| நின் குறியிருந்தோர் - நின் கருத்திற்கேற்ப நின்னோடு வடக்கிருந்தார்; பலரால் - பலராதலால்; புலவுதி நீ - அவரோடு சொல்லி வெறுத்தி நீ; எ - று.
யான் பிற்பட வந்ததற்கு என்னைப் புலந்து என்னோடு சொல்லாடா திருந்தாய் நீ என்றும், இவனுடனே வடக்கிருந்தோர்களும் எதிரேற்றுக் கொள்ளாமை நோக்கி நின் குறிப்பிற்கேற்பப் புலந்தார் பலரென்றும் உரைப்பினு மமையும். உள்ளாற்றுக் கவலை யென்பதற்கு வழிக்குள்ளாகிய நாற்றிசையுங் கூடிய இடமென்றுமாம்; கவர்த்த வழிக்குள் என்று உரைப்பாரு முளர். அரசு துறந்து வடக்கிருந்து உயிர் நீத்த உள்ள மிகுதியான் மள்ள என்றார்.
விளக்கம்: கோப்பொருஞ் சோழனுக்குரிய உறையூர் காவிரிக் கரைக் கண்ணதாகையால், ஆற்றிடைக் குறை யென்றது, காவிரியாற்றின் இடைப்பட்ட நிலப்பகுதியாயிற்று. கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த இடம் திருவரங்கத்துக்கு மேற்கிலாதல் கிழக்கிலாதல் உளதாகும். யாற்றிடைக் குறை, துருத்தியெனவும்படும்; ஆற்றின் நடுவேயுள்ள நிலத்தை உள்ளாற்றுக் கவலை யென்றார்; பிறரும் செல்லாற்றுக் கவலை (குறுந்.258) என்பர். கவலை, கவர்த்தவழி, வள்ளுரல், முழுத்தசை. குறி, குறிப்பு; ஈண்டுக் கருத்துணர்த்திநின்றது. மள்ளன், உள்ள மிகுதியுடையவன். வள்ளுரத்தை வாட்டுதலாவது உண்ணா நோன்பு மேற்கொண்டு மழை வெயில் பனி காற்று முதலியவற்றிற்குச் சிறிதும் நெஞ்சுடையாது நிலைபெயராதிருந்து உயிர் நீப்பது. உயிர் நீங்கிய உடம்புகண்டு கூறியது இப்பாட்டு. ---
220. கோப்பெருஞ் சோழன்
கோப்பெருஞ் சோழன் வடக்கிருந்த காலையில் சான்றோராகிய பொத்தியார் தாமும் வடக்கிருக்கச் சென்றார். பொத்தியார் கோப்பொருஞ்சோழனுக்குச் சிறந்த நண்பராவார். கோப்பொருஞ்சோழன் பெயரோடு பொத்தியார் பெயரும் இணைந்தே நாடு முழுவதும் பரவியிருந்தது. பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழனை நினைக்கும் போதெல்லாம் பொத்தியாரையும் உடன்நினைந்து பொத்தில் நண்பிற் பொத்தி (புறம்.212) என்று பாராட்டுவர் சோழன் பிரிவாற்றாது பொத்தியாரும் வடக்கிருக்கக் கருதியது கண்ட கோப்பெருஞ்சோழன் கருவுற்றிருக்கும் நின் மனைவி கருவுயிர்த்தபின்பு வருக என அன்பாற் பணிக்கவே, அவர் திரும்பி உறையூர்க்கு வந்தார். கோப்பெருஞ்சோழனில்லாத உறையூர் அவர்க்குப் பாழ்பட்டுத் தோன்றிற்று. அவன் இருந்த அரண்மனை பொலிவிழந்து அவருக்கு அழுகையை யுண்டு பண்ணிற்று. பலயாண்டுகளாகப் பெருஞ் சோறளித்துப் பேணிப் பாதுகாத்து வந்த யானை இறந்ததாக, அஃது இருந்த இடத்தைக் காணும் அன்புடைய பாகன் அழுது புலம்புவதுபோல, கோப்பெருஞ்சோழன் இல்லாத இந்த உறையூர் மன்றத்தைக் கண்டு யான் கலங்கிக் கையற்றுப் புலம்புகின்றேன் என்ற கருத்தமைந்த இப்பாட்டைப் பாடி வருந்தினார். |