பக்கம் எண் :

45

     

வேறு செய்வகை அவட்குத் தெரியவில்லை. தனது காதற்காம மிகுதியை
எடுத்துரைப்பது ஆண்மகற்கமையுமே யன்றிப் பெண்மகட்குப் பெண்மை
தடுக்குமாதலின் கூடாது. எனினும், அவ்வரம்பு கடந்து எடுத்துரைப்பது
தக்கதென எண்ணுகின்றாள்; உரையாவிடின், அவன் பிரிந்தால் தனது
உயிரும் தன்னுடன் பினின்றும் நீங்கிவிடும் என உணர்கின்றாள். அலமரல்
பெரிதாகின்றது. தன் தோழியுடன் இதனை யுசாவுகின்றாள். இதனைக்
கண்ணகனார், “பிரிந்தோர் வந்துநப் புணரப் புணர்ந்தோர், பிரிதல்
சூழ்தலின் அரியதும் உண்டோ, என்றுநாம் கூறிக் காமம் செப்புதும்,
செப்பாது விடினே உயிரொடும் வந்தன்று, அம்ம வாழி தோழி, யாதெனில்
தவிர்க்குவம் காதலர் செலவே” (நற். 79) என்று பாடியுள்ளார். இவ்வாறு
பட்டாங்குப் பாடும் பாவன்மை படைத்த கண்ணகனார், பிசிராந்தையார்
போந்து கோப்பெருஞ் சோழனைக் காணப்பெறாது அவன் வடக்கிருந்து
நடுகல்லானது கண்டு, தாமும் வடக்கிருந்து உயிர் துறந்தது கண்டார்;
வியப்பு கைம்மிகுந்தது. கோப்பெருஞ்சோழனும் பிசிராந்ததையாரும்
வேறுவேறு நாட்டிற்றோன்றிச் சிறந்த சான்றோர்களாயினும், உலகிற்குச்
சான்றாண்மையை நிலைபெறக் காட்டுதற்கு ஒருவழிப்படுவரென்ற சிறப்பை
எடுத்தோத விரும்பினார். அவ்விருப்பம் இப் பாட்டினைப் பயந்தது.

 பொன்னுந் துகிரு முத்து மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்
இடைபடச் சேய வாயினுந் தொடைபுணர்ந்
தருவிலை நன்கல மமைக்குங் காலை
5ஒருவழித் தோன்றியாங் கென்றுஞ் சான்றோர்
 சான்றோர் பால ராப
சாலார் சாலார் பாலரா குபவே.

   திணையும் துறையு மவை. பிசிராந்தையார் வடக்கிருந்தாரைக்
கண்ட கண்ணகனார் பாடியது.

    உரை:பொன்னும் துகிரும் முத்தும் - பொன்னும் பவளமும் முத்தும்;
மன்னிய மாமலை பயந்த காமரு மணியும் - நிலைபெற்ற பெரிய மலை
தரப்பட்ட விரும்பத்தக்க மணியும்; இடைபடச் சேய ஆயினும் -
ஒன்றற்கொன்று இடை நிலம்படச் சேய்நிலத்தின வாயினும்; தொடை
புணர்ந்து அருவிலை நன்கலம் அமைக்குங்காலை - கோவை பொருந்தி
அரிய விலையினையுடைய நல்ல அணிகலன்களைச் செய்யுங்காலத்து;
ஒருவழித்தோன்றி யாங்கு - ஓரிடத்துத் தோன்றினாற்போல; என்றும் -
எந்நாளும்; சான்றோர் சான்றோர் பாலராப - அமைந்தோர் அமைந்தோர்
பக்கத்தராவர்; சாலார் சாலார் பாலராகுப - அமைதியில்லார்
அமைதியில்லார் பக்கத்தராவார்; எ - று.


    சான்றோர் குழுவினைப் புகழுங் கருத்தாகலின், அவர்க்கேற்ற உவமம்
கூறினார்; சாலாதார்க்கும் ஏற்ற உவமம் வருவித்துக் கொள்க. தொடை
புணர்ந்து தோன்றி யாங்கென இயையும்.