைப் பயக்கும்”
என்று வியந்து கூறியுள்ளார். இனி, நச்சினார்க்கினியார், “தோழி தாயே
பார்ப்பான்” (கற்பு.52) என்ற சூத்திரம் “யாத்த சிறப்பின்” என்றதனால் துறவு
நோக்குகிறது என்று கூறி, “இதற்குக் கோப்பெருஞ்சோழன் துறந்துழிப்
பிசிராந்தையாரும் பொத்தியாரும் போல்வார் துறந்தாரென்று கூறும்
புறச்செய்யுட்கள் உதாரணம் என்றவா” றென்று கூறுகின்றார். “வியத்தொறும்
வியத்தொறும் வியப்பிறந்தன்று” என்றது, “கோனது பெருமையும்”
என்பதனோடும், “வந்தவனதறிவும்” என்பதனோடும் தனித் தனியே சென்று
இயையும். மரபு - மேம்பாடு. கந்து - பற்றுக் கோடு. இன்றியென்பது
இன்றாகவெனத் திரிக்கப்பட்டது. தன்கோல் இயங்காத் தேயத் துறையும்
இரவலர் புரவலர் ஆகியோர் நெஞ்சுறப் பெறுதலினும் சான்றோர்
நெஞ்சுறப்பெறுதல் அரிதாகலின், அதனைப் பாராட்டினார்.

---

218. பிசிராந்தையார்

     கோப்பெருஞ் சோழனும் பிசிராந்தையாரும் தம்மில் ஒருவரை
யொருவர் கண்ணிற் கண்டு பழகாதே, கேள்வி மாத்திரையே உணர்ச்சி
யொத்த நண்பினராய் ஒழுகிய திறமும், கோப்பெருஞ் சோழன் கூறிய
சொல் பொய்யாகாதவாறு பிசிராந்தையார் போந்த திறமும் கண்டு வியந்த
சான்றோருள் கண்ணகனார் என்பவர் ஒருவர். இவரும் கோப்பெருஞ்
சோழனைச் சூழ இருந்த சான்றோர். பிசிராந்தையார் வந்தபோது அவரை
வரவேற்றுச் சொல்லாடி யின்புற்றவர். இக் கண்ணகனார் உள்ளது
உள்ளவாறும் பாடும் உயர்ந்த புலமைநலம் உடையவர். தலைமக்களிருவர்
ஒருவனும் ஒருத்தியுமாய் மனைவாழ்க்கை நடத்துமிடத்து, தலைமகன்
வினைவயிற் பிரிந்திருந்து மீண்டுவந்து தன் மனைக் கண் தலைவியொடு
கூடி இன்புற்றிருக்கையில் மறுவலும் பிரியவேண்டிய கடமையுடையனானான்.
தலைமகட்கு அவனைப் பிரிந்திருக்கும் துயர் மிகுந்து வருத்திற்று.