விளக்கம்: மணியை மாமலை பயந்த மணியென்றமையின், ஆறு பயந்த பொன்னும் எனவும் கடல் பயந்த துகிரும் முத்து மெனவும் கூறிக் கொள்ளல்வேண்டும். கோவையும் தொடுக்கப் படுவது பற்றித் தொடை யெனப்பட்டது. புணர்ந்தென்னும் வினையெச்சம் தோன்றியாங் கென்னும் வினைகொண்டது. சான்றோர் சான்றோர் பால ராப எனவே, சாலார் எப்பாலராகுப வென்னும் ஐயமறுத்தற்குச் சாலார் சாலார் பால ராகுப வென்றார். ---
219. கோப்பெருஞ் சோழன்
பண்டைநாளில் பேரூர்களிலுள்ள பெருஞ் சதுக்கங்களில் பூதங்கட்குக் கோயில் எடுத்து அதற்கு வழிபாடு செய்தல் மரபு. காவிரிப்பூம்பட்டினம், மதுரை, உரையூர் முதலிய நகரங்களில் சதுக்கப் பூதங்கட்குக் கோயில் இருந்ததாகப் பண்டை நூல்கள் கூறகின்றன. கருவூரும் பண்டை நாளைப் பெருநகரமாதலின் அந் நகர்க்கண் இருந்த பெருஞ்சதுக்கத்துப் பூதத்தின் பெயர் கொண்ட சான்றோர் ஒருவர் உண்டு. அவரைச் கருவூர்ப் பெருஞ் சதுக்கத்துப் பூதநாதனார் என்பர். இப்பெயர் நானூறாண்டுகட்கு முன்பும் மக்களிடையே வழங்கியிருக்கிற தென்பது கல்வெட்டுக்களால் தெரிகிறது. அவர் உரையூரிலிருந்து ஆட்சிபுரிந்த கோப்பெருஞ் சோழன்பால் பேரன்புடையவர். சோழன் வடக்கிருந்து உண்ணா நோன்பு கொண்டு உயிர் துறக்கக் கருதி அதனை மேற்கொண்ட திறத்தைக் கேள்வியுற்றார்.உண்ணா நோன்பால் உடம்பு வாடிப் பேசும் ஆற்றல் இன்றி உயிரிழக்கும் நிலையில் கோப்பெருஞ் சோழன் இருக்குங்கால் பூதநாதனார் அவண் போந்தார்; அங்கே சோழனுடன் சான்றோர் பலர் வடக்கிருத்தலையுங் கண்டார். தாமும் முற்படப் போந்து அவனொடு வடக்கிருக்க இயலாது போனது குறித்துப் பூத நாதனார்க்கு வருத்த முண்டாயிற்று. சோழன் பேச்சு மூச்சின்றி இருக்கும் நிலை அவருள்ளத்தைப் பெரிதும் வாட்டிற்று. கையறவு மிகுந்தது. ஆற்று நடுவேயுள்ள தீவில் மர நிழலில் இருந்து உண்ணா நோன்பால் உடம்பை வாட்டி வடக்கிருத்தலை மேற்கொண்டிருக்கும் வேந்தே! நின் கருத்துப்படியே சான்றோர் பலர் வடக்கிருப்ப அவருள் ஒருவனாய் யானும் முற்பட வாராமையால் என்னோடு புலந்து வாய்பேசாது இருக்கின்றனை போலும் எனக் கல்லுங்கனியும் கருத்தமைந்த இப் பாட்டைப் பாடினார்.
| உள்ளாற்றுக் கவலைப் புள்ளி நீழல் முழூஉ வள்ளூர முணக்கு மள்ள புலவுதி மாதோ நீயே பலரா லத்தைநின் குறியிருந் தோரே. |
திணையும் துறைவு மவை. அவன் வடக்கிருந்தானைக் கருவூர்ப் பெருஞ் சதுக்கத்துப் பூநாதனார் பாடியது.
உரை: உள்ளாற்றுக் கவலை - யாற்றிடைக் குறையுள்; புள்ளி நீழல் - புள்ளிப்பட்ட மரநிழற்கண் இருந்து; முழூஉ வள்ளூரம் உணக்கும் மள்ள - உடம்பாகிய முழுத்தசையை வாட்டும்வீர; |